Wednesday, April 6, 2011

உங்கள் உடலுக்குள் ஒரு ஏ.சி!

      அடடா வெயில்டா... அனல் வெயில்டா! 



            வெயில் தன் வேலையைக் காட்டத்தொடங்கிவிட்டது! வியர்வை, தாகம் , அசதி என எதிர்வரும் நாட்களில் வெயில் விளையாட்டு சூடு பிடிக்கத் துவங்கிவிடும். வெயிலின் உக்கிரத்தில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்!    



"நிறைவாக நீர் அருந்தினாலே போதும்!" என்கிறார்கள் அனைத்துத் தரப்பு மருத்துவர்களும். 


  வெயில் காலத்தில் உடலின் நீர் அளவு குறைவதால்தான் தாகம், மயக்கம், நீர்க்கடுப்பு என்று ஏகப்பட்ட சங்கடங்கள். அதைத் தவிர்க்க சாதாரண நாட்களைக் காட்டிலும், அதிக அளவில் நீர் அருந்தினாலே போதும். வெறும் தண்ணீராக மட்டுமே குடிக்காமல், இயற்க்கையிலையே குளிர்ச்சியான பொருட்களைக் கலந்து பருகினால், வெயிலின் பாச்சா பலிக்காது. 





   வெந்தயத்தை வறுத்து ஆறிய பிறகு, தண்ணீரில் போட்டுப் பருகினால், வெயிலால் உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் உண்டாகும் புண்கள் குணம் அடையும்.




  எலுமிச்சம் பழத்தில் விரல் அளவுக்குத்  துளையிட்டு, தண்ணீர் பானைக்குள் போட்டு வைத்துப் பருகினால் குளிர்ச்சிக்குக் குறைவு இருக்காது. 




  வெயில் காலத்தில் ஏற்படும் இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகளுக்குத் தண்ணீரோடு துளசி அல்லது அதிமதுரம் சேர்த்துப் பருகலாம். 




  ரசாயனக்  குளிர்பானங்களைத் தவிர்த்து, மோர், தர்பூசணி, இளநீர், ரசம் ஆகியவற்றை அருந்துங்கள். இது எதுவும் கிடைக்கப் பெறாதவர்கள், ஒரு நாளைக்கு நான்கு லிட்டர் தண்ணீர் அருந்தினாலே போதும். 




   விளையாட்டு வீரர்கள், அதிக வேலைப் பளுகொண்டவர்கள் தங்கள் சிறுநீரின் நிறத்தைப் பார்த்து, அதற்குத் தக்கபடி தண்ணீர் பருகலாம். சிறுநீர் இளமஞ்சள் நிறத்தில் இருந்தால், வழக்கமான அளவில் தண்ணீர் பருகலாம். அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறினால், உடனடியாக அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். 




   வெயிலால் ஏற்படும் வியர்வை, வியர்க்குரு, அரிப்பு போன்றவற்றைத் தடுக்க குளியல்தான் ஆயுதம். வாரம் இருமுறை விளக்கெண்ணை மற்றும் தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடல் உஷ்ணத்தை வெகுவாகக் குறைக்கும். 





    வெயில் காலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறி, சிறுநீர் வெளியேறுவது குறைந்தால், நீர்க்குத்தல் ஏற்படும். அதிக அளவு தண்ணீர் பருகுவதுதான் அதைத் தவிர்க்க ஒரே தீர்வு! 


1 comment: