Sunday, December 11, 2011

வீழ்வேனென்று நினைத்தாயோ? IV

பல்லாயிரக்கணக்கான கி.மீட்டர்களுக்கு அப்பால் இருந்து புலம்பெயர்ந்த இந்த ஈழத்தின் உறவுகள், தங்கள் உறவுக்காக வாய்விட்டுக் கதறிய கதறல் சத்தம், அந்த நாடுகளின் மலைகளில் மோதி எதிரொலித்து, சமவெளி எங்கும் வேதனை உணர்வு களைப் பெருக்கெடுக்கச் செய்தன. இது உலக சமுதாயத்தின் கவன ஈர்ப்பாகவே அமைந்தது. இந்தத் தாக்கம் மெனிக் ஃபார்ம் முகாமிலும் மெள்ள எதிரொலித்து, பின்னர் வேகம் எடுக்கத் தொடங்கியது. சர்வ தேச ஊடகங்கள் சிலவற்றை அனுமதிக்க வேண்டிய அவசியம் இதன் மூலம், இலங்கை அரசுக்கு ஏற்பட்டது.


சிறைபட்ட எவரும் விடுதலை பெறுவ தில் தீவிரமாக இருப்பார்கள். இதில் தப்பித்துச் செல்லுதலும் ஒன்று. தப்பித்துச் செல்லுதல் பற்றிய திட்டங்கள், மெனிக் ஃபார்ம் முகாமிலும் பிறந்துகொண்டே இருந்தன. இதில் வேடிக்கை என்னவெனில், பெண்கள்தான் கூடுதலாகத் தப்பிக்க முயற்சி செய்துகொண்டு இருந்தார்கள். பெண்களின் இந்த மன நிலைக்குக் காரணம், எப்படியாவது தங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான்.
நாளடைவில் குழந்தைகளின் பாதுகாப்புபற்றிய அச்சம், முகாம்வாசிகளிடம் இன்னும் கூடுதலானது. குழந்தைகளைக் கொல்லும் சதி நடப்பதாக முன்னர் எழுந்த சந்தேகங்கள் முகாம் முழுவதும் பரவின. குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்ற, தப்பிச் செல்லும் முடிவுக்குப் பலர் வந்தனர். இது குறித்த திட்டங்கள் சிலவும் இவர்களிடம் இருந்தன. திட்டங்கள் அனைத்தும், மரணத்தோடு விளையாடுதலைப்போன்று இருந்தது. குழந்தைகளைச் சுமந்துகொண்டு  தப்பித்தல் அத்தனை எளிதானது இல்லை. சுருள் கம்பிகள், அடுக்கு அடுக்காக நீண்டு செல்லும் முள் கம்பிகள் கூட்டத்தை முதலில் கடக்க வேண்டும். இதன் பின்னர், ராணுவத்தினரின் கழுகுக் கண்களில் இருந்து தப்பிக்க வேண்டும். இதைத் தவிர, பல்வேறு கோபுரக் கண்காணிப்புகளும் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் கடந்து எப்படித் தப்பிப்பது? பல மாதங்கள் புயலில் அலைக்கழிந்து போன, சிறு படகைப்போல, ராணுவத்தின் விரட்டுதலில் ஓடி ஓடிக் களைத்து, பின்னர் முள்ளி வாய்க்கால் நெருப்பில் இருந்து, உயிர் பிழைத்தவர்கள் இவர்கள். மனதள வில் தப்பிவிடலாம் என்ற உறுதி இருந்தா லும், பலத்தை உடல் முற்றாக இழந்து இருந்தது.
ஆரம்பத்தில் இருந்த நிலையில் இருந்து, மெனிக் ஃபார்ம் முகாமிலும் சிறிது மாற்றம் ஏற்படத் தொடங்கி இருந்த காலம் அது. முகாம்வாசிகளைப் பார்க்க வரும் உறவுகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது. பெருகி வந்த மக்கள் கூட்டத்தை, ஒரு கட்டத்தில் ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆத்திரம், கோபம், விசும்பல், அழுகுரல் என்ற வேதனைத் துயரம், முள் வேலியைச் சுற்றி, நிரம்பி வழிந்துகொண்டே இருந்தது. ‘முள்ளி வாய்க்காலில் இறந்தவர்களைப்போலத்தானே நமது உயிரும், அதுவும் இங்கேயே போனால் போகட்டுமே’ என்ற முடிவுக்கு வந்தவர்களைப்போலத் தெரிகிறார்கள்.
வெகு தொலைவில் இருந்து வந்த இவர்கள், நாள் கணக்கில் காத்து இருந்தார் கள். வேறு வழி இல்லாமல் முள்வேலிகளைச் சுற்றி வட்டமிடத் தொடங்கிவிட் டார்கள். இந்தச் சூழலில் முகாம் வாசிகளும், தங்கள் உறவினர்கள் அல்லது, தெரிந்தவர்கள் யாராவது வந்திருக்கிறார்களா என்ற ஏக்கத்தோடு முள்வேலியின் ஓரங்களில் காத்துக்கிடப்பதை வழக்கமாகக் கொண்டுவிட்டனர்.
நாட்கள் செல்லச் செல்ல… முள்ளி வாய்க்கால் பேரழிவு, உலக மனசாட்சிக்குள் புகுந்துவிட்டது. மனித உரிமை அமைப்புகள், ஐக்கிய நாடுகளின் சபையில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி, கண்டனங்களைத் தெரிவித்தன. ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் மீதும், கண்டனங்கள் எழுந்தன. இதைப்போலவே இந்தப் பேரழிவு, புலப்பெயர்வில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டது. ஈழத் தமிழர்கள், பல ஆண்டுகளுக்கு முன்னரே, இன்றைய புவிப் பந்தின் எல்லா நாடுகளிலும், குடி உரிமை பெற்றுவிட்டனர். தங்கள் பண்பாட்டு அடையா ளங்கள், எதனையும் சிதைத்துக்கொள்ளா மல், அங்கு உள்ள அரசியல் கட்சிகளில் முக்கியத் தலைவர்களாகவும் வளர்ச்சி பெற்று வருகின்றனர். மருத்துவம், சட்டம், கல்வி, தொழில், வியாபாரம், தொழில்நுட்பம் என்று அனைத்து நிலைகளிலும் தங்கள் அடையாளங்களை நிலைநிறுத்திக்கொண்டு விட்டனர்.
கபடதாரியான ராஜபக்ஷேவுக்கு, மெனிக் ஃபார்ம் முகாமில், ஒரு சிறு பகுதியைக் காட்சி ஊடகங்களுக்கான தனி அரங்கமாக மாற்றிக்கொள்வதில் எந்தவிதமான சிரமமும் இல்லை. அவலமும் வேதனையும் நிறைந்து விம்மி விம்மி அழும் முகங்கள் மூடிமறைக் கப்பட்டு, மகிழ்வும் ஆறுதல் அடைந்து விட்டதாகவும் காட்டிக்கொள்ளும் நடிப்பு முகங்கள், ஊடகங்களுக்காக முகாமில் தயாரிக்கப்பட்டன. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. மனித உரிமைக் குற்றங்களில் இருந்து, இலங்கை அரசு தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பது முதல் காரணம். மெனிக் ஃபார்ம் முகாம் அந்நிய நாடுகளின் உதவியைப் பெற்றுத் தரும் அட்சய பாத்திரம். பெற்ற உதவிகளால், முகாமின் அவலங்கள் அனைத்தும் மாற்றப்பட்டு, எல்லோரும் நலமுடன் வாழ்வதான ஊடகக் காட்சிகளை, காட்ட வேண்டிய அவசியம் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுவிட்டது என்பது இரண்டாவது காரணம். இதன் மூலம் ராஜபக்ஷேவின் ஆட்சியால், புதிய வருவாயைத் திரட்டிக்கொள்ள முடியும். தமிழ் மக்களின் அவலங்களையும் மரணங்களையும்கூட விற்பனை செய்து, வருவாய் ஆக்கிக்கொள்ளவும் முடியும்.
இந்தப் புதிய சூழலில், முகாம் வாசிகளை அடிப்பது, சுடுவது என்பது ராணுவத்துக்கு இயலாமல் போய்விட்டது. முகாமில் ஊடகங்களுக்குத் தயாரித்துக் கொடுக்கும் பாவனைக் காட்சிகளைப்போலவே, ராணுவமும் அடிப்பதைப்போலவும் சுடுவ தைப்போலவும் பாவனைகளைச் செய்யத் தொடங்கின. ராணுவத்தின் பாவனைகளும் அதற்கான காரணங்களும் மக்களுக்கு எளிதில் புரிந்துவிட்டது. ராணுவம் நடத் தும் பாவனைகளைப்போலவே மக்களும் ஓடுவதுபோலவும், பயப்படுவதுபோலவும் பாவனைகளை செய்யத் தொடங்கினர். அப்போதுதான் நெஞ்சத்தை நடுங்க வைக்கும் அந்தச் செயல்கள் நிகழத் தொடங்கின. தாங்கள் தப்பிக்க முடியாது என்பதை அனுபவத்தில் அறிந்துகொண்ட பெண் மக்கள் சிலர், தங்கள் குழந்தை களுக்காக, அந்தச் செயல்களை செய்யத் துணிந்துவிட்டனர்.
கூடுதலாகி வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை, புதிய வாய்ப்புகளை முகாம்வாசிகளுக்கு உருவாக்கித் தந்தது. முகாம்வாசிகளைக் கண்காணிப்புக்கு இடையே நின்று பார்க்கும் விசேஷப் பகுதிகள் என்றில்லாமல், முள்வேலிக்கு அப்பால் எல்லா இடங்களில் இருந்தும் பார்க்கும் வாய்ப்புகள் இதனால் கிடைத்தன. இந்த வாய்ப்புகள் மூலம் உறவுகளை வேலிக்கு அருகில் சென்று பார்க்கலாம். வெளியில் நிற்பவர்கள், தான் கொண்டுவந்த பொருட்களையும் பிரத்யேக ஏற்பாட்டில் கொடுத்து அனுப்பலாம். தேவைப்படுமாயின், இவர் களைத் தப்பிக்கவைத்துச் செல்லவும் உதவலாம். முகாம்வாசிகளுக்கு இது அரசாங்கம் வழங்கிய சலுகை இல்லை. லஞ்சம் அமைத்துக்கொடுத்த தனிப் பாதை. இதற்கெல்லாம் இயந்திரத் துப்பாக்கி களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். ஆட்களைப் பார்க்க, பொருட்களைக் கொடுக்க, முகாம்வாசிகளை எந்தப் பிரச்னையும் இல்லாமல் உடன் அழைத் துச் செல்ல… என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
இந்தச் சூழலில்தான், அந்த நிகழ்வும் நடந்தது. ஆரம்பத்தில், இந்தச் செயலை அந்தப் பெண் ஏன் செய்தாள் என்பது யாருக்கும் புரியவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் முள்வேலிக்கு வெளியே, பெண் ஒருத்தி தன் குழந்தைகளைத் தூக்கி வீசி எறிந்துவிட்டாள். எதிர்பாராத இந்த திடீர் செயலைப் பார்த்தவர்கள் துடித்துப்போனார்கள். குழந்தை முள்வேலியில் விழுந்துவிடுமோ என்று பதற, வெளியே நின்றுகொண்டு இருந்த அவளின் உறவினர் கள் அந்தக் குழந்தையை, அப்படியே  எச்சரிக்கையுடன் கைகளில் பிடித்துக் கொண்டார்கள். குழந்தையின் அழுகை கூட யாருக்கும் கேட்கவில்லை. குழந்தை, உயிர் பிழைத்துக்கொண்டது.
இந்தச் செய்தி மறைந்தும் ஒளிந்தும் முகாம் முழுவதும் பரவத் தொடங்கியது. மற்ற அன்னையரும் இதைப்போன்றே முயற்சிக்கத் தொடங்கினார்கள். இதில் இரண்டு அபாயங்கள் இருந்தன. கண்காணிப்பில் ஈடுபட்ட ராணுவத்தினர் பார்வையில் விழுந்துவிட்டால், அதைவிட ஆபத்து வேறு எதுவுமே இருக்க முடியாது. உயிருடன் குழந்தையைக் கொல்வதற்கு ஒப்படைத்ததைப்போல் ஆகிவிடும் இது. தூக்கி எறியப்படும் குழந்தைகள் தவறிப்போய், முள்வேலிக்குள் விழுந்துவிட்டால்? மனப் போராட்டங்களுக்கு இடையேதான், தாய்மார்களால் இதற்கான முடிவை எடுக்க முடிகிறது.
உறவினர்கள் வெளியே இருந்தால், குழந்தைகளை அவர்கள் கையில் போய்ச் சேருமாறு தூக்கி எறியலாம். உறவினர்கள் யாரும் இல்லை என்றால், அந்தத் தாயின் நிலைமை என்ன? கடைசியில் இதற்கான வழிமுறைகளையும் கண்டுபிடித்தார்கள். குழந்தையின் இடுப்பில் அதைச் சேர்ப்பிக்க வேண்டிய முகவரியைக் கட்டி, குழந்தையை யாரிடமாவது எறிந்துவிட்டால், இரக்கப்பட்டு அவர்கள் தங்கள் உறவினர்களிடம் சேர்த்துவிட மாட்டார்களா?
- விதைப்போம்…
நன்றி: சி.மகேந்திரன் & விகடன் 




வீழ்வேனென்று நினைத்தாயோ? III


கடத்தப்பட்ட தலைமுறை (Stolen Generation) என்னும் சொல், மனதுக்குப் பேரதிர்ச்சியைத் தருகிறது. ஆஸ்திரேலியச் சமூகத்தின் மன ஆழத்தில் மறைந்து நின்று, இன்று வரை குற்ற உணர்வில் துடிக்கவைக்கும் சொல் இது. தாயிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்ட குழந்தைகளின் அலறல் சத்தமும், களவாடிச் செல்லப்பட்ட குழந்தையின் பிரிவுத் துயர் சுமந்த தாய்மையின்  சுட்டெரிக்கும் வெப்பமும், இந்தச் சொற்கள் வழியாக காலப் பெரு வெளியில் வந்து சேர்ந்து, இன்னமும் அனல் குறையாமல் இருக்கின்றன.
அபார்ஜினிஸ், ஆஸ்திரேலியத் தொல்குடிகளின் மூத்த இனம். 25,000 ஆண்டு கால வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுஉள்ளது இது. ஆஸ்திரேலியக் கண்டத்துடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாத பிரிட்டிஷார், 300 ஆண்டுகளுக்கு முன் கொடும் குற்றம் புரிந்த ஆங்கிலேயக் கைதிகளைக் கொண்டுவந்து சேர்க்கும் திறந்த வெளிச் சிறைச்சாலையாகவே ஆஸ்திரேலியாவை மாற்றிக்கொண்டனர். குற்றப் பின்னணியையும் கொலை வெறியையும்கொண்ட ஆங்கிலேயர், தலைமுறை தலைமுறையாக அபார்ஜினிஸ் மக்களுக்கு இழைத்த கொடுமைகளை வரலாறு நெடுகிலும் சொற்களால் அழுதாலும் தீராது.
அபார்ஜினிஸ் மக்களின் கூட்டு வாழ்க்கை, பல்வேறு மேன்மைகளைக் கொண்டது. உண்ணுவது முதல் நீர் நிலைகளுக்குச் சென்று நீர் அருந்துவது வரை அனைவரும் ஆடிப் பாடி, கூட்டமாகக் கொண்டாடுவதுதான் வழக்கம்.  இதைக் கவனித்து வைத்திருந்த ஆங்கிலேயர்களின் கொடிய மனம், இந்தக் கூட்டு வாழ்க்கையைவைத்தே அவர்கள் அனைவரையும் கூட்டமாகக் கொலை செய்யும் திட்டத்தை வகுத்துக்கொண்டது. இதற்காக இவர்கள் உருவாக்கிய வஞ்சகச் செயல், எந்தக் காலத்திலும் மன்னிக்கக்கூடியது அல்ல. நீர் நிலைகளில் கொடிய விஷத்தைக் கலந்துவைத்தார்கள். கபடம் எதுவுமே தெரியாத இந்த மக்கள் கூட்டம், நீர் அருந்திய இடத்திலேயே கூட்டம் கூட்டமாகச் செத்துக்கிடந்தார்கள். இந்தப் பூர்வகுடிகளை மதுப் பழக்கத்துக்கு அடிமையாக்கும் தந்திரம் பின்னர் உருவாக்கப்பட்டது.
ஆங்கிலேயரின் பழக்கவழக்கங்கள் எதனையும் பார்த்து அறியாத இந்த மக்களுக்கு, இங்கிலாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ரம் போன்ற மது வகைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இலவசங்களுக்கு அடிமை யான இந்த மக்கள், இன்னும் சில நாட் களில் மதுவில் விஷம் கலந்து தாங்கள் கொல்லப்படப் போகிறோம் என்பதை அறியவில்லை. கொடிய விஷம்வைத்துத்தான் தங்கள் கொல்லப்பட்டோம் என்ற உண்மைகூடத் தெரியாமலேயே, அந்த மக்கள் செத்துப்போனார்கள். 1870-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஆங்கிலேயர் எடுத்த கணக்கின்படி அபார்ஜினிஸ் மக்களின் எண்ணிக்கை 3 லட்சம். 2008-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசாங்கம் வெளி யிட்ட மக்கள் தொகைக் கணக்கில், அபார் ஜினிஸ் மக்கள் 2 லட்சமாக இருக்கிறார் கள். அந்தப் பூர்வகுடி இனப் பெருக்கம் அடையாமல் இருக்க, எந்தக் கொடிய செயலையும் செய்யத் தயாராக இருந்தது ஆஸ்திரேலியாவின் நாகரிக சமூகம்.
ஓர் இனத்தை அழித்து, அந்த மண்ணில், தன் அதிகாரத்தை நிறுவிக்கொள்ள விரும்பும் யாரும் குழந்தைகளைக் கொலை செய்வதில் இருந்தே, தங்கள் அழிவுப் பணிகளைத் தொடங்கிவிடுகிறார்கள். ஆஸ்திரேலியாவில் அபார்ஜினிஸ் இனத்தை அழிக்க நினைத்த ஆங்கிலேயருக்குக் குழந்தைகளைக் கொல்வது பாவச் செயல் என்ற உணர்வு ஏற்பட்டு இருக்க வேண்டும். இதற்காக வேறு ஒரு தந்திரச் செயலை உருவாக்கிக்கொண்டார்கள். மழலைக் கொலையைவிட, இது அபாயம் நிறைந்த மனக் கொலையாகத் தெரிகிறது. இந்தக் கொடிய செயல்தான், தலைமுறைக் கடத்தல் என்று அழைக்கப்படுகிறது. இயற்கையோடு மற்றும் ஓர் இயற்கையாக வாழ்ந்து வந்த, அபார்ஜினிஸ் தாய்மார்களிடம் இருந்து அவர்களது குழந்தைகளைப் பிரித்து, கடத்திச் செல்லும் மாபாதகச் செயலை இதன் மூலம் தொடங்கிவைத்தார்கள். இதற்கு ஆங்கிலேயர் கூறிய சமாதானம் மிகவும் வேடிக்கையானது. அடுத்த தலைமுறையை நாகரிகப்படுத்தும் செயல் இது என்று கூறிக்கொண்டார்கள். பெற்ற தாயிடம் இருந்து உயிரைப் பறிப்பதைப்போல, குழந்தைகளைப் பறித்து எடுப்பதுதான் நாகரிகமா?
இந்தக் கொடிய செயலுக்கு ஆங்கிலேயரின் ஆஸ்திரேலிய அரசாங்கம் 1869-ம் ஆண்டு, தனிச் சட்டம் இயற்றிக்கொண்டது. இதில் இன்னொரு வேதனை என்னவென்றால், இந்தச் சட்டம், 1969 வரை ஆஸ்திரேலிய மண்ணில் அமலில் இருந்தது. உலக அளவில் பெரிய போராட்டங்கள் மனித உரிமை அமைப்புகளால் நடத்தப்பட்டன. ஆஸ்திரேலியாவில் உள்ள சில அரசியல் கட்சிகளும் கடும் விமர்சனங்களை முன் வைத்த பின்னர்தான், அந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டது. 2008-ம் ஆண்டு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஒன்றில், ஆஸ்திரேலியாவின் பிரதமர் கெவின் ரூட் இந்தத் தலைமுறைக் கடத்தலுக்கான தலைமுறை மன்னிப்பைக் கேட்டுக்கொண்டார்.
குழந்தைகளை அழிப்பதன் மூலம் உலகில், பல இனங்கள் அழிக்கப்பட்டு உள்ளன. தலைமுறைக் கடத்தல் மூலம் அபார்ஜினிஸ் இன அழிப்புக்கு, சதி வகுக்கப்பட்டதைப்போலவே, யூத இனத்தை முற்றாக அழிக்க நினைத்த ஹிட்லர், யூதக் குழந்தைகளைக் கொலை செய்யும் திட்டத்தை உருவாக்கினான். ஹிட்லர் கொன்று முடித்த யூதக் குழந்தைகளின் எண்ணிக்கை 10 லட்சம். மெனிக் ஃபார்ம் முகாமிலும் இதனைப்போன்ற, குழந்தைகளை அழிக்கும் சதித் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது என்ற செய்தி, முகாமில் காட்டுத் தீயைப்போலப் பரவத் தொடங்கியது. ஈழ மக்கள் படிப்பாளிகள், எதிர்காலத்தை எளிதில் ஊகித்துக்கொள்ளும் திறன் கொண்டவர்கள். இவர்களுக்கு முகாமில் கூறப்பட்ட சில விதிமுறைகள், சந்தேகத்தைத் தோற்றுவித்தது. நோயுற்ற குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால், தாயிடம் இருந்து தனியே பிரித்து எடுத்துச் சென்றுதான், சிகிச்சை அளிக்க முடியும் என்று முகாம் அதிகாரிகள் கூறினார்கள். இதற்கு சொல்லப்பட்ட காரணம், நம்பக் கூடியதாக இல்லை. ”தொற்றுநோய் தாய்க்கும் பரவிவிடும் அபாயத்தால்தான் இந்த உத்தரவு” என்று தாய்மார்களைச் சமாதானப் படுத்தினார்கள். ஈழத் தாய்மார்களைப்பற்றி இந்த அக்கறை திடீர் என்று இலங்கை ஆட்சியாளர்களுக்கு எங்கு இருந்து வந்தது? இது சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. குழந்தைகளை அழிப் பதன் மூலம் தமிழ் இனத்தை அழிக்கும் நடவடிக்கைதானோ என்னும் மனச் சந்தேகம் அவர்களிடம் உறுதி பெற்றுவிட்டது. எச்சரிக்கை அடையத் தொடங்கிவிட்டார்கள். செவி வழியாகப் பல தகவல்கள், இளம் அன்னையரிடம் வந்து சேர்கின்றன. அனைத்தும் குழந்தைகளைக் கொன்று முடிக்கும் திட்டங்களாகவே தெரிகின்றன. முகாம் பெரிதும் பதற்றம் அடைகிறது. ஒவ்வொருவரும் தங்கள் குழந்தையைக் காப்பாற்றும் முயற்சி குறித்து, யோசிக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.  வயிற்றுப்போக்கால் மகனின் உடல்நிலை மோசம் அடைந்து வரும் சூழலால், அந்தப் பெண்ணுக்குப் பரபரப்பும் பதற்றமும் ஏற்படுகிறது. இருந்த நம்பிக்கையையும் அவள் இழந்துவிடுகிறாள். ஆனால், மின்னல் கீற்றுப்போல ஒரு நம்பிக்கை மனதில் தோன்றுகிறது. வாடி, வதங்கிய குழந்தையைத் தோளில் தூக்கிப்போட்டுக்கொள்கிறாள். குழந்தையைக் காப்பாற்ற ஏதாவது வழி கிடைக்கிறதா என்று ஆராய்கிறாள்.
அனல் வீசும் பகல் பொழுதில் குழந்தை களைத் தோளில் சுமந்த இளம் பெண்கள், அமைதியற்று அலைந்துகொண்டு இருக் கிறார்கள். கால் இழந்து காயம் ஆறாத குழந்தைகள் ரணமான முகத்திலும், உடலிலும் எரிச்சல் கண்டு கத்திக் கத்திச் சோர்ந்துபோன குழந்தைகள், ஜுரத்தால் தலைக் கொதிப்பு எடுக்க, முனகலை மட்டும் வெளிப்படுத்தும் குழந்தைகள் என்று எத்தனை துயரம் தோய்ந்த உலகம் அது. இதே நேரத்தில் முள் கம்பிகளுக்கு வெளியே ஒரு கூட்டம் பதற்றம்கொண்டு நிற்கிறது. இவர்கள் போர் நடக்காத பகுதியில் வாழ்ந்த, இன்றைய முள்வேலி முகாம்வாசிகளின் உறவினர்கள். தங்கள் தாய், தந்தை, அண்ணன், தம்பி என்று யார் இறந்துவிட்டார்கள்? யார் உயிருடன் இருக்கிறார்கள்? யார் காயப்பட்டுக் கிடக் கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள இயலாது, பல மாதங்கள் நிம்மதி அற்று வாழ்ந்தவர்கள். முள்வேலிக்குள் இருப் பவர்களின் பெயர் சொல்லி, உறவு சொல்லி, முகவரி கொடுத்து, தங்கள் அடையாள அட்டை முதல் அனைத்தையும் காட்டித் தான் யாரையும் அங்கு பார்க்க முடியும். கண்காணிப்பு கேமராக்கள், கண்காணிப்புக் கோபுரங்களில் இருந்து ஒளிந்து பார்க்கும் கண்கள், இயந்திரத் துப்பாக்கிகளைக் கையில் பிடித்தபடி நிற்கும் உலகம் அறியா, ராணுவ விடலைகள், அடித் தொண்டையால் சிங்களம் பேசி, தமிழ் மக்களை அவமானப் படுத்திவிட்டதாக நிம்மதிப்பட்டுக் கொள்ளும் அதிகார ஆணவங்கள், அனைத்தையும் அவர்கள் கடந்து செல்ல வேண்டும்.
கையில் செல்பேசி, கேமரா எதையும் தங்கள் உறவுகளைச் சந்திக்கும்போது எடுத்துச் செல்லக் கூடாது. விலை மதிப்புள்ள இந்தப் பொருட்களை யாரிடம் பாதுகாப் பாக ஒப்படைத்துச் செல்வது என்பதைப்பற்றியும் கவலைகொள்ள வேண்டியது இல்லை. முகாம் அமைக்கும் பணிகள் ஆரம்பமானபோதே, சிங்கள மக்கள் தங்கள் வியாபாரக் கடைகளையும் அங்கு தொடங்கிவிட்டார்கள். ஒரு மணி நேரம் செல்போனைப் பாதுகாக்க 50, கேமராவுக்கு 100 என்று கட்டணப் பட்டியல் தயாரித்து, அங்கு வியாபாரம் மும்முரமாக நடக்கத் தொடங்கிவிட்டது. இந்த வியாபாரிகள் யார்? இவர்களுக்கு இந்தச் சலுகை எப்படிக் கிடைத்தது? இவர்கள் உள்ளே துப்பாக்கி ஏந்தி இலங்கை தேசத்துக்குப் பாதுகாப்பை வழங்கிக்கொண்டு இருப்பதாகத் தோற்றம் காட்டும், ராணுவத்தின் பினாமியாகக்கூட இருக்கலாம்.
ஏழு மலைகள், ஏழு கடல்களைத் தாண்டி வந்தவர்கள் என்று புராதனக் கதைகளில் கூறப்படுவதைப்போல, வெகு தூரத்தில் இருந்து இந்தக் காட்டுப் பகுதியைத் தேடிக் கண்டுபிடித்து வந்து சேர்ந்தவர்கள் இவர்கள். இன்னமும் சில நிமிடங்களில் உயிர் பிழைத்த உறவுகளைப் பார்க்கப் போகிறார்கள். கட்டிப்பிடித்துக் கதறி அழுது, தேங்கி இருக்கும் துயரம் அனைத்தையும் வெளிப்படுத்த வேண்டும். உணர்வுகளின் கொந்தளிப்புடன் வரிசையோடு வரிசையாகக் காலடிகளை எடுத்துவைக்கிறார்கள். உறவுகளைச் சந்திக்கும் அபூர்வ தருணங்களும் கிடைக்கத்தான் செய்கின்றன. இரும்புக் கம்பிகளின் தடுப்புக்கு அந்தப் பக்கத்தில் உறவுகளும் தடுப்புக்கு எதிர்ப் பக்கத்தில் இவர்களும் சந்திக்கும் 15 நிமிடங்கள் இவை. ராணுவத்தினர் சுற்றி நிற்பார்கள். அனுமதிக்கப்பட்ட சில பொருட்களை இயந்திர மனிதர்களைப்போல கை நீட்டிக் கொடுக்கலாம். பேச வாய் துடிக்கும், வார்த்தைகள் வெளிவராமல் மனதுக்கு உள்ளேயே, அவை உதிர்ந்து விழுந்துவிடும். கண்ணீர் கொப்பளித்து வெளியே வரத் துடிக்கும். துப்பாக்கி முனை முதுகை அழுத்த, வார்த்தைகளைப்போலவே இவையும் மனதுக்குள் வடிந்து இறங்கிவிடும். சீ… என்ன இது கேவலப்பட்ட வாழ்க்கை? என்று மனதுக்குள் சொல்லிக்கொள்வதைத் தவிர, அங்கு வேறு எதுவும் செய்துவிட முடியாது!
- விதைப்போம்…
நன்றி: சி.மகேந்திரன் & விகடன் 













வீழ்வேனென்று நினைத்தாயோ? II

அது ஒரு முள்வேலி முகாம். கவச வாகனங்களும் ஹெலிகாப்டர்களும் முகாமைச் சுற்றி, வானத்திலும் பூமியிலும் வளையமிட்டு உறுமிக்கொண்டு இருக்கின்றன. காட்டு மரம், செடி, கொடிகளின் நிறங்கள், இந்த இயந்திர உறுமல்களின் உடலில் வரையப்பட்டுள்ளன. அச்சமும் அதிர்ச்சியும் தரக் கூடிய, இன்றையஉலகில் பெரும் எண்ணிக்கையிலான மக்களை அடைத்துவைக்கும் கொட்டிலான மெனிக்ஃபார்ம் இவ்வாறாகத்தான் தோற்றம் தருகிறது. என்னதான் இலங்கைஅரசு மூடி மறைத்துவைக்க முயற்சி செய்தாலும், இது இன அழிப்பை மறைவிடத் தந்திரமாகக்கொண்ட சித்ரவதை முகாம் என்பதை இன்று உலகம் அறியும்.
அடர்ந்த காடு ஒன்றின்மையப் பகுதியைத்தான் தேர்வு செய்து இருக்கிறார்கள். மரங்கள் வெட்டப் பட்டு,  அவசர கதியில் அமைக்கப் பட்டமுகாம். இலங்கைத் தீவின் வடக்குப் பகுதியில், தலைநகர் கொழும்பில் இருந்து 250 கி.மீ. தூரம்… வவுனியாவில் இருந்து 35 கி.மீ. தொலைவு. மொத்தம் 13 பகுதிகளில் முகாம்கள் அமைத்து, முள்ளி வாய்க்கால் பேரழிவில் சிக்கிச் சிதைந்த மக்களுக்கு, இடைக் காலத்தில் தங்கும் வசதியை உருவாக்கித் தர வேண்டும் என்று, ஐக்கிய நாடுகள் சபையின்அகதி கள் மற்றும் மறுவாழ்வுத் துறை வழிகாட்டி இருந்தது. ஆனால், இலங்கை அரசு, தந்திரமாக 5 முகாம்களை மட்டுமே அமைத்தது. இதுவும் இன அழிப்புக்கான மிக மோசமான தந்திரம்!
முகாமின் பரப்பளவு 0.8 சதுர கி.மீ. யாழ்ப்பாணத்தில், ஒரு சதுர கி.மீ-க்கு 2,000 மக்கள் வசிக் கிறார்கள். மக்கள் நெருக்கம் மிகுந்த தலைநகர் கொழும்பில், சராசரி யாக ஒவ்வொரு கி.மீ-க்கும் 14,000  மக்கள் வசிக்கிறார்கள். ஆனால், ஒரு கி.மீ-க்கும் குறைவான பரப்பளவைக்கொண்ட மெனிக் ஃபார்ம் முகாமில் 2,84,000 மக்கள் அடைத்துவைக்கப்பட்டு உள்ள னர். இது சர்வதேச விதிமுறைகள் அனைத்தையும் நிராகரிக்கும் பாசிச நடைமுறை.
முகாமின் ஐந்து பகுதிகளும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்று இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் தனித் தனியான முள்வேலி அடுக்குகள். ராணுவ வீரர்களின் 24 மணி நேரக் கண்காணிப்பு. நவீனத் தொழில்நுட்பங்கள் அனைத்தும்கொண்டு, உருவாக்கப்பட்டு இருக்கிறது. யாரும் தப்பித்துவிடக் கூடாது என்பதைவிட, நடப்பது எதுவுமே வெளி உலகுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையுடன் அமைக்கப்பட்ட முகாம் கள். தங்கும் கூடாரங்களைப் பொறுத்தவரை, மாட்டுக் கொட்டில்களைப்போன்ற, மனிதக் கொட்டடிகள் என்றே கூற வேண்டும். குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, குளியல் அறை வசதி, தொற்றுநோய்கள் பரவாமல் இருக்கும் சுற்றுப்புறச் சுகாதார வசதி என்று சகல மனித உரிமைகளும் மறுக்கப்பட்ட முகாம்கள்.
போர் நடந்த பெருந் துயரை மார்பில் சுமந்த பெண்ணின் மனத் துயர் ஆழத்தை, இதுவரை யாருமே கண்டு அறிந்தது இல்லை. இதிகாசங்களி லும் காப்பியங்களிலும் தேங்கி நின்று, இவை இன்று வரை நம்மை அதிர வைத்துக்கொண்டு இருக்கி றது. கணவனை இழந்த மகளிரின் விரக்தி, பெரும் மூச்சால் வெந்து வெந்து தணியும் வெப்ப மண்டல மாகிக்கொண்டு இருக்கி றது மெனிக்ஃபார்ம் சித்ர வதை முகாம். இன்று போர் நடந்துமுடிந்து உள்ள இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டும், 1,20,000 இளம் தமிழ் விதவைகள் இருப்பதாகக் கூறப்படுகி றது. இதில் உடல் ஊனமுற்றவர்கள் 30,000 பேர்.
பெண் ஒருத்தியின் கதை ஒன்று நம்மை வந்து அடைகிறது. வானில் இருந்து விழுந் தும் பூமியில் இருந்து வெடித்தும் சிதறிய குண்டுகள் எழுப்பிய புகைப் போர்வையில் அவள் கணவன் காணாமல் போய்விட்டான். கையில் மிச்சமாகக் குழந்தை மட்டும்தான் இருக்கிறது.  ஓர் ஆண் குழந்தை. உயிர் பிழைக்க, பெருங்கூட்டம் ஒன்று ஓடிக்கொண்டு இருக்கிறது. கூட்டத்தோடு கூட்டமாக நகர்கிறாள். சிதறிய உடல்கள், உயிர் பிரிந் தும் பிரியாமலும் அரற்றிக்கிடக்கும் அவலங்கள் என்று அவள் காலடி எடுத்து வைத்த இடங்களில் கண்ட கொடுங்காட்சி களால், அவளுக்கு எந்தவிதமான பதற்றமும் ஏற்படவில்லை. அவளது உணர்வுகள் அனைத்தும் மரத்துப்போய்விட்டன. தோளில் குழந்தையைச் சுமந்துகொண்டு, கைப்பை ஒன்றுடன், ஓர் இயந்திரத்தைப் போல அவள் நடக்கத்தொடங்கிவிடுகிறாள்.
முள்ளி வாய்க்காலில் இருந்து 8 கி.மீ. நடந்திருக்க வேண்டும். அங்குதான் ராணுவத் தின் சோதனைக் கூடம். அருவருப்பு மிகுந்த பரிசோதனை. பெண் பிள்ளைகள் அவமானத் தால், கூசிக் குறுகிப் போய்விடுகிறார்கள். அவள் பஸ் ஒன்றில் ராணுவத்தால் ஏற்றி அனுப்பிவைக்கப்படுகிறாள். மெனிக் ஃபார்ம் முகாம், அங்கு இருந்து 120 கி.மீ. தூரத்தில் உள்ளது. முகாம் வந்து சேருகி றாள். குழந்தையை அணைத்த படி முகாமைச் சுற்றி அவளது கண்கள் வட்டமிட்டுப் பார்க் கின்றன. வட்ட வட்டமாகச் சுற்றப்பட்ட முள் கம்பிகள், மாலை நேர வெயில் பளிச் சிட்டு மின்னுகின்றன. குத்திக் கிழிப்பதைப்போன்ற அதன் முள் கம்பிகள், அவளது உடலை நடுங்கவைத்துவிடுகிறது. இயந்திரத் துப்பாக்கிகளைக் கையில்வைத்து உள்ள ராணுவக்காரர்கள்,அவளது கண்களுக்கு முள் கம்பிகளைவிட குரூர மாகத் தெரிகிறார்கள். ராணுவக்காரன் ஒருவனின் வெறி மிகுந்த பார்வையில் அவளது உடல் நடுக்கம் மேலும் கூடுதல் ஆகிறது.
கூடாரங்கள் ஒவ்வொன்றிலும் 10 அல்லது 12 பேர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். முதல் மூன்று நாட்கள் குடிப்ப தற்குத் தண்ணீர் மட்டுமே முகாமில்கிடைத் தது. குழந்தை மட்டும்தான் அவளுக்கான ஒரே ஊக்க சக்தி. அதன் உயிரை அவள் எப்படியும் காப்பாற்றி ஆக வேண்டும். உயிரைப் பாதுகாத்து வருவதைப்போலவே கைப் பையையும் பாதுகாத்து வருகிறாள். அதில்தான், குழந்தைக்கான பால் பவுடர்மாவு பத்திரப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளது. பால் பவுடர் மாவை, கொஞ்சமாக எடுத்துக் கரைத்து குழந்தையின் பசிக்கு ஊட்டுகிறாள். கவனமாக மீண்டும் அதைப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்கிறாள். தன்னுடைய உணவைப்பற்றி அவள் அக்கறைகொள்வது இல்லை. மூன்று நாட்களுக்குப் பின், உணவுப் பொட்டலங்கள் முகாமில் கொடுக்கப்படுகின்றன. நெடுநாள் பட்டினியால் வாடிய மக்கள், முதல் உணவுப் பொட்டலத்தைப் பார்த்த உடன், முட்டி மோதிக் கூட்டமாக ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.
லாரியில் இருந்து உணவுப் பொட்டலங்களை சிங்கள சிப்பாய் ஒருவன் வீசிஎறிந்து கொண்டு இருக்கிறான். முகாம்வாசிகள் முயற்சிசெய்து கைகளால் பிடித்துக்கொள் கிறார்கள். சிலர் முகத்தில் மோதி, பொட்டலம் கிழிந்து, சோற்றுப் பருக்கைகள் சிதறி மண்ணில் விழுகின்றன. முகத்தில் ஒட்டிய சோற்றுப் பருக்கைகளைத் துடைத்துக்கொள்ளும்போது, அவமானத்தால் சம்பந்தப்பட்டவரின் முகம் சிவந்துவிடுகிறது.
பொட்டலத்தை வீசிய சிப்பாய் ஓரக் கண்ணால் பார்த்து, ஏளனத்துடன்ரசித்துக் கொள்கிறான். ஒரு பிணம் தின்னிக் கழுகைப் போல, இந்த அவமானம் கொத்திக் கிளற, இதைத் தூரத்தில் இருந்து கவனித்த முகாம் வாசிகளில் ஒருவர், ‘இந்தக் கொடுமைகளை நேரில் பார்ப்பதைவிட, முள்ளி வாய்க்கால் அக்னியில் சாம்பலாகி இருக்கக் கூடாதா?’ என்று வேதனைப்பட்டுக்கொள்கிறார்.
அந்தப் பெண் அனைத்தையும் எதிர்கொண்டாள். இயல்பாகவே அவளிடம் அமைந்த மன உறுதி அவளை அத்தனை இக்கட்டுகளிலும் பாதுகாத்து வந்தது. இந்த முகாம் வாழ்க்கைக்கு அவள் தன்னைப் பழக்கிக்கொண்டு இருந்த நேரத்தில்தான், அந்தப் பெரும் வேதனை அவளுக்கு நேர்ந்தது.
அந்தப் பெண்ணின் கைக்குழந்தைக்குக் கடுமையான வயிற்றுப்போக்கு. குழந்தை வாடித் துவண்டுபோனான். கடந்த ஒன்பது மாதங்களாக, சத்தான உணவு எதுவும் குழந்தைக்கு அவளால் கொடுக்க முடிய வில்லை. குழந்தை, எலும்பும் தோலுமாகத் தான் இருந்தான். நைந்த உடலால் வயிற்றுப்போக்கை எதிர்கொள்ள முடியவில்லை. மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லலாம் என்று முயற்சி செய்து பார்த்தாள். மருத்துவ மனையில் எந்தப் பயனும் கிடைக்காது என்று முகாம் வாசிகள் கூறியது அவளுக் குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துவிட்டது. உண்மையில் சொல்லப்போனால், அங்கு உள்ள மருத்துவமனைகள் மருத்துவமனை களாகவே இல்லை.
கருணையையும் ஆறுதலையும் வழங்க வேண்டிய அவை, மனிதவதைக் கூடங்களாகவே செயல்பட்டன. ராணுவத்தின் கொடுமைகளைவிட, இங்கு நடைபெறும் கொடுமைகள் மக்கள் உணர்வுகளை வெகு வாகப் பாதித்து, மனதில் ரத்தக் கசிவை ஏற்படுத்தின.
முகாமின் பெருங்கூட்டத்தை மருத்துவமனை ஊழியர்களால் சமாளிக்க முடியவில்லை என்றாலும், முகாம்வாசிகளின் வேதனை எல்லாம், தாங்கள் இத்தனை கேவலமாக நடத்தப்படுகிறோமே என்பதில் இருந்தது. குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் என்று தரம் பிரித்துப் பார்த்து, ஆறுதல் அளிக்கும் மனிதநேயக்கண்ணோட் டம் மருத்துவமனைகளில் இல்லை.
தமிழ் மக்கள் அனைவருமே பயங்கர வாதிகள். பயங்கரவாதிகளுக்கு மரணம்தான் தண்டனை என்றும் அதை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்களாக அவர்கள் காணப்பட்டார்கள். ராணுவத்தினர் தங்கள் தோள்களில் இயந்திரத் துப்பாக்கிகளைச் சுமந்து திரிந்தைப்போலவே மருத் துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என்று அனைவரின் மனங்களும், தனித்தனியாக ஓர் இயந்திரத் துப்பாக்கியைச் சுமந்து திரிந்துகொண்டு இருந்தன. அவர்களிடம் அமைந்த இன வெறுப்பின் ஆழம் எத்தகையது என்பதை மகப்பேறு பகுதிகளுக்குச் சென்றால் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
மரண பயமும் அச்சமும் நிறைந்த மெனிக் ஃபார்ம் முகாமில் குறிப்பிடத்தக்க மற்றொன்றும் நிகழ்ந்துகொண்டு இருந்தது. இதற்காக அந்த மக்கள், மகிழ்ச்சி அடைந்தார்களா? அல்லது வேதனைப்பட்டார்களா? என்பது நமக்குத் தெரியவில்லை.
இங்கு மாதம் ஒன்றுக்கு 400 குழந்தைகள் பிறந்தன. பிரசவம் மறுபிறப்புக்கு ஒப்பாகக் கூறப்படுகிறது. குழந்தை ஒன்றைப் பெற்று எடுக்கும்போது, எந்த ஒரு பெண்ணுக்கும் தாயின் அரவணைப்பு தேவைப்படுகிறது. செவிலியரின் ஆறுதல் மொழி, சில நேரங் களில் இந்தத் தாய்ப் பாசத்துக்கு ஈடாக அமைந்துவிடுகிறது. ஆனால், முகாம் மருத் துவமனைகள் முற்றிலும் மாறுபட்டவை.
பிரசவம் ஒருபுறம், மறுபுறத்தில் இறுகிய முகத்துடன் வெறுப்பை உமிழ்ந்து கொண்டே புரியாத மொழியில் வேண்டா வெறுப்புடன் மகப்பேறு செய்தலை, பிரசவ வலியால் துடிக்கும் எந்தத் தாயாலும் பொறுத்துக்கொள்ள முடியாது. தன்னை அநாதையாக்கிவிட்ட, ஆறுதல் அற்ற உலகில் வக்கான மருந்துகளும் மருத்துவ உதவிகளும் இல்லாமல், அந்தத் தமிழ்ப் பெண்கள் தங்கள் குழந்தைகளைப் பெற்று எடுக்கும் போராட்டத்தை நடத்திப் பார்க்கிறார்கள். அனைத்து வேதனைகளை யும் ஓர் அழுகுரலுக்காகப் பொறுத்துக்கொள்கிறார்கள். இதைத் தவிர, அவர் களுக்கு எதிர்கால ஆறுதல் வேறு என்ன இருக்க முடியும்?
குழந்தையின் வயிற்றுப்போக்கு நிற்கவில்லை. அந்த இளம் பெண்ணால் என்ன செய்ய முடியும்? எத்தனையோ வேதனைகளைச் சந்தித்துவிட்ட அவளால், இந்த வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எப்படியும் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிவிட முடிவு எடுக்கிறாள். ராணுவத்திடம் கெஞ்சிக் கதறி அவர்களின் உதவியைப் பெற்றுவிட முயற்சி  செய்கிறாள். ராணுவ அதிகாரி ஒருவர் ஆலோசனையும் வழங்கினார்.
குழந்தையை ராணுவத்திடம் ஒப்படைத் தால், மருத்துவச் சிகிச்சை அளித்து மீண்டும் குழந்தையை அவளிடமே ஒப்படைத்துவிடுகிறோம் என்பதுதான் அந்த ஆலோசனை. இதனை ஏற்றுக்கொள்ளலாமா என்று யோசித்துக்கொண்டு இருந்தபோது கிடைத்த மற்றொரு தகவல், அவளைப் பெரிதும் திடுக்கிட வைத்துவிட்டது. அச்ச உணர்வு அவள் உடல் முழுவதும் பரவிக்கொண்டது!
- விதைப்போம்…
நன்றி: சி.மகேந்திரன் & விகடன் 


வீழ்வேனென்று நினைத்தாயோ? I


உயிரை விலையாகக் கொடுப்பது எளிதானதா என்ன?  

இதற்கு இணை என எதுவுமே இல்லை. தன் சொந்த மண்ணைவிட்டுப் பிரிய மாட்டேன் என்று, வைராக்கியமாக அந்த மண்ணுக்குள்ளே கடைசிக் கணம் வரை போரிட்டு நின்று மூச்சை அடக்கி, உயிரை நிறுத்திக்கொள்கிறது மாவீரம்.

மண் மீதான உரிமைக்காக, உயிரையும் விலையாகக் கொடுப்பேன் என்பவர்களுக்கு மட்டுமே, இந்த மாவீரம் சாத்தியம்!

இதற்கு உலகில் எத்தனையோ முன் உதாரணங்கள் உண்டு என்றாலும், இந்த 21-ம் நூற்றாண்டில் மண்ணுக்காக உயிர்ஆயுதம் ஏந்திய வீரர் நிலம் முள்ளி வாய்க் கால் என்பதில் உடல் சிலிர்க்கிறது.

இலங்கையின் கடற்கரைக் கிராமங்களில் ஒன்றாக இருந்த முள்ளி வாய்க்கால், 2008- மே 17-க்குப் பின், ஒரு தனித்த வரலாறாக நிமிர்ந்து நிற்கிறது. அதன் புவியியல் இருப்பை அறிந்துகொள்வதில் அனைவரும் ஆர்வம் காட்டுகிறார்கள். இன்றும் ராணுவத்தின் கண்காணிப்பில் உள்ள அந்த நிலம், மிகவும் எழில் நிறைந்தது.

கிளிநொச்சியில் இருந்து ஒருவர் முள்ளி வாய்க்கால் செல்ல வேண்டும் எனில், இதற்கு இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பரந்தன் சந்திக்கு முதலில் செல்ல வேண்டும். முல்லைத் தீவுக்கும் இந்த பரந்தன் சந்திக்கும் இடையில்நெடுஞ் சாலை ஒன்று உள்ளது. இந்த நெடுஞ்சாலைக்கு ஏ 35 என்று பெயர். பரந்தன் சந்தியில் தொடங்கி, முரசு மோட்டை, தரும புரம், விஸ்வமடு, மூங்கிலாறு, உடையார் கட்டு, புதுக் குடியிருப்பு என்று நீண்டு செல்லும் இந்தச் சாலையின் இரு மருங்கும் தொன்மையான பல ஊர்கள் உள்ளன. இதில் புதுக் குடியிருப்பு, முக்கியமான நகரம்.

புதுக் குடியிருப்பைத் தாண்டியவுடன், புது உலகம் ஒன்று தோற்றம் தரும். அழகிய நெய்தல் நிலம் அது. கடலும் கடல் சார்ந்த வாழ்க்கையும் இங்கே இருந்தே ஆரம்பமாகிறது. இன்று உலகமே அறிந்துவைத்துள்ள, மழைக் கால ஆறுகளின் நன்னீர்த் தொகுப்பான நந்திக் கடல் இங்கே தான் இருக்கிறது. நந்திக் கடல் ஒரு கடல் அல்ல. உப்பற்ற நீரைச் சேமித்து வைத்துக்கொள்ளும் காயல் அது. நத்தைகள் மிகுந்த கடல் என்பதால்தான், நந்திக் கடல் என்ப தாகவும் சிலர் விளக்கம் தருகிறார்கள். கடல் உப்பு நீரிலும், காயல் நன்னீரிலும் வாழ்ந்து பழகிய நத்தைகள், அளவில் பெரிதாகவும் எண்ணிக்கையில் அதிகமாக வும் காணப்படுகின்றன. ஆற்று நீரால் கொண்டுவரப்பட்ட வண்டல் மண் படிவு களைச் சுமந்து நிற்பவை காயல்கள். மாங்குரோஸ் என்னும் அலையாத்திக் காடுகள் வளர்வதற்குக் காயல்கள்தான் அடிப்படை.

நந்திக் கடலை இயற்கை வரைந்துவைத்த ஓவியம் என்பார்கள் ஈழத்துக் கவிஞர்கள். வானத்து நீலமும் கடல் நீலமும் சங்கமித்துக்கொள்ளும் புள்ளியில், பூமித் தாய் வளர்த்துவைத்துள்ள அரிய தாவர இனங்கள், உலகின் அபூர்வங்களில் ஒன்று. 8 கிலோ மீட்டர் நீளம், சில இடங்களில் 1 கிலோ மீட்டர் அகலம்கொண்டது நந்திக் கடல். சிறு குழந்தை ஒன்று, பேரலையைத் தன் சிறு கையால் தொட்டுப் பார்க்க முயற்சிப் பதுபோல நந்திக் கடல், பெருங்கடலைத் தொட்டுப் பார்க்க ஆசைப்படுகிறது. இடையில் ஒரு நிலப் பகுதி இதைத் தடுத்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலப் பகுதியில்தான் முள்ளி வாய்க்கால் அமைந்து உள்ளது.

இந்தியப் பெருங்கடலுக்கும் நந்திக் கடலுக்கும் இடைப்பட்ட பரப்பு, பனை மரக் கூட்டத்தால் பந்தல் போடப்பட்டது. இந்த நிலப் பரப்பு 2 கிலோ மீட்டர் அகலம் இருக்கும். பனை ஓலையால் வேயப்பட்ட சிறு குடில்களே இங்கு அதிகம். பனைத் தொழிலையும் மீன்பிடித் தொழிலையும் தவிர, வேறு எதையும் அறிந்திராத மக்கள் இவர்கள். அயலார் யாருமே எதற்காகவும், வந்து போகாத பூமி என்பது இதன் சிறப்பு. வலையர் மடம், கரையான் முள்ளி வாய்க் கால், வெள்ளை முள்ளி வாய்க்கால் ஆகிய கடற்கரைக் கிராமங்கள் முள்ளி வாய்க்காலை ஒட்டி அமைந்தவை.
ஈழ மண்ணில் வன்னி, முல்லைத் தீவுப் பிரதேசங்கள் தனித்துவம் மிக்கவை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நால் வகை நிலங்களைக்கொண்டு, இவை மக்களின் வாழ்க்கைக்கான முழுத் தன்னிறைவையும் வழங்கியவை. ஆதி காலம் தொட்டே அந்தக் கிராமங்கள் உணவுக்காக அடுத்தவர்களிடம் கையேந்தும் நிலையில் இருந்தது இல்லை. பசியால் பிச்சை எடுப்பதைப் பார்ப்பதுகூட அங்கு அரிது. அந்த அளவுக்குப் பசி அறியாத மண் அது. இன்று எல்லாம் பழங்கதை. எதுவும் மிச்சம் இல்லை. அத்தனையும் அழிந்துகிடக்கின்றன. வீடுகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை, ஆலயங்கள் என்று எதையும் விட்டுவைக்கவில்லை இன வெறி சிங்கள ராணுவம்.

போர் உச்சகட்டம் அடைந்தபோது, மக்கள் கிளிநொச்சியில் இருந்து ராணுவத்தால் விரட்டப்பட்டார்கள். ஆண்டு முழுவதும் ஓடிக்கொண்டே இருந்தார்கள். கடைசியில் களைத்துப்போய், முள்ளி வாய்க்கால் வந்து விழுந்தார்கள். இடப் பெயர்வுக் காலங்களில் அவர்கள் அடைந்த துன்பங்களுக்கு எல்லை உண்டா?

வீடுகள் முழுவதும் நெல் மூட்டைகள் அடுக்கிக்கிடக்க, அவன் குடும்பமே பதுங்கிப் பதுங்கி ஒருவேளை உணவுக்காகக் கையேந்தி நின்றது.  அவன் வீட்டைச் சுற்றி தோட்டத்தில் பழுத்துக் கனிந்த, மா, பலா, கொய்யா, வாழை போன்றவற்றை, அணில் கூட்டமும் பறவைக் கூட்டமும் கொத்தியதில் சிந்தியவை சிதறிக்கிடக்க, அவன் வீட்டுப் பிள்ளைகள் தின்பதற்கு எதுவுமற்று ஏங்கிக்கிடந்தார்கள். கடந்த ஓர் ஆண்டில் அவர்கள் வாழ்ந்தது மனித வாழ்க்கை அல்ல.

பல மாதங்கள் பசியால் துடித்தவர்கள், கடைசியில் உயிரையும் துடிதுடித்து இழந்ததுதான் மிச்சம். எந்தக் கறையும் படியாத முள்ளி வாய்க்கால் மண்ணில், மானுடத்தின் ரத்தக் கறை படிந்துவிட்டது. அன்னை மடியில் சுமக்கவைத்தே, அவள் பெற்ற பிள்ளைகள் கொல்லப்பட்டனர். இலங்கையின் இன வெறி அரசு, குண்டுகள் போட்டுத் துடிக்கத் துடிக்கக் கொன்று முடித்தது. இவர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல. தேவையான ஆயுதங்களைக் கொடுத்து இந்தியா செய்ததும் பெரும் குற்றம். 'முள்ளி வாய்க்கால் வந்து சேருங்கள், அனைவரையும் காப்பாற்றுகிறோம்’ என்று வாக்குறுதி தந்தன வல்லரசுகள். கடைசி நேரத்தில், பிறருக்குத் தெரியாமல் ஈரத் துணியைப் போட்டு, கழுத்தை அறுத்து முடித்துவிட்டது இலங்கை அரசு. அதற்கு திரை கட்டிப் பாதுகாப்பைத் தந்தவைதான் இந்த வல்லரசுகள். வஞ்சகம், துரோகம், காட்டிக்கொடுத்தல் என்று எந்தப் பாதகம்தான், அந்த மண்ணில் நடக்கவில்லை? இன்று எல்லாம் முடிந்த நிலை.

உலக வரலாற்றில் மானுடத்தின் ரத்தம் பெருக்கெடுத்து வழிந்தோடிய நிலப் பகுதி கள் எத்தனையோ உண்டு. ஆனாலும், முள்ளி வாய்க்காலில் நடைபெற்றதைப்போல உலகில் வேறு எங்கும் கொடுமைகள் நடந்து இருக்குமா? பூமி பிளந்து பூகம்பம் வராதா? கடல் கோபம்கொண்டு, இந்தக் கயவர்களுக்குத் தண்டனை தராதா என்ற அளவுக்கு அங்கு கொடுமைகள் நடந்தன.

வரலாற்றுக் காலம் தொட்டு நெஞ்சில் வளர்த்துவைத்திருந்த பகைத் தீயைப் பயன்படுத்தி, அனைத்தையும் எரித்து முடித்துவிட்டது இனப் பகை. எரித்து முடித்ததோடு எல்லாமும் முடிந்துவிட்டது என்று, முன்னரே கணக்கும் போட்டுவைத்து இருந்தனர்.

கொலை செய்து முடிப்பதற்குத் தேவையான எச்சரிக்கை வளையங்கள் முதலில் அமைக்கப்பட்டன. பின்னர், மனித உரிமை அமைப்புகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டன. இலங்கை அரசுக்கு ஆதரவான ஊடகங்கள்கூட நுழைவதற்கு அங்கு அனுமதி இல்லை. அனைத்தும் ரகசியமாகவே நடந்தன. செய்யும் கொடுமைகள் யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்று மிகுந்த எச்சரிக்கையோடு சாட்சிகள் எதுவுமே இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள்.

கடல் அன்னையைவிட, பூமித் தாயைவிட சாட்சி வேறு உண்டா? யாருக்குமே தெரியாமல் நந்திக் கடல் கொந்தளித்து அலை எழுப்பியது. முள்ளி வாய்க்கால் மண்ணில் புதை குழிகள் அதிர்ந்து வெடித்தன.

ரத்தச் சிவப்பேறிய ஆயிரமாயிரம் கண்களுடன் உலகத்தை இன்று அண்ணாந்து பார்க்கிறது முள்ளி வாய்க்கால். அதன் கோபக் கனல் அகிலத்தையே திடுக்கிடவைத்துவிட்டது. மாபெரும் மரணத்துக்குப் பின் இது பெற்றெடுத்த ஜனனம், உண்மைகளாய் உயிர் பெற்று விண்ணில் எழுந்துவிட்டன. இருள் கவிந்த வான் பரப்பெங்கும் இந்த உண்மைகள், நட்சத்திரங்கள்போல சுடர்விட்டு நிற்கின்றன. வஞ்சிக்கப்பட்ட தனக்கான நீதியைக் கேட்க, சிறகுகளை விரித்துத் தேசங்கள் தோறும் பறந்து செல்கின்றன. இணையதளங்கள் அனைத்திலும் தலை காட்டி, நியாயம் கேட்டு நிற்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட நீதி பேசும் அனைவரும் இன்று தலை குனிந்து நிற்கிறார்கள்.

மக்கள் தொகையின் ஒரு பெரும் பகுதி இணையதளங்களில் மட்டுமே வசித்துவரும் காலம் இது. கணினிப் பெட்டிகளில் தலைகாட்டி நிற்கும் இந்த வஞ்சிக்கப்பட்ட மானுடம் எது என்று பலரால் புரிந்துகொள்ள முடியவில்லை. முள்ளி வாய்க்காலில் மக்கள் கூட்டம் திரண்டு, அங்கு நுழைந்துவிட்டது. தொலைக்காட்சிப் பெட்டிகள், வானொலிகள், அச்சு ஊடகங்கள் என்று எதையும் முள்ளி வாய்க்கால் மனிதர் கள் விட்டுவைக்கவில்லை. தன் வீடே தன் உலகம் என்று தனித் தனி அறைகளில் வாழும் நிம்மதி மனிதர்களால், இனிமேல் நிம்மதியோடு தூங்க முடியாது. எது வரை தெரியுமா? முள்ளி வாய்க்கால் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை!

ஆனால், இலங்கையின் இன வெறி அரசு, ஒன்றுமே நடக்கவில்லை என்று மாய வேடம் அணிந்து நிற்கிறது.  அனைத்தையும் மறப்போம். மன்னிப்போம் என்று வசனம் வேறு பேசுகிறது.

எதை மறைப்பது?

யாரை மன்னிப்பது?

நன்றி: சி. மகேந்திரன் மற்றும் விகடன்.

Sunday, November 13, 2011

ஒரு லட்சம் புத்தகங்கள்








சிங்களத் தீவினுக்கோர் 
பாலம் அமைப்போம்!

- மகாகவி

Welcome to delegates of Bharathi இன்டர்நேஷனல்

நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் துணியில் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் வாயிலில் ஆடின. தலைப் பாகைக்காரரின் படம் கீழே துடித்துக்கொண்டு இருந்தது. அருகே பல வண்ணக் கொடிகள் சஞ்சலித் துக்கொண்டு இருந்தன. டாக்டர் நல்லுசாமி கண்ணாடிக் கதவைத் திறப்பதற்கு முன் சேவகன் திறந்து புன்னகைத்தான். உள்ளே குளிர்பதனம் செய்யப்பட்ட அரங்கில் கம்பளத்தில் தமிழ் அறிஞர்கள் நிறைந்து இருந்தார்கள். புதுக் கவிஞர் ‘கேக்‘ கடித்துக்கொண்டு இருந்தார். சாகித்திய அகாதமி சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு இருந்தார். பரிபாடல் சோபாவில் உட்கார்ந்து கொண்டு தொடை மேல் காகிதம் வைத்துக் கடிதம் எழுதிக்கொண்டு இருந்தார். உரையாடலில் தமிழ் உலவியது.

” ‘தமிழ்நாட்டிலே சாஸ்திரங்கள் இல்லை. உண்மையான சாஸ்திரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்துவிட்டு, தமிழ்நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடம் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள்!’

இதைச் சொன்னது யாரு, சொல்லுங்க பார்க்கலாம்?”


”பேரறிஞர் அண்ணாங்களா?”

”இல்லைங்க. பார்ப்பனரான சுப்பிரமணிய பாரதி. ‘காற்று’னு வசன கவிதை படிச்சுப் பாருங்க.”

”அவரு எல்லாவிதத்திலும் புரட்சியாளருங்க. ஆயிரத்துத் தொளாயிரத்துப் பத்து இருபதுகளில் ஒரு பார்ப்பனர் இந்த மாதிரி சொல்றதுக்கு எத்தனை தைரியம் வேணும்!”

டாக்டர் நல்லுசாமி அவர்களை அணுக ”வாங்க, வாங்க, வாழ்த்துக்கள்!”

”எதுக்கு?” என்றார் டாக்டர்.

”அ! தெரியாத மாதிரி கேக்கறீங்க.”

”உண்மையிலேயே தெரியாதுங்க.” தெரியும்.

”பாரதி பல்கலைக்கழகத்துக்கு உங்களைத்தான் துணைவேந்தராப் போடப் போறாங்களாம்.”

”ஓ… அதுவா? எத்தனையோ பேர்களில் என் பேரும் இருக்குது.”

”இல்ல. நீங்கதான்னு சொல்றாங்க. அமைச்சர் உங்களைக் கவனிக்கத்தான் இன்னிக்கு உங்க கூட்டத்துக்கே வராருன்னு சொல்றாங்க.”

”சேச்சே! அமைச்சருக்குப் பாரதி மேல அப்படி ஒரு ஈடுபாடுங்க.”

”உங்களை விட்டா பொருத்தமா வேற யாருங்க?”

”எதோ பாக்கலாம். அதெல்லாம் அவ்வளவு சுலபம் இல்லைங்க. அரசியல் வேற கலக்குது…” டாக்டர் நல்லுசாமி அவர்களை விட்டு விலக,

”வள்ளுவர் சொல்லியிருக்காரு…

மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்’னு.

இப்ப யாருங்க பாப்பான்? யாரும் கிடையாதுங்க. அந்த அர்த்தத்தில்தான் பாரதி சொல்லி இருக்காரு.”

ரிசப்ஷனில் அவர் தன் அறைச் சாவியை வாங்கிக்கொள்ளும்போது அந்தப் பெண், ”சார் யூ ஹவ் எ மெசேஜ்” என்று புறாக் கூட்டில் இருந்து ஒரு குறிப்பை எடுத்துக் கொடுத்தாள்.

‘செல்வரத்தினம் மூன்று முறை உங்களுக்காக போன் செய்தார்’. 
நல்லுசாமிக்குச் சற்றுக் குழப்பமாக இருந்தது. ‘யார் இந்த செல்வரத்தினம்? புரியவில்லை.’ ”தேங்க்ஸ்!” என்று அவளைப் பார்த்தபோது ”யூ ஆர் வெல்கம்” என்று புன்னகைத்தபோது அவள் உடுத்தியிருந்த சன்ன ஸாரி டாக்டர் அவர்களைப் படுத்தியது. தன் வாழ்நாளிலேயே முதன்முதலாக மனைவியை (டாக்டர் மணிமேகலை) விட்டு வந்திருக்கிறார். இந்தப் புன்னகையில் நிச்சயம் வரவேற்பு இருந்தது!

‘கூடிப் பிரியாமலே – ஓரிராவெல்லாம்
கொஞ்சிக் குலவியங்கே
ஆடி விளையாடியே – உன்றன் மேனியை
ஆயிரங்கோடி முறை நாடித் தழுவி
…
’
”டாக்டர், வணக்கம்!”

”ஓ, பெருமாள்! வாங்க, எங்க இருக்கீங்க இப்ப?”

”உத்கல்ல! புதுசா டமில் செக்ஷன் ஆரம்பிச்சு இருக்காங்க…”

”உத்கல் எங்க இருக்குது?”

பக்கத்தில் பச்சைக் கண்களுடன் ஒரு பெண்பிள்ளை இவர்களைப் பார்த்துச் சிரித்து ‘ஹலோ’ என்று சொல்ல, டாக்டர் பெருமாள் அறிமுகப்படுத்திவைத்தார்.

”இது வந்து கத்தரினா. ரஷ்யாவுல இருந்து பாரதி ஆராய்ச்சி பண்ண வந்திருக்காங்க. திஸ் இஸ் டாக்டர் நல்லுசாமி!”

”ஆ, ஐஸ்ஸீ!” என்று பெண்மணி அவர் கையைப் பற்றிக் குலுக்கினாள். சற்று வலித்தது. டிராக்டர் ஓட்டும் பெண்பிள்ளைபோல் ஏராளமாக இருந்தாள். வல்லி இடையில்லை, ஓங்கி முன்னிற்கும் மார்பையும் சரியாக மூடாமல் ததும்பினாள்.

”யூர் ரீடிங் பேப்பர், ஆர்ன்ட் யூ?”

”நோ… ஐம் பிரிஸைடிங்! மத்தியானம்… ஆஃப்டர் நூன். யூ நோ டாமில்?”
”யெஸ்! கான்ட் ஸ்பீக்!”

”இந்தம்மா பாரதியை வறுமைல ஏன் வாட விட்டாங்க தமிழங்கன்னு கேக்குது!”

”அவர் காலத்துத் தமிழங்க அவர் பெருமையை உணரலை…”

”டாக்டர்! உங்களுக்குத் துணைவேந்தர் ஆயிருச்சாமே?”

”சேச்சே! இன்னும் எதும் தீர்மானிக்கலைப்பா.”

”ஆயிட்டுதுன்னுதான் சொல்றாங்க. உங்களைத் தான் நம்பியிருக்கேன். என்னை உத்கல்ல இருந்து எப்படியாவது ரீடராக் கொண்டு வந்துருங்க. சப்பாத்திச் சாப்பாடு. சூடு அதிகமா… என்னுடைய பைல்ஸுக்கு ஒப்புக்கலை!”

”பாக்கலாங்க, முதல்ல ஆகட்டும்.” செல்வரத்தினம்… எங்கயோ கேட்ட மாதிரி பேராக இருக்கிறதே? ரஷ்யியைப் பார்த்து மறுபடி புன்னகைத்துவிட்டு, டாக்டர் மெத்தென்ற மாடிப்படிகளில் ஏறும்போது உற்சாகமாகத்தான் சென்றார். மணிமேகலைக்குச் செய்தி சொல்ல வேண்டும். அவளுக்குத்தான் சந்தோஷமாக இருக்கும். சே! அதற்குள் எத்தனை கோட்டைகள்!

மெஸனைன்னைத் தாண்டியதும் இங்கிருந்தே மாநாட்டு முதல் ஹால் தெரிந்தது. அதன் வாசல் ஏர்கண்டிஷனுக்கு அடைத்திருந்ததால் உள்ளே பேச்சு கேட்கவில்லை. அவ்வப்போது உள்ளே இருந்து டெலிகேட் ஒருவர் டாய்லெட் போகவோ அல்லது முந்திரிப் பருப்பு கேக்குடன் தயாராக இருந்த காபி சாப்பிடவோ கதவைத் திறந்தபோது, ”அவன் சர்வதேசக் கவிஞன்! பிஜி மக்களுக்காக இங்கிருந்து கண்ணீர் வடித்தான். ‘மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் கடைக்கண் வைத்தாள்’ என்று ரஷ்யப் புரட்சியைப்பற்றிப் பாடினான். அவனன்றோ…” என்று மாநாடு கசிந்தது. பல பேர் டாக்டரை வணங்கினார்கள். பரிச்சயம் இல்லா முகங்கள். எல்லோருக்கும் தெரிந்திருக்கும். துணைவேந்தர் என்றால் சும்மாவா? அமைச்சர் அதற்குத்தான் பிற்பகல் கூட்டத்துக்கு வருகிறார். என்னைக் கணிக்கத்தான்! நல்லுசாமிக்கு உள்ளுக்குள் புல்லரித்தது. திறமைப்படி கொடுக்க வேண்டுமானால் அவருக்குத்தான் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் அவரைக்காட்டிலும் பாரதி கவிதைகளில் பரிச்சயம் உள்ளவர் யாரும் கிடையாது. ‘பாரதி கவிதைகளில் சமத்துவம்’ என்று டாக்டர் பட்டத்துக்கு அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை இன்னும் ஒரு மைல் கல்!

மத்தியானக் கூட்டம் தொடங்க இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது. ஆனால், திறமை மட்டும் போதாதே. அறைக்குச் சென்று சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு வரலாம். முதலில் மணிமேகலைக்குத் தொலை பேசி மூலம் விவரம் தெரிவித்து விடலாம்.

டாக்டர் லேசாக,

‘காதல் செய்தும் பெறும் பல இன்பம்,
கள்ளில் இன்பம், கலைகளில் இன்பம்,
பூதலத்தினை ஆள்வதில் இன்பம்…’

என்று பாடிக்கொண்டே அறைக் கதவில் சாவியைப் பொருத்தும்போது, அறை வாசலில் நின்றுகொண்டு இருந்தவனைக் கவனித்தார்.

”வணக்கம் ஐயா!”

”வணக்கம்! நீங்க..?”

இருபத்தைந்து சொல்லலாம். ஒல்லியாக இருந்தான். உக்கிரமான கண்களுக்குக் கீழ் அவன் வயசுக்குச் சற்று அவசரமான நிழல்கள். தோளில் பை மாட்டியிருந்தான். அதில் விழாவின் சிறப்பு மலர் எட்டிப் பார்த்துக்கொண்டு இருந்தது.

”கண்டு கன காலம்” என்றான். டாக்டர் அவனைத் தன் ஞாபக செல்களில் தேடினார்.

எங்கோ பார்த்திருக்கிறோம் மையமாக. ”வாங்க! எப்ப வந்தீங்க?”

”இஞ்சாலையா?”

இப்போது ஞாபகம் வந்துவிட்டது. சிலோன்! இவனைச் சிங்களத்தில் பார்த்திருக்கிறோம்.

”நீங்கதானா, செல்வரத்தினம்?”

”ஐயாவுக்கு நினைப்பு உண்டு. யாழ்ப்பாணத்தில் சந்திச்சிருக்கோம்.”
இப்போது முழுவதும் ஞாபகம் வந்துவிட்டது. இவன் வீட்டில் யாழ்ப்பாண உலகத் தமிழ் மகாநாட்டின்போது டாக்டர் இரண்டு நாள் தங்கியிருக்கிறார்.

”எங்க வந்தீங்க?”
”சும்மாதானாக்கம். இடைசுகம் விசாரிச்சுக் கொண்டு போவமெண்டு வந்தனாக்கம்!” மனசுக்குள் மொழி பெயர்த்துக்கொள்ள வேண்டியிருந்த அவன் தமிழ் சற்று நிரடியது. இருந்தும், ”வாங்க! உள்ள வாங்க” என்றார்.

அறைக்குள் ஆஷ் – டிரே தேடினான். டாக்டர் அவனுக்கு நாற்காலி காட்ட அதில் விழுந்தான்.

”விழாவில் எண்ட பேச்சும் உண்டு” என்றான்.

”அப்படியா! சந்தோஷம். விழாவுல கலந்துக்கறதுக்காக வந்தீங்களா சிலோன்ல இருந்து?”

”ஆமாம்.”

”ரொம்பப் பொருத்தம். சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்னு மகாகவி சொன்னதுக்கு ஏற்ப…”

இப்போது அவனை முழுவதும் ஞாபகம் வந்துவிட்டது. யாழ்ப்பாணம் மாநாட்டில் இவன் குடும்பமே தமிழில் ஈடுபாடுகொண்டு அவர்கள் வீட்டில் இவருக்கு விருந்து வைத்ததும், இவன் தங்கை இனிமையான குரலில் ‘நெஞ்சில் உரமுமின்றி’ பாடியதும் நினைவுக்கு வந்தது. அந்தப் பெண் பெயர் என்ன..?

”உக்காருங்க… ஊர்ல எல்லாரும் சௌக்கியமுங்களா?”

”ஊர்ல யாரும் இல்லீங்க.”

”அப்படியா? அவங்களும் வந்திருக்காங்களா? உங்க தங்கச்சி வந்திருக்குதோ?”

”தங்கச்சி இல்லைங்க” என்றான். அவன் கண் களில் பளபளப்பு ஏற்பட்டது.

”என்ன சொல்றீங்க?”

”எண்ட தங்கச்சி, அப்பா, அம்மா எல்லாரும் இறந்துட்டாங்க.”

”அடப்பாவமே! எப்ப? எப்படி?”

”ஆகஸ்ட் கலகத்துலதாங்க!”

”ஐயையோ! எப்படி இறந்துபோனாங்க?”

”தெருவுல வெச்சு… வேண்டாங்க! விவரம் வேண்டாங்க… நான் ஒருத்தன்தான் தப்பிச்சேன். அதுவும் தற்செயல்.”

டாக்டர் மௌனமாக இருந்தார். எப்படி ஆறுதல் சொல்வது? அவன் சிரமப்பட்டுக் கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கும்போது, எது சொன்னாலும் பிரவாகம் துவங்கிவிடும் என்று தோன்றியது. இருந்தும் ஏதோ பேச வேண்டிய அவசியத்தில்,

”ஏதாவது சாப்பிடறீங்களா?”

”கோப்பி” என்றான்.

”இத்தனை நடந்திருக்குனு நினைக்கவே இல்லை! அதும் நமக்குத் தெரிஞ்சவங்க. நாம பழகினவங்க இதுல பலியா இருக்காங்கன்னா ரத்தம் கொதிக்குது…”

”அதைப்பத்தி இப்பப் பேச வேண்டாங்க. நான் வந்தது வேற விசயத்துக்காக.”
”சொல்லுங்க. உங்களுக்கு எந்த விதத்துல என்ன உதவி தேவையா இருக்குது?”
”நிகழ்ந்தது எல்லாம் தமிழ் நாட்டுல முழுவதும் தெரியாதுண்டுதான் தோணுது. யாழ்ப்பாணம் பொது நூலகத்துல இருந்த ஒரு லட்சம் தமிழ்ப் புத்தகங்களை போலீஸ்காரங்களே எரிச்சாங்க. அது தெரியுமோ உங்களுக்கு?”

”அப்படியா?”

”அருமையான புத்தகங்கள்! பாரதியாரே சொந்தச் செலவில் பதிப்பித்த ‘ஸ்வதேச கீதங்கள்’ 1908-லயோ என்னவோ வெளியிட்டது. ‘இதன் விலை ரெண்டணா’ண்டு போட்டு இருந்தது. ஆறுமுக நாவலருடைய முதல் எடிஷன்கள் எல்லாம் இருந்தது. 1899-ல் வெளியிட்ட சிங்காரவேலு முதலியாருடைய அபிதான சிந்தாமணி முதல் பிரதி! லட்சம் புத்தகங்கள்னா எத்தனை தமிழ் வார்த்தைகள்! எண்ணிப் பாருங்க. அத்தனையும் தெருவுல எரிச்சாங்க.”

”அடடா!”

”அதை நான் சொல்ல விரும்பறேன். அப்புறம் நான் இந்தியாவுக்கு வந்து பதினஞ்சு நாளா தமிழ்நாட்டில் பார்த்த சில விஷயங்களையும் சொல்ல விரும்பறேன்.”

”எங்க சொல்ல விரும்பறீங்க?”

”இன்றைய கூட்டத்தில்தான்!”

”இன்றைய கூட்டம் பாரதி பற்றியதாச்சே!”

”பாரதி பெல்ஜியம் நாட்டுக்காகவும் பிஜி தீவினருக்கும் அனுதாபப்பட்ட சர்வதேசக் கவிஞன். ருஷ்யப் புரட்சியை வாழ்த்தினவன்! இன்றைக்கு இருந்திருந்தா, சிங்களத் தமிழர்களுக்காக உருகியிருக்க மாட்டானா?”

”கட்டாயம்… கட்டாயம்…”

”அதைத்தாங்க சொல்லப்போறேன்!”

”அதுக்கு இந்த மேடை சரியில்லைங்களே!”

”இந்த மேடைதான் மிகச் சரியானது. தமிழ் பயிலும் எல்லா நாட்டவர்களும் வந்திருக்காங்க. தமிழக அமைச்சர் வரார். சர்வதேச ஆராய்ச்சியாளர்கள், அனைத்திந்தியத் தமிழறிஞர்கள் எல்லாரும் வர்ற இந்த மேடையில எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கத்தான் துக்கத்தையும் மறந்து வந்திருக்கிறேன்!”

டாக்டர் சற்றே கவலையுடன், ”குறிப்பா என்ன சொல்லப்போறீங்க?” என்றார்.
”சிங்களத் தமிழர்களைத் தமிழகம் நடத்தற விதத்தையும் பார்த்தேன். அதையும் சொல்லப்போறேன்.”

”புரியலீங்க.”

”ஐயா! நான் வந்து பதினைந்து தினம் ஆச்சு. முதல்ல மண்டபம் டிரான்ஸிற் காம்ப்புக்குப் போனேன். இலங்கையைத் துறந்து இங்க வந்த தமிழர்கள் என்ன செய்யறாங்க, அவங்களை எப்படி ‘றீட்’ (treat) பண்ணறாங்கன்னு பாக்கிறதுக்கு. ராமேஸ்வரம் வந்து சேர்ந்த உடனே அவங்களைத் தமிழகம் எப்படி வரவேற்குது தெரியுமோ? டிரான்ஸிற்றர் வெச்சிருக்கியா? றேப் றிக்கார்டர் கொண்டுவந்திருக்கியா?

தங்கத் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்துட்டோமிண்டு கண்ணில கனவுகளை வெச்சுக்கிட்டு வந்தவங்களுக்கு எல்லாம் ரெண்டே மணி நேரத்துல கலைஞ்சுபோயிருதுங்க, அந்த காம்ப்பைப் பார்த்ததும். சிறைக் கைதிங்க பரவாயில்லை! சன்னல் இல்லாத ஓட்டு வீடு. பிரிட்டிஷ் காலத்துல க்வாரன்டைன் காம்ப்பா இருந்ததை இன்னும் மாற்றாமவெச்சிருக்காங்க. இரண்டு ரூமுக்குப் பத்து பேற்றை அடைச்சுவெச்சிருக்காங்க. அவங்களுக்கு ஆளுக்கு இரண்டு வாரத்துக்கு எட்டு ரூபா உபகாரப் பணம். ஆறாயிரம் ரூபா சர்க்கார் கடன் கொடுக்குதுனு பேரு. எல்லாம் அப்ளிகேசனாத்தான் இருக்குது. ஆறு மாதம் காத்திருந்தாலும் லஞ்சம் இல்லாம வராது. இவங்க உடமைகளை, கொண்டு வந்த அற்பப் பணத்தை ஏமாற்றிப் பறிக்க எண்ணூறு பேர். சிலோன் ரூபாய்க்கு எழுபத்து மூணு பைசா கொடுக்கணும். கிடைக்கிறது நாப்பத்தஞ்சுதான். எல்லாரும் திரும்பிப் போயிரலாம், அந்த நரகமே மேல்னு சொல்றாங்க. திரும்பச் சேர்த்துக்க மாட்டாங்க! போக முடியாது.
1964 வரைக்கும் இலங்கையைத்தான் தாயகம்னு நினைச்சுக்கிட்டு இருந்தாங்க. திடீர்னு ‘இது உன் தாயகம் இல்லை, தமிழ்நாட்டுக்குப் போ’னு அழையாத விருந்தாளிங்களா பேப்பரை மாற்றிக் கொடுத்துட்டு கப்பலில் அனுப்பிச்சிட்டாங்க. எதுங்க இவங்க தாயகம்? அங்க பொறந்து வளந்து ஆளாகி, ஒரே நாளில எல்லாம் கவரப்பட்டு, இங்கயும் இல்லாம அங்கயும் இல்லாம இவங்களைப் பந்தாடிக்கிட்டு இருக்காங்க. இது ஒரு சர்வதேசப் பிரச்னை இல்லையா?”

”எல்லாம் சரிதாங்க. இதை நீங்க சொல்ல வேண்டிய மேடையைப் பத்தித்தான் எனக்கு…”

”வேற எங்கங்க சொல்ல முடியும்? அரசியல் வாதிங்ககிட்டயா? ஏ.டி.எம்.கே-காரங்க, ‘இதுக்குத்தான் நாங்க தமிழகம் பூரா கதவடைப்பு செஞ்சமே’ங்கறாங்க! டி.எம்.கே, ‘இதுக்குத்தான் நாங்களும் தமிழகம் பூராக் கதவடைப்பு செஞ்சமே’ங்கறாங்க!”

”இல்லை. இதைத் தமிழ்ப் பத்திரிகைகளில் ஒரு கட்டுரை மாதிரி எழுதலாமே நீங்க…”

”சொல்றேங்க! எல்லாப் பத்திரிகையையும் போய்ப் பார்த்தேன். விகடன்ல சொன்னாங்க; நாங்க அட்டைப் படமே கண்ணீர்த் துளியா ஒரு இஷ்யூல போட்டாச்சேன்னாங்க. குமுதம் ஆளுங்களைச் சந்திக்கவே முடியலை. குங்குமத்துல கேட்டா, விகடன்ல வந்துருச்சேன்னாங்க. ராணியில இதைப்பத்தித்தான் கட்டுரைத் தொடர்ல நாங்களே எழுதிட்டு இருக்கமேன்னாங்க…”

”நீங்க என்ன எழுதறதா சொன்னீங்க?”

”அந்தப் புத்தகங்களை எரிச்சதைப்பற்றித்தாங்க! ஒரு லட்சம் புத்தகங்க! அத்தனை வார்த்தைகளும் எரிஞ்சுபோய், ராத்திரி பூரா வெளிச்சமா இருந்ததை! ஒருத்தர் மட்டும் சொன்னாரு எழுதுங்கனு… ஆனா, அப்படியே உங்க தங்கச்சி றேப்பையும் எழுதுங்க… அவங்க கலர் ட்ரான்ஸ்பரன்ஸி இருந்தா கொடுங்க, அட்டையில போடுவோம்… கொஞ்சம் ஹ்யூமன் இன்ட்ரஸ்ட் இருக்கும்னாருங்க! அவர் பேர் சொல்ல விரும்பலை. எனக்கு என் சொந்த சோகத்தை எழுத விருப்பம் இல்லை. அவளை என் கண் எதிரிலேயே துகிலுரிச்சாங்க! முதல்ல பக்கத்து வீட்ல சிங்களக் குடும்பத்தில்தாங்க அடைக்கலம் கொடுத்தாங்க. நாள் பூரா கக்கூஸ்ல ஒளிஞ்சிக்கிட்டு இருந்தது! அவங்க உயிருக்கே ஆபத்து வந்திரும்போல நிலையில பின்பக்கமா ஓடிப்போயிருச்சுங்க. சந்துல வெச்சுப் பிடிச்சுத் தெருவுல… நடுத் தெருவுல… என் கண் முன்னாலயே! கண் முன்னாலயே…” அவன் இப்போது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதான்.

”ரொம்பப் பரிதாபங்க.”

கொஞ்ச நேரம் அழுதுவிட்டு ”எனக்கு இதைச் சொல்லி அனுதாபம் தேடிக்க விருப்பம் இல்லைங்க. இந்த மாதிரி வன்முறைங்க உங்க ஊர்லயும் நிறைய நடக்குது. இங்கயும் றேப்புக்குப் பஞ்சம் இல்லை. ஆனா, அந்தப் புத்தகங்களை எரிச்சது, அது என்னவோ ஒரு சரித்திர சம்பவமாத்தான் எனக்குத் தெரியுது. அந்த நெருப்புல இருந்த வெறுப்பு நிச்சயம் சர்வதேசக் கவனத்துக்குக் கொண்டு வரவேண்டியதுங்க…” சட்டையில் முழங்கைப் பகுதியில் தன் முகத்தைச் சரியாகத் துடைத்துக்கொண்டு, ”எனக்கு ஒரு நாட்டு ‘குடிமகன்’கிறது யாருங்கறதைப்பற்றி ஆதாரமா சந்தேகங்கள் வருதுங்க. சிங்களவர்கள் தமிழர்கள் இரண்டு பேரும் இந்தியாவுல இருந்து வந்தவங்க. அவங்க வங்காளம் ஒரிஸ்ஸாவில் இருந்து வந்த ஆரியர்களாம். நாங்க ஒண்ட வந்த கள்ளத் தோணிங்களாம். சக்கிலியங்களாம்! இதைஎல்லாம் சொல்ல வேண்டாம்? ஆறு லட்சம் பேர் எங்க போவோங்க? என்ன செய்வோங்க? இதெல்லாம் சொல்ல வேண்டாமா?”

டாக்டர் மூக்கைச் சொறிந்துகொண்டார்: ”இவ்வளவு விவரமாச் சொல்ல வேண்டாங்க. ஏன்னா, இது இலக்கியக் கூட்டம். இதில் அரசியலை நுழைக்கிறது நல்லால்லை. ஒண்ணு செய்யுங்க…”

”அரசியல் இல்லைங்க, மனித உரிமைப் பிரச்னை இல்லையா?

‘சொந்தச் சகோதரர்கள்
துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடீ-கிளியே!
செம்மை மறந்தாரடீ!
’னு

பாரதி பாடலையா? இலங்கைத் தமிழர்களைச் சகோதரர்கள்னுதானே நீங்க எல்லாரும் சொல்றீங்க?”

”அதுவும் ஒருவிதத்துல வாஸ்தவம்தான். இருந்தாலும்…”

”எனக்கு இதைவிட்டா வேற வாய்ப்புக் கிடையாதுங்க. ரத்தினாபுரத்துல நடந்ததைச் சொன்னா, கண்ல ரத்தம் வரும். அதெல்லாம் நான் சொல்லப்போறது இல்லை. ஒரு லட்சம் புத்தகங்களை எரிச்சாங்க. அதுக்குப் பதில் ஒரே ஒரு புத்தகத்தை மேடையில எரிக்கப்போறேன்!”
”என்ன புத்தகம்?” என்றார் கவலையோடு.

”இந்த மாநாட்டு மலரை!”
”எதுக்குங்க அதெல்லாம்..?”

”பாரதி சொன்ன எதையும் செய்யாம ஏர் கண்டிசன் ஹோட்டல்ல சாக்லேட் கேக் சாப்ட்டுக்கிட்டு மாநாடு போடறது எனக்கு என்னவோ பேத்தலாப் படுது. அதனோட சிகரம்தான் இந்த வெளியீடு. இதை மேடையில எரிச்சுட்டு, பாரதி சொன்னதை நடைமுறையில் செய்து காண்பிங்கனு சொல்லப்போறேன். ‘சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்’னு அவன் சொன்னது கான்க்ரீட் பாலம் இல்லை. முதல்ல மனப்பாலம் அமைங்க! அப்பதான் பளிச்சுனு எல்லார் மனசிலயும் பதியும். நேரமாயிடுச்சுங்க. ரெண்டு மணிக்குல்ல கூட்டம்?” அவன் எழுந்து வணங்கிவிட்டுச் சென்றான். 

‘செல்வரத்தினம்…’

டாக்டர் அவன் போன திக்கைத் திகைப்பில் பார்த்துக்கொண்டு இருந்தார். சற்று நேரம் யோசித்தார். நிகழ்ச்சி நிரலைப் பார்த்தார். இரண்டாவதாகப் பேசுவது ‘செல்வரத்தினம், ஸ்ரீலங்கா’ என்றிருந்தது. யோசித்தார். நாய்க்குட்டி போல் இருந்த டெலிபோனை எடுத்தார். மதுரைக்கு டிரங்க்கால் போட்டார். ”பீப்பி கால். டாக்டர் மணிமேகலை…”

பத்து நிமிஷத்தில் கால் வந்தது.

”மணி! நாந்தான்.”

”என்ன, விசாரிச்சீங்களா? கிடைச்சிருச்சா?”

”ஏறக்குறைய கிடைச்ச மாதிரிதான். செக்ரெட்டரியேட்லயே விசாரிச்சுட்டேன். அமைச்சர் கையெழுத்து ஒண்ணுதான் பாக்கியாம்.”

”அப்ப இனிப்பு செய்துர வேண்டியதுதான். இந்தக் கணத்துல உங்ககூட இருக்க…”

”மணி! ஒரு சின்ன சிக்கல்…”

”என்னது… அருணாசலம் மறுபடி பாயறாரா?”

”அதில்லை மணி! இன்னிக்குக் கூட்டத்துல அமைச்சர் வராரு. எனக்கு முன்னால ஒரு சிலோன்காரன் பேசறதா இருக்கு. நாம யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ் மகாநாட்டுல சந்திச்சிருக்கோம். அவன் பேசறான்.”

”பேசட்டுமே, உங்களுக்கு என்ன?”

”அதில்லை மணிமேகலை. அவன் சமீபத்திய கலகத்துல ரொம்ப இழந்து போய் ஒரு வெறுப்புல இருக்கான். ஏறக்குறைய தீவிரவாதியாக் கிறுக்குப் புடிச்ச பயலா இருக்கான்.”

”என்ன செய்யப்போறான்?”

”யாழ்ப்பாணத்துல லட்சம் புத்தகங்களை எரிச்சாங்களாம். அதுக்குப் பதிலா மேடையில விழா மலரை எரிச்சுக் காட்டப்போறேங்கறான். கேக்கறதுக்கே விரசமா இருக்குது. எனக்கு என்னடான்னா, கூட்டத்துல கலாட்டா ஆகி, எங்கயாவது எனக்குச் சந்தர்ப்பம் வர்றதுக்குள் கலைஞ்சுபோச்சுன்னா, அமைச்சர் வந்து…”

”த்ரீ மினிட்ஸ் ப்ளீஸ்!”

”எக்ஸ்டென்ஷன் பண்ணுங்க.”

”என்ன, கேக்குதா?”

”கேக்குது… கேக்குது. இத பாருங்க. உங்க பேச்சை இன்னிக்கு அமைச்சர் கேக்க வேண்டியது ரொம்ப முக்கியம். நீங்க முன்னாடி பேசிடுங்களேன்.”

”எப்படி? நிகழ்ச்சி நிரல்ல மாறுதல் செய்யணுமே! தலைமை தாங்கறதால, இறுதியுரைன்னா நானு?”

கொஞ்ச நேரம் மதுரை யோசித்தது.

”என்ன செய்யச் சொல்றீங்க?”

”எப்படியாவது உங்க அண்ணன்கிட்ட அவசரமா போன் பண்ணிச் சொல்லிடு…”

”அதைத்தான் நானும் யோசிச்சுக்கிட்டு இருந்தேன்… வெச்சுருங்க.”

”எப்படியாவது…”

”வெச்சிருங்கன்னு சொன்னனில்லையா? அதிக நேரம் இல்லை. ஒரு டிமாண்ட்கால் போட்டுர்றேன்.”

”சரி மணிமேகலை!”

”கவலைப்படாதீங்க. பேச்சு நல்லா பேசுங்க. கிடைச்சா மாதிரிதான்னு அண்ணனும் சொல்லியிருக்காரு. அமைச்சர் உங்க பேச்சைக் கேட்டுட்டாப் போதும்னாரு…”

டெலிபோனை வைத்துவிட்டு டாக்டர் சற்றுத் திருப்தியுடன் எழுந்தார். மணிமேகலை செய்து காட்டிவிடுவாள். இவ்வளவு செய்யக் கூடியவள் இது என்ன? இப்போதே அவள் விரல்கள் தொலைபேசியில் செயல்பட்டுக் கொண்டு இருக்கும். அவள் சக்தி!

வாழ்வு பெருக்கும் மதியே சக்தி
மாநிலம் காக்கும் மதியே சக்தி
தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி
சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி

இரண்டு மணிக்குக் கூட்டம் துவங்கியது. எதிரே ஹால் நிரம்பியிருந்தது. வெள்ளைக்கார முகங்கள் முதல் வரிசையில் பளிச்சென்று தெரிந்தன. பட்டுப்புடவை உடுத்திய நங்கை மைக்கைத் தொட்டுப் பார்த்துவிட்டு ‘எண்ணிய முடிதல் வேண்டும், நல்லதே எண்ணல் வேண்டும்…’ என்று இனிமையாகப் பாடினாள். மேடையில் பேச இருப்பவர்கள் வரிசையில் ஓரத்தில் செல்வரத்தினம் உட்கார்ந்து இருந்தான். டாக்டரைப் பார்த்துப் புத்தகத்தை உயர்த்திக் காட்டினான். கவலையாக இருந்தது. என்ன! ஒன்றுமே செய்ய முடியவில்லையா? இரு இரு பார்க்கலாம். அமைச்சர் இன்னும் வரவில்லை. எல்லோரும் வாயிலையே பார்த்துக்கொண்டு இருக்க, வரவேற்புரைஞர், ”தலைவர் அவர்களே! உலகெங்கிலும் இருந்து வந்திருக்கும் தங்கத் தமிழர்களே!” என்று துவங்க, சலசலப்பு தொடர, அமைச்சர் அங்கும் இங்கும் வணங்கிக்கொண்டு நடுவில் நடந்து வந்தார். டாக்டரைப் பார்த்துப் புன்னகைத்து விட்டுத் தன் இருக்கையில் உட்கார்ந்துகொண்டு, உடனே தன் முழுக்கைச் சட்டையை உருவி கடிகாரம் பார்த்தார். டாக்டர் அருகில்தான் உட்கார்ந்திருந்தார்.

இப்போது கேட்கலாமா? இது சந்தர்ப்பமா? இல்லை… இல்லை. அவர் கேட்கும் வரை காத்திருப்போம்.

பின்னால் பார்த்தார். இன்னும் இருந்தான். கவலை சற்று அதிகமாகியது.
”முதற்கண் பிஜி தீவில் இருந்து வந்திருக்கும் ஜார்ஜ் மார்த்தாண்டம் அவர்கள் பேசுவார்” என்று அறிவித்துவிட்டு உட்கார்ந்தார்.

”ரெஸ்பெக்டட் அண்ட் ஹானரபிள் மினிஸ்டர் அண்ட் ஃபெலோ டெலிகேட்ஸ்! ஐ’ம் எ தர்ட் ஜெனரேஷன் டமிலியன் அண்ட் ஐ’ம் ஸாரி ஐ’ம் நாட் ஏபிள் டு ஸ்பீக் இன் டமில். பட் தி கிரேட் ஸுப்ரமண்ய பாரதி…”

டாக்டர் தன்னை அறியாமல் பின்னால் பார்க்க… போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு காகிதத்தைப் பின் வரிசை ஓரத்தில் இருந்தவரிடம் காட்டி ஏதோ கேட்க, அவர் செல்வரத்தினத்தைக் காட்ட, இன்ஸ்பெக்டர் செல்வரத்தினத்தின் பின் நழுவி வந்து தாழ்ந்த குரலில் ஏதோ சொல்ல, செல்வரத்தினம் கலவரத்துடன் உடனே எழுந்து அவருடன் செல்வதைப் பார்த்தார்.

பெரிதாக மூச்சுவிட்டுக்கொண்டார். மணிமேகலை மணிமேகலைதான்! ஒரு மணி நேரத்தில் சாதித்துவிட்டாள். அவருக்குள் புன்னகை ஒன்று மலர்ந்தது.
”அடுத்துப் பேசவிருந்த ஸ்ரீலங்காவைச் சேர்ந்த திரு.செல்வரத்தினம் அவர்களை மேடையில் காணாததால், சோவியத் நாட்டைச் சேர்ந்த கத்தரீனா ஐவனோவாவை அழைக்கிறேன்…”

தினமணி நாளிதழில் மறுதினம் செய்தி வந்திருந்தது:
டாக்டர் நல்லுசாமி தன் தலைமை உரையின்போது, ” ‘சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்’ என்று பாரதி சொன்னது கான்க்ரீட் பாலத்தை அல்ல; மனப் பாலத்தை…” என்றார். அமைச்சர் தன் உரையில் உள்ள புதிதாகத் துவக்கப்போகும் பாரதி பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் நல்லுசாமி துணைவேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிற செய்தியை அறிவித்தார்.
செல்வரத்தினத்தின் விசா ரத்து செய்யப்பட்டு இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் தாய்நாடு திரும்பிச் செல்லும்படி, கட்டளையிடப்பட்ட செய்தி நாளிதழ்கள் எதிலும் வரவில்லை!

–நன்றி விகடன்

Wednesday, June 15, 2011

பேஸ்புக் (Facebook)



இன்றைக்கு உலகில் முதலிடத்தில் இருக்கும் சமூக வலையமைப்பு பேஸ்புக்தான் . பேஸ்புக் இங்க் எனும் நிறுவனத்தின் கீழ் இயங்கும் இந்த வலைத்தளம் 2004 - ஆம் ஆண்டு ஆரம்பமானது. மார்க் எலியட் ஷுகர்பெர்க் என்பவர் தனது நண்பர்கள் டஸ்டின் மாஷ்கேவிச் எடுராடோ சாவரின், கிரிஷ்ஹியூக்ஸ் ஆகியோருடன் இணைந்து இந்தத் தளத்தை உருவாக்கினார். தான் படித்த ஹார்வேட் பல்கலைக் கழகத்தில் விளையாட்டாய் உருவாக்கிய இந்தத் தளம் இன்று உலகெங்கும் பரவி 500 மில்லியன் பயன்பாட்டாளர்களுடன் பிரமிப்பூட்டுகிறது.  


தினமும் குறைந்த பட்சம் இரண்டு இலட்சம் பேர் இதில் புதிதாக இணைகிறார்கள். பேஸ்புக் இங்க் நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பலோ ஆல்டோ எனுமிடத்தில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு இலாபம் மட்டும் 800 மி. டாலர்கள்! இளைஞர்களின் இணைய உலகில் முக்கிய இடம் பேஸ்புக்கிற்கு உண்டு. இந்த நிறுவனத்தின் கால்வாசி பங்குகளுக்குச் சொந்தக்காரராக இருக்கும் நிறுவனர் மார்க்கின் வயது என்ன தெரியுமா?  இருபத்தியாறு!  



Tuesday, June 7, 2011

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!!!


'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'. உடல்நலம் ஆரோக்கியமாக இருந்தால்தான் நாம், நம் கடமைகளை சிறப்பாகச் செய்ய முடியும். எந்த ஒரு சின்ன நோய்க்கும், வலிக்கும் மருத்துவமனைகளுக்கு செல்வது, மாத்திரைகள், மருந்துகள் ஆகியவற்றை உட்கொள்வது போன்ற பழக்கங்கள் தோன்றிவிட்டன. மருத்துவர்களின் ஆலோசனை இன்றியும், அவரவராகவே தங்களுக்குத் தெரிந்த மாத்திரைகளை கடைகளில் வாங்கி சாப்பிடும் பழக்கமும் பலரிடம் உள்ளது. இது மிகவும் ஆபத்தானது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். 

முன் காலத்தில் நம் வீட்டுப் பெரியவர்கள், வீட்டிலேயே மூலிகைகள், நாட்டு மருந்துகள், சமையல் பொருட்கள் இவற்றிலிருந்து நோய்க்கு பொருத்தமான கஷாயங்கள், பற்று போடுதல், களிம்புகள் தயாரித்தல் ஆகியவற்றை மேற்கொண்டனர். இதனால் தீங்கு தரும் பின் விளைவுகள் இல்லாத நல்ல பலன் கிடைத்தது. மாறிவரும் இந்த நவீன காலத்தில் வீட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம், கை வைத்தியம் ஆகிய வழி முறைகள் மறைந்து வருகின்றன. 

வீட்டிலேயே செய்து கொள்ளும் இந்த எளிய கை வைத்திய குறிப்புகள் பற்றி மக்களுக்கு ஆர்வம் உண்டாக வேண்டும், அனுபவமும், பலனும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பதிவை உங்களுக்காக சமர்ப்பிக்கிறேன்...

தலைமுடி ஆரோக்கியம் 

மாதம் ஒருமுறை மருதாணி இலைகளை அரைத்து தலைக்குத் தேய்த்தால் நல்ல குளிர்ச்சி கிடைத்து, தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.


வாரத்திற்கு 2 முறைகள் நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து வந்தால், முடி உதிராது. செம்பருத்தி இலைகளை அரைத்து சீயக்காயுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தல் ஷாம்பு மாதிரி இருக்கும். நல்ல குளிர்ச்சி கிடைத்து முடி வளரும்.
முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து தலைக்குத் தடவி 15 நிமிடம் ஊறியபின் தலைக்கு சிகைக்காய் தேய்த்துக் குளித்தால் தலைமுடி மிகவும் மிருத்டுவாக இருக்கும், முடி உதித்தாலும் நிற்கும். 

தலைவலி 
1/2 டம்ளர் வெந்நீரில், 1/2 எலுமிச்சம்பழம் பிழிந்து 2 கல் உப்பு போட்டு குடித்தால் தலைவலி குணமாகும்.

காய்ச்சலும் தலைவலியும் சேர்ந்து வந்தால் கடுகை அரைத்து உள்ளங்காலில் பற்றுப் போட்டால் தலைவலி, காய்ச்சல் நீங்கி விடும்.

கண் 

தினமும் 3 தடவைகளாவது கண்களைக் கழுவ வேண்டும். 

பொன்னாங்கண்ணிக்கீரை, முருங்கைக்கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை நன்றாக இருக்கும். 

முட்டையின் வெள்ளைக் கருவை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் கண்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். 

தூக்கம் 

இரவு உணவை முடித்தபின் 1 தேக்கரண்டி தேன் அல்லது மிதமான சூட்டில் 1 டம்ளர் பால் சாபிட்டால் நிம்மதியான தூக்கம் வரும். 

தினமும் மாலையில் 6 மணிக்குள் வேலையை முடித்து அரை மணிநேரம் நடைப் பயிற்சி செய்து, 7 மணிக்கும் சாப்பிட்டு முடித்து, இரவில் குளித்து விட்டுப்படுத்தால் நிம்மதியான தூக்கம் வரும். 

பல்வலி 

பல் வலி வந்தால் ஒரு பூண்டை உரித்து, மணிக்கட்டில் நாடித்துடிப்பு இருக்கும் இடத்தில் வைத்துக் கட்ட வேண்டும். இடது பக்கம் பல்லில் வலி இருந்தால் வலதுபுற மணிக்கட்டிலும், வலது பக்கம் பல்லில் வலி இருந்தால் இடது மணிக்கட்டிலும் கட்டுப் போட வேண்டும்.

சிறிது எலுமிச்சைச் சாறுடன் உப்புத்தூள் கலந்து கரை உள்ள இடங்களில் தேய்த்தால், பற்களில் உள்ள கரை நீங்கி விடும். 

ஜலதோஷம் 

வெதுவெதுப்பான பீட்ரூட் சாற்றை மூக்கினுள் தடவினால் ஜலதோஷம் சரியாகிவிடும். 

தேன் ஜலதோசத்தை குணப்படுத்தும்.


இருமல், தும்மல் 

இருமல், தும்மல், காய்ச்சல் ஆரம்பமானவுடன் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் சளி கரையும். தும்மல் நின்று, மூக்கில் தண்ணீர் வடிவது நிற்கும். இருமலைக் கட்டுப்படுத்தும். 

கடுமையான இருமலாக இருந்தாலும், 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் வேறு அலோபதி மருந்துகள் இல்லாமல் இருமல் நிற்கும்.

அடி வயிற்று வலி 

அடி வயற்றில் வழிக்குக் காரணம் உடம்பு சூடாக இருப்பதுதான். காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தியத்தை எடுத்து வாயில் போட்டு விழுங்கி, சிறிது மோர் குடித்து வந்தால் உடனே நிவாரம் கிடைக்கும். 

வயிற்றுப்போக்குக்கு ஓமப்பூ கடுகளவு சாப்பிட்டால் குணமாகும். 

மலச்சிக்கல் 

மலச்சிக்கல்தான் உடம்பில் வரும் அத்தனை வியாதிகளுக்கும் மூல காரணம். தினமும் காலையில் எழுந்ததும் சுலபமாக மலம் கழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 

மலச்சிக்கல் நீங்க தினமும் இரவு படுக்கும்முன் 1 வாழைப்பழம் (மொந்தை) சாப்பிட வேண்டும். 

ஒரு டம்ளர் வெந்நீரில், 1 தேக்கரண்டி தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் மலச்சிக்கல் குணமாகும். 

மலேரியா 

மலேரியாவால் தாக்கப்பட்டவர்கள் தினமும் துளசி இலையை சிறிதளவு காலையில் வெறும் வயிற்றில் மென்று விழுங்கி வந்தால் ஓரிரு நாட்களில் நோய் நீங்கிவிடும். 

தேள் கொட்டுதல் 

தேள் கொட்டினால், கொட்டிய இடத்தில் சுண்ணாம்பை தடவ வேண்டும். 3 கிராம்புகளை மென்று சாப்பிட்டால் விஷம் இறங்கிவிடும். கொட்டின இடம் வீங்கினாலும் வற்றிவிடும். மஞ்சளையும் சுண்ணாம்பையும் கலந்து கடிவாயில் தடவினால் வழியும் வீக்கமும் மறைந்துவிடும். 

உடல் பருமன் 

வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.

தேன் உடல் பருமனைக் குறைக்கும். தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும். 

தீக்காயங்கள் 


தீக்காயம் பட்டவுடன் முதலில் தண்ணீரில் கழுவ வேண்டும்.

தீப்பட்ட புண்ணின்மேல் தொடர்ந்து தேன் தடவி வந்தால் புன் குணமாகி விடும். தீக்காயங்களை ஆற்றுவதற்கு தேன் உகந்தது. வலி நீங்கும். தீக்கொப்புளங்கள் ஏற்படாமல் தடுக்கும்.  

முக அழகுக் குறிப்புகள் 

ஒரு தேக்கரண்டி கசக்கசாவை தண்ணீருடன் சேர்த்து, அரைத்து முகத்தில் பூசி 
1/2 மணி நேரம் கழித்து வேத வெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகம் 'பளிச்' என்று இருக்கும். 

வெள்ளரிக்காயை மிக்சியில் அடித்து அதை முகத்தில் தடவி 1/2 மணி நேரம் அல்லது 1 நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும். 

இரவில் படுக்கும்முன் முகத்திற்கு வெண்ணை தடவலாம். பகலிலும் தடவலாம். ஆனால் தடவிய பிறகு, வெயிலில் போகக் கூடாது. 

எலுமிச்சைச் சாற்றில், பாசிப்பயற்று மாவு கலந்து முகத்தில் தடவி வைத்து, 1 நேரம் கழித்து கழுவினால் முகம் நிறம் பெரும். 

இளமை 

இஞ்சி, சுக்கு, கடுக்காய் இந்த மூன்றையும் பக்குவம் செய்து தினமும் 3 வேலை சாப்பிட்டு வந்தால் என்றும் இளமை உணர்வுடன் இருக்கலாம். 

தினமும் தேகப்பயிற்சி செய்வதும், அளவான உணவு உட்கொள்வதும் இளமையாக இருக்க உதவுகிறது. 

முகச் சுருக்கம் 

அதிகமாக மனதில் கவலைப்பட்டுக் கொண்டு இருப்பவர்களுக்கு முகச் சுருக்கம் அதிக அளவில் உண்டாகும்.

எப்போதும் இனிமையான சிந்தனைகள் இருந்தால் முகம் அழகாக இருக்கும். 
முகச் சுருக்கம் மறைந்து விடும். 

முக அழகிற்கும் தோலின் பராமரிப்பிற்கும் பழங்கள் சாப்பிட வேண்டும் அல்லது பழச்சாறு குடிக்க வேண்டும். 

தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். 

தினமும் உடற்பயிற்சி தவறாமல் செய்ய வேண்டும். 

தோலில் உள்ள செல்களை புதுப்பிக்கவும் முகத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றவும் தக்காளிச் சாற்றை முகத்தில் தடவ வேண்டும். 

முகப்பரு 

முகத்தை முதலில் வெந்நீரில் கழுவிய பின் உடனே குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பிறகு பாசிப்பயற்று மாவில் எலுமிச்சை சாறு ஊற்றி கலந்து முகத்தில் தடவி 1/2 மணி அல்லது 1 மணி நேரம் ஊற வைத்துக்  கழுவினால் பருக்கள் மறைந்து விடும்.

ஒரு தேக்கரண்டி பால், 1 தேக்கரண்டி தேன் இரண்டையும் நன்றாகக் கலக்கி, முகத்தில் தேய்த்து 1/2 மணி நேரம் கழுவினால் முகப்பரு மறையும். 

குழந்தைச் செல்வம் 

கணவன், மனைவி இருவரும் உலர்ந்த பழங்களை (பேரிச்சம்பழம், கிஸ்மிஸ் பழம், அத்திப்பழம்) தினமும் சாப்பிட வேண்டும். துளசி சாப்பிடக் கூடாது. மாத விலக்கில் இருந்து 14 ஆம் நாள் சேர்ந்திருந்தால் குழந்தை பிறக்கும்.