Sunday, December 11, 2011

வீழ்வேனென்று நினைத்தாயோ? X


ந்த அறிக்கை 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை அரசுக்கு அனுப்பப் பட்டு இருந்தது. முழு அழிவு நடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வெளியான அறிக்கை அது. இடம்பெயர்ந்த தமிழ் மக்கள், முற்றாக அழிந்துவிடுவார்களோ என்று அச்சம்கொள்ளத்தக்க வகையில் தாக்குதல் தொடுக்கப்பட்டு இருந்த நேரம் அது. வெகுமக்களுக்கான உணவை வாங்கும் பொறுப்பைப் பெற்றிருந்த முல்லைத் தீவு மாவட்டத்தின் ஆட்சித் தலைவர்தான் அந்தக் கடிதத்தை எழுதி இருந்தார். மனிதத் துயரங்களைக் காணச் சகிக்க முடியாமல் அவர் எழுதிய இந்தக் கடிதம், மனசாட்சி உள்ள மனிதர்களை உலுக்கி எடுத்துவிடுகிறது.
 ”உணவு கிடைக்காமல் தொடர்ந்து மக்கள் பட்டினி இருக்கிறார்கள். காட்டுக் கிழங்குகளையும் இலை தழைகளையும் உண்டு, உயிர் பிழைத்துக்கொள்ள முயற்சிக் கிறார்கள். ஆனாலும், தங்களின் சாவை அவர்களால் நிறுத்த முடியவில்லை. பட்டினிச் சாவுகள் அதிகரிக்கின்றன. மருத்துவமனைக்குத் தூக்கி வரப்படுபவர்களில் பலர் இறந்தேதான் கொண்டுவரப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பட்டினியால் செத்தவர்கள் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இது நாளாக நாளாக இன்னமும் கூடுதல் ஆகலாம்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், ”மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த, பட்டினியால் செத்துப்போனவர்களை மட்டும்தான் எங்களால் கணக்கிட்டுச் சொல்ல முடிகிறது. மற்றவர் களை இந்தக் கணக்கில் சேர்க்கவில்லை” என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப் பட்டு உள்ளது. உண்மைதான்… பதுங்கு குழிகளில், சாலைகளில், புதர் மறைவிடங் களில் இருந்தபடி பசித் தீ பற்றிக்கொள்ள… அப்படியே சாய்ந்து மரணமுற்றவர்களின் கணக்கு யாரிடம் இருக்கிறது?
பட்டினி ஒரு வன்முறை. ஆதிக்கச் சக்திகள் தங்கள் அதிகாரத்துக்கு, வெகுமக்களை அடிமைப்படுத்திக்கொள்ள பட்டினி போட்டுப் பார்க்கிறார்கள். இன ஒடுக்குமுறையின் மூலம் தமிழ் மக்களை அடிமையாக்கிக்கொள்ள முயன்று வரும் இலங்கை, குண்டு போட்டு அழிப்பதற்கு இணையாகப் பட்டினி போட்டு அழிப்பதையும் ஒரு கொள்கையாகவே உருவாக்கி வைத்துள்ளது. உள்நாட்டுப் போரும் இடப்பெயர்வும் பதுங்குகுழிகளும் வெளி உலகுக்கு எதுவுமே தெரியாமல் பட்டினிக் கொலை செய்வதற்கு, இலங்கையின் இனவெறி அரசுக்கு வசதி செய்து கொடுத்துவிட்டது.
முள்ளி வாய்க்காலுக்கு முந்தைய இடப்பெயர்வு காலத்தில், போர்க்களத்தில் சிக்கியுள்ள மக்கள்தொகையைப் பற்றி, இலங்கையின் ராணுவ அமைச்சகம் ஓர் அறிக்கையை வெளியிட்டு இருந்தது. 2009-ம் ஆண்டு ஜனவரி கடைசி வாரத்தில் வெளியான இந்த அறிக்கையின்படி, 70 ஆயிரம் மக்கள் இருப்பதாகக் கணக் கிட்டுச் சொல்லி இருந்தார்கள். இது உண்மையானதுதானா என்ற கேள்வி எழுந்தபோது, மற்றொரு தகவல் கிடைத்தது. அந்தத் தகவல் மிகுந்த அதிர்ச்சியைத் தரத் தக்கதாக இருந்தது. அரசாங்கம் வகுத்து இருந்த அருவருக்கத்தக்க சூழ்ச்சி ஒன்று அதில் மறைந்து இருந்ததைப் புரிந்துகொள்ள முடிந்தது.
ஆட்சியாளரின் கணக்கெடுப்பின்படி, 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இலங்கையின் கிளிநொச்சி, வன்னி ஆகிய இரு மாவட்டங்களின் மொத்த மக்கள்தொகை 4 லட்சத்து 20 ஆயிரம். நான்கு மாதங்களில் இது எவ்வாறு 70 ஆயிரமாகக் குறைந்துபோனது என்ற கேள்வி இயல்பாகவே எழும். இலங்கை அரசு தான் பொறுப்பேற்று உள்ள உணவு விநியோகத்தைக் குறைத்துக்கொள்ளவும் ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதலில் வழங்க வேண்டிய உணவுப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செல்வதைத் தடுக்கவும் இப்படிப் பொய்யான புள்ளிவிவரத்தை வெளியிட்டு இருந்தது. பட்டினியால் மக்கள் செத்துப்போக வேண்டும் என்பதைத் தவிர, இதற்கு வேறு என்ன நோக்கம் இருக்க முடியும்?
பட்டினிச் சாவுபற்றிய இந்த அறிக்கையைப்போலவே, உணவுக் கையிருப்புபற்றிய மற்றோர் அறிக்கையும் வன்னியில் இருந்து இலங்கை அரசுக்கு அனுப்பப்பட்டு இருந்தது. கிளிநொச்சி மண்டலத்தின் உணவுப் பொருள் வழங்கும் துறையின் துணை இயக்குநர் அனுப்பிய அவசர அறிக்கை அது. இதை ஓர் அபாய அறிவிப்பு என்றுதான் கருத வேண்டும். ”2009-ம் ஆண்டு பிப்ரவரி 29-ம் தேதி இந்த அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. 83 ஆயிரம் குடும்பங்களுக்கு உணவு அளிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. இதற்கு 4,950 மெட்ரிக் டன் எடை உள்ள உணவுப் பொருட்கள் தேவை. ஆனால், கையிருப்பில் உள்ளது 110 மெட்ரிக் டன் மட்டுமே” என்று கூறுகிறது அந்த அவசர அறிக்கை. இதை அடிப்படையாகக்கொண்டு கணக்கிட்டால், மக்களின் தேவையில் அரை சதவிகித உணவுகூட, அவர்களின் கையிருப்பில் இல்லை என்று தெரிகிறது. அதைக் கிட்டத்தட்ட உணவற்ற நிலை என்றுதான் கூற வேண்டும். இது பிப்ரவரி மாதக் கடைசி நிலவரம் என்றால், யுத்தத்தின் இறுதிக் கட்டமான மே மாத இரண்டாவது, மூன்றாவது வாரங்களில் என்ன நடந்து இருக்கும் என்பதை நம்மால் கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியவில்லை.
ஒரு பிடி உணவுக்காக அந்த மக்கள் பட்ட அவலங்கள் வார்த்தைகளில் விவரிக்கக் கூடியவையாக இல்லை. வயது முதிர்ந்த தாய் ஒருத்தி, தாம் அடைந்த துயரங்களை இணையதளம் ஒன்றில் பதிவுசெய்து இருக்கிறாள். தாது வருடப் பஞ்சம்பற்றி தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். வறண்டு வெடித்த நிலங்களில் நீர் அற்றுப்போக, மாட்டுக்கு வைக்கப்படும் தவிட்டில் ஒளிந்து இருக்கும் அரிசிக் குருநொய்யைத் தேடிப் பிடிக்க அலைந்து திரிந்ததாகக் கதைகள் உண்டு. தவிட்டை மேலும் மாவாக்கி, அதை அடுப்பில் சூடேற்றி கோரப் பசியைத் தணித்துக்கொண்டதாகவும் பஞ்சம்பற்றிய தகவல்கள் கூறுகின்றன. ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில், தாது வருஷத்துப் பஞ்சத்தைவிட உணவுப் பஞ்சம் கூடுதலாகிவிட்டது என்பதை அந்தத் தாயின் வார்த்தைகள் உறுதிப்படுத்துகின்றன.
”நஞ்சை வயல்வெளிகள் அமைந்த வன்னி நிலப் பரப்பில், அரைத்து நெல்லை அரிசியாக மாற்றித் தரும் ஆலைகளுக்குப் பஞ்சம் இல்லை. ஒதுக்குப்புறங்களில் நெல் அரைத்த தவிடும் உமியும் அம்பாரமாகக் குவித்துவைக்கப்பட்டு இருந்தன. உணவு இன்றித் தவித்த நாங்கள், அதைப் பார்த்தோம். பெண்கள் பெருங்கூட்டமாக விரைந்து சென்றோம். தவிடு, உமி நடுவே கொஞ்சமேனும் அரிசி கிடைக்குமா என்று தேடிப் பார்த்தோம். காற்றில் தூற்றிப் புடைத்துப் பார்த்து அதில் இருந்து அரிசி குருநொய்யைப் பிரித்து எடுப்பதற்குப் பெரும்பாடுபட்டோம்.
உச்சி வெயிலில் பூமி அனலைக் கக்கிக்கொண்டு இருக்கிறது. இரைச்சல் கேட்கிறது. விமானமா? எல்லோரையும் திகில் பற்றிக்கொண்டது. வயிற்றுப் பசியா… அல்லது மரணமா..? பசியால் துடிதுடிக்கும் பொடிசுகளைப் பற்றித்தான் யோசனை. குண்டுகள் விழுந்து, செத்தாலும் பரவாயில்லை என்று மனப் பயத்தை அடித்துத் துரத்திவிட்டு, குழந்தைகள் உயிர் பிழைக்கும் ஒரு குவளைக் கஞ்சிக்காக, அந்தத் தவிடும் உமியும் குவிந்து உள்ள பொதிகளோடு போராட்டம் நடத்தினோம். சுட்டெரிக்கும் வெயிலில் வியர்வைப் பெருக்கெடுத்து ஓடியது. உடல் களைத்து, கண்கள் இருள் அடைந்தன. புடைக்கும் முறத்தை இறுகப் பற்றிக்கொண்டோம். நம் சந்ததி உயிர் பிழைக்க வேண்டும் என்ற மன உறுதியுடன்” என்கிறார் அந்த வயது முதிர்ந்த தாய்.
நான்கு மணி நேரம் புடைத்து எடுத்தாலும் இரண்டு படி அரிசிக் குருநொய்யைச் சேகரிப்பதுகூட, மிகவும் கடினமானது என்று அவர்கள் கூறுகிறார்கள். கிளிநொச்சி யில் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் அவர் கள் புறப்பட்டபோது, ஒரு கிலோ அரிசி 40 ரூபாய்க்கு விற்றதாகக் கூறப்படுகிறது. மே மாதம் 10-ம் தேதிக்கு மேல், ஒரு கிலோ அரிசி 1,000 ரூபாய்க்கு  விற்கப்பட்டதாகத் தெரிகிறது. கடைசி நேரத்தில் குடும்பத்தின் பசியைப் போக்க தன்னிடம் இருந்த மோட்டார் சைக்கிளை விற்று, இரண்டு படி அரிசியை ஒருவர் வாங்கினார் என்ற தகவல் நமக்கு மயக்கத்தை வரவழைக்கிறது!
- விதைப்போம்…
நன்றி: சி.மகேந்திரன் & விகடன் 



No comments:

Post a Comment