Tuesday, October 23, 2012

அப்பா அன்புள்ள அப்பா




செய்தி வந்த உடனே பஸ் பிடித்து சேலம் போய்ப் பார்த்தால் அப்பா படுக்கையில் உட்கார்ந்திருந்தார். “எங்கே வந்தே?” என்றார்.

“உனக்கு உடம்பு சரியில்லைன்னு” என்று மழுப்பினேன். “நேற்று வரை சரியில்லாமல்தான் இருந்தது. டாக்டர்கள் என்னமோ பண்ணி உட்கார வைத்து விட்டார்கள். சாப்ட்டியா?” என்றார். “எனக்கு என்ன வாங்கிண்டு வந்தே?”

“என்னப்பா வேணும் உனக்கு?”

“உப்பு பிஸ்கட். கொஞ்சம் பாதாம் அல்வா. அப்பறம் ஒரு சட்டை வாங்கிக் கொடுத்து விட்டுப் போ.”

சட்டையைப் போட்டுவிட்டதும் “எப்படி இருக்கேன்?” என்றார்.

பல்லில்லாத சிரிப்பில் சின்னக் குழந்தை போலத்தான் இருந்தார்.

நர்ஸ் வந்து “தாத்தா உங்க மகன் கதைகள் எல்லாம் படிச்சேன். ரொம்ப இன்டெலிஜெண்ட்” என்றதற்கு “நான் அவனை விட இன்டெலிஜெண்ட்” என்றார்.

பேப்பர் பேனா எடுத்து வரச் சொல்லி “உன் முன்னோர் யார் என்று அபபுறம் தெரியாமல் போய் விடும்” என்று வம்சாவழியைச் சொல்லி எழுதிக் கொள்ளச் செய்தார். ஞாபகம் தெளிவாக இருந்தது. முதன் முதன் முதல் திருவாரூரில் நூறு ரூபாய் சம்பளத்தில் பதவியேற்ற தேதி சொன்னார். கணக்கம்பாளையம் பின்கோடு நம்பர் சொன்னார். “பழைய விஷயங்கள் எல்லாம் ஞாபகம் இருக்கிறது. சமீப ஞாபகம்தான் தவறிப்போகிறது. நீ வந்தால் கேட்கவேண்டும் என்று ஏதோ ஒன்று. என்ன என்று ஞாபகம் இல்லை. ஞாபகம் வந்ததும் ஒரு காகிதத்தில் குறித்து வைக்கிறேன்”

“அப்பா உனக்கு எத்தனை பென்ஷன் வருகிறது தெரியுமோ?”

“தெரியும். ஆனால் பணத்தில் சுவாரஸ்யம் போயவிட்டது. எத்தனை இருந்தால் என்ன? நீங்கள் எல்லாம் என்னைக் காப்பாற்றாமலா போவீர்கள்?”

“ஏதாவது படித்துக் காட்டட்டுமா அப்பா?”

“வேண்டாம். நிறையப் படித்தாயிற்று. இப்போது அதெல்லாம் எதற்கு என்று ஒரு அலுப்பு வந்து விட்டது. நீ போ. உனக்கு எத்தனையோ ஜோலி இருக்கும். அமமாவின் வருஷாப்திகம் ஏப்ரல் ஒண்ணாம் தேதி வருகிறது. அப்போது வநதால் போதும். நான் படுத்துக் கொள்ளட்டுமா? களைப்பாக இருக்கிறது. காலையில் போவதற்குள் ஒரு முறை சொல்லிவிட்டுப் போ” என்றார்.

காலை புறப்படும்போது தூங்கிக் கொண்டிருந்தார்.

பெங்களூர் திரும்பி வந்து ஒரு வாரத்துககுள் மறுபடி சீரியஸ் என்று தந்தி வந்தது. என்.எஸ் பஸ்ஸில் “என்ன ஸார் அடிக்கடி சேலம் வர்றிங்க?”

“எங்கப்பா சீரியஸா இருக்கார்ப்பா.”

“ஓஹோ அப்படிங்களா? டேய் அந்த மல்லி மூட்டையை பாத்து இறக்குங்கடா.”

ஸ்பெஷல் வார்டில் அவரைப் பார்த்து திடுக்கிட்டேன். படுக்கையில் கண் மூடிப் படுத்திருந்த முகத்தில் தாடி. காலில் பட்டர்ஃப்ளை ஊசி போட்டு சொட்சொட்டென்று ஐவி க்ளுக்கோஸ் உள்ளே போய்க்கொண்டிருந்தது. சுவாச மூக்கில் ஆக்ஸிஜனும் ஆஸ்பத்திரி வாசனையும் வயிற்றைக் கவ்வியது.

கண்ணைக் கொட்டிக் கொட்டிக் கண்ணீரை அடக்கிக் கொண்டு “அப்பா அப்பா” என்கிறேன். கண்ணைத் திறக்கிறார் பேசவில்லை. “நான்தான் வந்திருக்கிறேன்” என்று கையைப் பற்றுகிறேன். பேசும் விருப்பம் உதடுகளில் தவிக்கிறது. கையை மெல்லத் தூக்கி மூக்கில் இருக்கும் குழாய்களை அகற்றப் பார்க்கிறார். தோற்கிறார்.

“நீ போனப்புறம் ஒரு நாளைக்கு சரியா இருந்தார் அதுக்கப்புறம் இப்படி மறுபடி…”

படுக்கையில் பூஞ்சையாக நெற்றியைச் சுருக்கிகொண்டிருக்கும் அபபாவைப் பார்க்கிறேன். இவரா ஆயிரம் மைல் தனியாகக் கார் ஓட்டிக் கொண்டு சென்றவர்? இவரா மின் வாரியத்தை தன் டிஸிப்ளினால் கலக்கியவர் “நல்ல ஆபிஸர்தான் ஆனா கொஞ்சம் முன்கோபிங்க” இவரா அணைக்கட்டின் பாரப்பெட் சுவரின் மேல் ஏறிக் கொண்டு விளிம்பில் ஒரு ஃபர்லாங் நடந்தவர்? “என் வில் பவரை டெஸ்ட் பண்ணிப் பார்ககணும் போலிருந்தது” இன்ஜினியரிங் படிப்பையும் இளம் மனைவியையும் விட்டுவிட்டு காஙகிரசில் சேருகிறேன் என்று காணமால் போனவர் இவரா? “ஐ வாஸ் கிரேஸி தட் டைம்”

மேல் நர்ஸ் வந்து அவரை உருட்டி முதுகெல்லாம் யுடிகொலோனும் பேபி பவுடரும் போடுகிறார்.- “பெட்ஸோர் வந்துரும் பாருங்க.”

ஸ்டாஃப் வந்து பக்கத்துககு ஒரு ஊசி கொடுத்து “நீங்கதான் ரைட்டர்ங்களா?” என்கிறார். நான் ஆஸ்பத்திரியைத் திகைத்துப் போய்ப் பார்க்கிறேன்.

ஆஸ்பத்திரியிலிருந்து தப்பிப்பதைப் பற்றி ஸர்வைவல் புத்தகங்கள் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள். டாக்டர்கள் எல்லோரும் நல்லவர்கள். ஆனால் ஸ்பெஷலிஸ்டுகள்.

“ஒரு ஸிடி ஸ்கான் எடுத்துரலாமே டாக்?”

“முழுங்கறதுக்கு ரொம்ப கஷ்டப்படறார். ஒரு பேரியம் மீல் கொடுத்துப் பார்த்துரலாம். அப்றம் ஒரு ஆன்ஜியோ.” “ஃப்ளுயிட் ரொம்ப கலெக்ட் ஆயிருச்சு. புட் ஹிம் ஆன் ஹெவி டோஸ் ஆஃப் லாஸிக்ஸ்!”

எல்லா டாக்டர்களுமே திறமைசாலிகள்தான், நல்ல நோக்கமுள்ளவர்கள்தான், ஆனால்…

ராத்திரி முழுக்க அவர் அருகில் கீழே படுத்திருக்கிறேன். தூக்கமில்லை. கொஞ்ச நேரம் வராந்தாவில் உட்கார்ந்து காற்று வாங்குகிறேன். கான்க்ரீட் மேடையில் வேப்ப மரம் முளைத்திருக்கிறது. காகங்கள் ஸோடியம் விளக்குகளைச் சூரியன் என்று குழம்பிப் போய் இரை தேடச் செல்கின்றன. இங்கிருந்து அப்பா தெரிகிறார். அசையாமல் படுத்திருக்கிறார். முகத்தில் வேதனை எழுதியிருக்கிறது. கூப்பிடுகிறாரா? கிட்டப் போய்க் கேட்கிறேன்.

“என்னப்பா?”

“போதும்ப்பா என்னை விட்டுருப்பா” என்று மெல்லச் சொல்கிறார். வில்லியம் ஹண்ட்டரின் கட்டுரை ஞாபகம் வருகிறது.

If I had strength enough to hold a pen, I would write how easy and pleasant it is to die.

பொய்!

ஆனால் இவர் அவஸ்தைப்பட்டால் எனக்கு அபத்தமாகத்தான் படுகிறது. இவர் செய்த பாவம் என்ன? ப்ராவிடணட் பண்டில் கடன் வாங்கி பையன்களைப் படிக்கவைத்ததா? அவர்களுக்கு வரதட்சணை வாங்காமல் கல்யாணம் செய்து வைத்ததா? ஏழை உறவினர்களுக்கும் ஆசிரியருக்கும் மாசாமாசம் பென்ஷனிலிருந்து பணம் அனுப்பியதா? குடும்ப ஒற்றுமைக்காகப் பாடுபட்டதா? பிரபந்தத்தில் ஒரு வரி விடாமல் மனப்பாடமாக அறிந்ததா?

காலை ஐந்து மணிக்கு பக்கத்தில் இருக்கும் சர்ச் எழுந்து ஒலி பெருக்கி மூலம் ஏசுநாதரைப் பேசுகிறது. அப்பாவுக்கு இது கேட்குமா? ரேடியோ சிலோனில் சுவிசேஷத்தை தவறாத ஆர்வததுடன் கேட்கும் தீவிர வைஷ்ணவர் “பைபிளில் பல இடஙகளில் நம்ம சரணாகதி தத்துவம் சொல்லியிருக்கு தெரியுமோ? சில இடஙகளில் ஆழ்வார் பாடல்களுக்கும் அதற்கும் வித்தியாசமே தெரிவதில்லை” பங்களூரில் குரான் முழுவதையும் படிக்கச் சொல்லிக் கேட்டது நினைவுக்கு வருகிறது.

ஆஸ்பத்திரி புது தினத்துக்குத் தயாராகிறது.மணி அடித்துவிட்டு சில்லறை கொடுக்காதவர்களை எல்லாம் விரட்டுகிறார்கள். டாக்டர் ரவுண்ட்ஸ் வருகிறார். “இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருப்பார்னு சொல்லமுடியாது. இன்னிக்கு கொஞ்சம் இம்ப்ருவ்மெண்ட் தெரிகிறது. கன்னத்தைத் தட்டி “நாக்கை நீட்டுங்கோ.” மெல்ல நாக்கை நீட்டுகிறார்.

“பேர் சொல்லுங்கோ”

“சீனிவாசரா..”

“அஃபேஸியா ஆர்ட்டீரியோ ஸ்கிலிரோஸிஸ். ஹி இஸ் மச் பெட்டர் நௌ. டோண்ட் ஒர்ரி!” புதுசாக பல்மனரி இடீமா (pulmonary oedema) என்று ஒன்று சேர்ந்துகொண்டு அவரை வீழ்த்தியது.

சென்ற மாதம் இருபத்திரண்டாம் தேதி பிற்பகல் மூன்று மணிக்கு இறந்து போனார். உடன் அப்போது இருந்த சித்தி “கண் வழியா உசிர் போச்சு “என்றாள். பம்பாயிலிருந்து தம்பி வரக் காத்திருந்து மூன்று பிள்ளைகளும் அவரைச் சுற்றி நின்று கொண்டு அவர் மார்பைக் கண்ணீரால் நனைத்தோம். வீட்டுக்குக் கொண்டு வந்ததும் வாசலில் நெருப்புக் கொண்டு வைத்தார்கள். நண்பர்கள் வந்தார்கள். ஆஸ்பத்திரி வண்டியில் எடுத்துக் கொண்டு போய் “வீட்டில் ஒருவரில்லை வெட்டவெளியாச்சுதடி காட்டில் எரித்த நிலா கனவாச்சே கண்டதெல்லாம்” என்று முழுமையாக எரித்தோம்.

காலை எலும்புகளைப் பொறுக்கிச் சென்று பவானி போய்க் கரைத்தோம். இந்து பேப்பரில் இன்ஸர்ஷன் கொடுத்தோம். “மாலை மலர்ல செய்தி வந்திருந்ததே பார்த்திங்களோ?”

உறவுக்காரர்கள் வந்தார்கள். சினிமாவுக்குப் போனார்கள். வாத்தியார் கருட புராணத்தின் பிரதியை என்னிடம் கொடுத்தார். பிராமண போஜனம் செய்விக்காதவர்களை எல்லாம் சிரித்துக்கொண்டே கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு நதியைக் கடப்பதற்கு கோதானம் இல்லையென்றால் ஒரு தேங்காய் கிஞ்சித்து ஹிரண்யம்! அப்பா மரணத்தைப் பற்றி ஒரு முறை சொன்னது ஞாபகம் வருகிறது “அது ஒரு முற்றுப் பள்ளி. We cease to exist. எபிக்யுரஸ் சொன்னதை மறுபடி படி!”

“Death is nothing to us since so long as we exist death is not with us but when death comes, we do not exist”.

ஒன்பதாம் நாள்… பத்தாம் நாள்… பதினோராம் நாள்… பிரேதத்தின் தாகமும் தாபமும் தீருவதற்காக அதன் ரெப்ரசெண்டேடிவ்வாக வந்த “ஒத்தன்” என்னைப் பார்த்து சிரித்து “நீங்க எழுதின ரத்தத்தின் நிறம் சிவப்பு குங்குமத்தில நன்னா இருக்கு ஸார் அடுத்த தடவை ஒரு ஸோஷல் தீமா எடுததுண்டு எழுதுங்களேன்!”

சேலம் கடைத் தெருவில் பத்தாறு வேஷ்டிகளுக்கும சொம்புகளுக்கும் அலைந்தோம். ஸ்ரீரங்கத்திலிருந்து ப்ரபந்த கோஷ்டி வந்து எங்கள் தலையில் பரிவட்டம் கட்டி நாலாயிரமும் ராமானுஜ நூற்றந்தாதியும் சரம ஸ்லோகமும் சொல்லிவிட்டு – “எனக்கினி வருத்தமில்லை” – இரண்டு மணி பஸ் பிடித்துப் போனார்கள்.

“அவ்வளவுதாம்பா பிள்ளைகள்ளாம் சேர்ந்துண்டு அவரை பரமபதத்தில ஆசார்யன் திருவடி சேர்த்துட்டேள். இனி அந்த ஆத்மாவுக்கு ஒரு குறையும் இல்லை! மாசிய சோதம்பத்தை மட்டும் ஒழுங்கா பண்ணிடுஙகோ”.

சுபஸ்வீகாரம். எல்லோரும் பந்தி பந்தியாக சாப்பிடுகிறோம். எட்டணா தட்சணைக்காக வாசல் திண்ணையில் ஒன்பது பேர் காலையிலிருந்து காத்திருக்கிறார்கள். காஷுவாலிடியில் எனக்கு ட்ரங்க் டெலிபோன் வருகிறது.தொடர்கதைக்கு டைட்டில் கேட்டு. பங்களுர் திரும்பி வருவதற்கு முன் அப்பாவின் அந்த கடைசிக் குறிப்பைப் பார்க்கிறேன்.

Ask Rangarajan about Bionics!

ஓவர்சீஸ் பாங்கில் மீசையில்லாத என்னைப் பார்த்து சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்கிறார்கள். அப்பாவின் ‘எய்தர் ஆர் சர்வைவர்’ அக்கவுண்டில் அவர் தகனத்துககு ஆன செலவு முழுவதும் இருக்கிறது!



நன்றி: சுஜாதா 
                                                                           

Friday, October 19, 2012

அப்பா


எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...



முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...




அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது


உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...



கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?


சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?



லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்...


அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன்
அம்மா செல்லமான
அப்பா செல்லம் என
இன்று
அப்பா சென்ற பின்னர்
நான் யார் செல்லம்..?


எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?


சொல்லிக்
கொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை
இல்லை என்றும்
சொன்னதுமில்லை
வேண்டாம் எனக்
கூறியதும் இல்லை
இருந்தும் ஏதோ
ஒன்றினால்
கட்டுப்படுத்தியது
அப்பாவின் அன்பு


நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..


அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்...




 இது  ஒரு மீள்பதிவு - நன்றி:  நவீன் பிரகாஷ்              
                                                

Wednesday, May 30, 2012

PG TRB 2012 Keys & Solutions.


PG TRB 2012 keys and answers of Education & GK:



Rousseau's Educational Philosophy is                                                              - Negative education


Mahila Samakhya is a plan for the development of                                           - Women


Viswabharathi is located at                                                                              - West Bengal


Who is related to freedom in learning situation?                                                - Krishnamoorthy


Which media is suitable for distance education                                                 - Television


The book "Education of Man" is written by                                                      - Froebel


Open university was started in England on                                                        - 1969


Mobile school was first recommended by                                                         - McDonald


Who said 'Education is related to life'?                                                              - Gandhi


Span of vision is measured by                                                                           - Tachistoscope


Which theory of intelligence was supported by Alfred benet                               - Single factor


Psychoanalytic approach of personality was first introduced by                          - Freud


In Gagne's hierarchy learning has been divided into                                            - 8 types


How many chromosomes are there in human body?                                           - 46


When learnt material is reproduced without any manipulation, it is called             - whole memory


Non-verbal test of intelligence is suitable for                                                       - all of them


The book "Theory of Motivation" is written by                                                   - Maslow


Wechsler developed an intelligence test for children in the year                           - 1949


The UNESCO had supported the proposal of                                                   - education for all


Which district has the lowest density of population in Tamilnadu?                       - Perambalur


Which country started experiments in Distance Education in the year 1873?       - USA


Child Labour Eradication Day is held on                                                            - June 12


Which is called formal agency of Education?                                                      - School


Pace setting school is renamed as                                                                      - Navodaya school.


How many open schools are there in Tamilnadu?                                               - 25


Functional Literacy Programme had been started for                                          - farmers


National Policy on Education was adopted in the year                                       - 1986


In which level, Mahila Mandals are organised for adult education?                     - Village level


India won World Cup Hockey in the year                                                         - 1975


The full form of NABARD is                                                                             - National Bank for
                                                                                                                           Agriculture & Rural
                                                                                                                           Development


The seaport of Pandiyas was                                                                             - Korkai


Who wrote the book "Gora"?                                                                            - Rabindranath Tagore


The name by which Ashoka is generally referred to in his inscriptions is               - Priyadarshi


 Which of the following provided the revenue for the Delhi Sultanate?                  - Kharaj


The common refrigerant in domestic refrigerator is                                               - Freon-12


The present Secretary General of the United Nations Organisation is                    - Ban Ki-moon


The Constitution of India came into force on                                                        - 26th January, 1950


The President of India can nominate how many members to Rajya Sabha?           - 12



Note: Candidate are remained that final PG TRB keys will be Published by 
           Teachers Requirement Board.                           

Tuesday, May 1, 2012

மே தினம்



தங்கள் உதிரத்தை வேர்வையாகச் சிந்தி உழைத்து மானுட நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய உழைப்பாளர்கள், 8 மணிநேரம் கொண்ட உழைப்பு நாளை தங்களுடைய உரிமையாக போராடிப் பெற்ற நாளே மே தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது!

எல்லோரும் நினைப்பதுபோல மே தினம் என்பது முதன் முதலில் பொதுவுடமை புரட்சி நடந்த சோவியத் ரஷ்யாவிலோ அல்லது அதன் பிறகு பொதுவுடமை நாடான சீனாவிலோ பிறக்கவில்லை. மாறாக, பொதுவுடமைத் தத்துவத்திற்கு பெரும் எதிர்ப்பு காட்டிவரும் அமெரிக்காவில்தான் முதன் முதலில் உழைப்பாளர்களின் அடிப்படை உரிமை நிலைநாட்டப்பட்டது. இன்றிலிருந்து 126 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் அந்த உரிமை கோரிக்கை போராட்ட வடிவத்தைப் பெற்றது. ஒவ்வொரு நாளும் 10 மணிநேரம், 12 மணிநேரம், 14 மணிநேரம் என்று உழைப்பாளர்களும், பணியாளர்களும் நேர வரையறையற்று வேலை வாங்கப்பட்டு வந்த அந்த நாளில், 8 மணிநேரம் மட்டுமே பணியாற்றுவோம் என்றும், வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் கோரியும் தொழிலாளர்கள் முதன் முதலாக 1880ஆம் ஆண்டு குரல் கொடுத்தனர். அந்த உரிமை கோரிக்கை அடுத்த 4 ஆண்டுகளில் மிகப்பெரிய தொழிலாளர் ஒற்றுமைக்கு வழிவகுத்தது. 1884ஆம் ஆண்டு, தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபெடரேஷன் ஆஃப் ஆர்கனைஸ்ட் டிரேடர்ஸ் அண்ட் லேபர் யூனியன்ஸ்) ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அடுத்த 2 ஆண்டுகளில் அதாவது 1886ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதி முதல் அனைத்து தொழிலாளர்களும் நாள் ஒன்றிற்கு 8 மணிநேரம் மட்டுமே பணியாற்றுவோம் என்று கூறி அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்தது. ஆனால், தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

1886ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிகாகோ நகரில் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் கலந்துகொண்ட மே தின இயக்கம் தொடங்கியது. தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை உடைக்க சிகாகோ கமர்ஷியல் கிளப் எனும் முதலாளிகள் சங்கம் 2 ஆயிரம் டாலர்கள் செலவு செய்து இயந்திரத் துப்பாக்கிகளைப் பெற்று இலினாய்ஸ் தேசியப் படையினருக்கு வழங்கி தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை ஒடுக்குமாறு கேட்டுக் கொண்டது. உரிமைகள் நிலைநாட்ட உறுதிபூண்ட அந்தத் தொழிலாளர் இயக்கம், சிகாகோவில் உள்ள பலதரப்பட்ட தொழில்களில் ஈடுபட்டிருந்த மேலும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கவர்ந்தது.
ஆனால், தொழிலாளர்களின் இயக்கத்தை உடைத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்ட சிகாகோ கமர்ஷியல் கிளப் உறுப்பினர்களின் தூண்டுதலின் காரணமாக இலினாய்ஸ் தேசியப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர்
தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டிக்க அனார்க்கிஸ்ட் எனும் தொழிலாளர் அமைப்பு மே 4ஆம் தேதி ஹே மார்க்கெட் ஸ்கொயர் எனுமிடத்தில் ஒரு கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது. அந்தக் கண்டனக் கூட்டத்தில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கூடினர். கூட்டம் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 180 பேர் கொண்ட இலினாய்ஸ் தேசியப் படையினர் தொழிலாளர்களை கலைந்து செல்லுமாறு கட்டளையிட்டனர். மேடையில் பேசிக் கொண்டிருந்தவர்கள் கீழே இறங்கியபோது திடீரென்று தேசியப் படையினர் மீது குண்டு ஒன்று வீசப்பட்டது. அதில், ஒருவர் கொல்லப்பட்டார். 70 பேர் காயமடைந்தனர். கோபமுற்ற தேசியப் படையினர் தொழிலாளர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். பலர் காயமுற்றனர். தேசியப் படையினர் மீது குண்டு வீசியது யார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால், அதை காரணமாக்கி தொழிலாளர் இயக்கத்தின் மீது அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. இயக்கத்தை ஏற்பாடு செய்து வந்த தலைவர்களின் இல்லங்கள் சோதனை என்ற பெயரில் சிதைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு எந்தக் காரணமும் கூறப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டனர். தொழிலாளர் இயக்கத்தை முன் நின்று நடத்திய அனார்க்கிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த 8 பேர் கொலை சதித் திட்டம் தீட்டியதாகக் கூறி வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 8 பேரையும் குற்றவாளிகள் என்று எவ்வித ஆதாரமும் இல்லாமல் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் அனைவரும் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட வேண்டும் என்றும் தண்டனை விதிக்கப்பட்டது. 1887ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி அனார்க்கிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஆல்பர்ட் பார்ஸன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், அடாஃல்ப் ஃபிஷ்ஷர், ஜார்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டனர். லூயிஸ் லிங்க் என்பவர் சிறைச் சாலையில் தற்கொலை செய்து கொண்டார். மற்ற மூவரும் 1893ஆம் ஆண்டு மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்
இதனைத் தொடர்ந்து தொழிலாளர்களின் உரிமை கோரிக்கையும், இயக்கமும் வலிமை பெற்றது. 8 மணிநேரம் கொண்ட உழைக்கும் தினமும், வாரத்தில் ஒரு நாள் விடுமுறையும் கிடைத்தது. உலகெங்கிலும் உழைக்கும் மக்களின் உரிமைகள் நிறைவேற, மானுடத்தை உயர்த்த அரும்பாடுபட்ட அந்த உழைக்கும் மக்கள் கூட்டத்தை மனிதாபிமானத்தோடு பார்க்க உலகம் கற்றுக்கொண்டது. அமெரிக்காவில் உருவான மே தினம் தொழிலாளர்களின் ஒற்றுமை தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்பதே மே தினம் அளித்த உரிமை முழக்கமாகும்.
உழைக்கும் உழைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்!!!