Sunday, December 11, 2011

வீழ்வேனென்று நினைத்தாயோ? XII இறுதி


முள்ளி வாய்க்காலில் இன அடை யாளங்களை அழிக்க கடைசிக் கொள்ளியை வைக்கும் திட்டத்தில் இருந்தது இலங்கை யின் இனவெறி அரசு. ஓர் ஆண்டுக் காலம் இடப்பெயர்வால் பெரும் துயரில் இருந்த மக்களை முள்ளி வாய்க்கால் வந்து சேருமாறு அரசுத் தரப்பில் கூறினார்கள். குண்டு வீச்சுகள் இல்லாத பிரதேசங்கள் என்று சில பகுதிகளும் அறிவிக்கப்பட்டு இருந்தன. ஹிட்லர், யூத மக்களை இவ்வாறு தான் ‘பாதுகாப்பான இட’த்துக்குஅழைத்து வருவதாகக் கூறினான். குழந்தைகளுடன் யூத மக்கள் குடும்பம் குடும்பமாக அங்கு வந்து சேர்ந்தார்கள். போர் தந்த கொடுமை யில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று மக்கள் நம்பினார்கள். ஒரு பெருவெளியின் வாசல் கதவு, அவர்களைத் தன் வாய் திறந்து அழைத்தது. சாட்சியங்கள் எதுமே இல்லாமல், யூத மக்களைக்கொன்றுமுடித்த விஷ வாயுக் கூடம் அது.
இலங்கை அரசு அறிவித்து இருந்த, குண்டுகள் வெடிக்காத பிரதேசத்துக்கும் அந்த விஷ வாயுக் கூடங்களுக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. விஷ வாயுக் கூடங்களை நான்கு புறமும் விஷ வாயு வெளியேறாத வாறு அமைத்து இருப்பார்கள். யாருமே அங்கு இருந்து தப்பிச் செல்ல முடியாது. முள்ளிவாய்க்கால் பிரதேசமும் யாரும் எங்கும் தப்பித்துக்கொள்ளாதவாறு அமைந்த நிலப் பகுதி. ஒருபுறம் நந்திக் கடல், மறுபுறம் பெருங்கடல். இதற்கு இடைப்பட்ட பகுதி யில்தான் மக்கள் சிக்கவைக்கப்பட்டார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப் பாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என்று அனைவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.  இலங்கை அரசு சார்ந்த பத்திரிகையாளர்களுக்குக்கூட, அங்கு அனுமதி இல்லை. ஏன்? சாட்சிகள் அற்ற பிரதேசமாக இருக்க வேண்டும் என்பது இலங்கை அரசின் உள்ளடித் தந்திரம். குறுகிய இந்த நிலப் பரப்பில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான மக்கள் குவிக்கப்பட்டு இருந்தார்கள்.
மனிதர்கள் இல்லாத வேவு விமானங்கள் அனுப்பப்பட்டு, எல்லா விவரங்களையும் இவர்கள் முன்கூட்டியே சேகரித்துக்கொண்டார்கள். நான்கு புறமும் கவச வாகனப் படைகள் சூழ்ந்து நின்றன. பல்குழல் பீரங்கிகள் தொடர்ந்து அக்னிக் குண்டுகளை உமிழ்ந்துகொண்டே இருந்தன. வான் வழியே விமானங்கள் எட்டிப் பார்த்து, மக்கள் குவிந் துள்ள இடங்களில் குண்டுகளைப் போட்டுக்கொண்டே இருந்தன. பூமி அதிர்ந்தது. கடல் அலைகள் அச்சமுற்று நின்றன. இதுதான் முள்ளி வாய்க்காலில் தமிழ் மக்கள் சந்தித்த கோரமான கொடுமை!
”பிணங்கள் சூழ்ந்த பிரதேசம்
ஜனக் கடலில் மிதந்தவை
களத்தில் இறந்தவை
கண்ட கண்ட இடமெல்லாம்
வெந்தவை, கிடந்தவை,
அழுகிச் சிதைந்தவை”  
என்று தமிழர் வாழ்க்கைபற்றி 1985-ம் ஆண்டில் ஈழத்துக் கவிஞர் மு.பொன்னம் பலம் பாடிய வரிகள்தான், இப்போது ஞாபகத்துக்கு வருகின்றன!
மனிதர்கள் மட்டும்தான் மரணம் அடை கிறார்கள். மண்ணுக்கான போராட்டங்கள் மரணம் அடைவது இல்லை. அவை தற்காலிகமாக முறியடிக்கப்படுகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன. ஆனாலும், லட்சியத்தின் நுழைவாயிலில் அடி எடுத்து வைப்பதற்குப் பல தலைமுறைகள் அவை காத்திருக்கின்றன. எல்லாமே அழிந்து விட்டது என்று எதிரிகள் நிம்மதிகொள்ளும் நேரத்தில், யாருமே எதிர்பார்க்காத தருணத்தில், அடிமரம் கிளை வெடித்து, தளிர் அவிழ்த்து, பூப் பூக்கத் தொடங்கி விடுகின்றன… பட்ட மரம் துளிர்விடும் அதிசயத்தைப் போல!
வரலாறு, அந்தந்தப் போராட்டங்களுக் கான வசந்த காலத்தை எங்கோ ஓர் இடத்தில் மறைத்து வைத்துள்ளது என்பது மட்டும் உண்மை. வீழ்ந்துவிட்டதாகக் கருதப்படும் ஈழ மக்களின் போராட்டத்துக் கான வசந்த காலமும் காலப் பெருவெளி யில், எங்கோ ஓர் இடத்தில் இருக்கத்தான் செய்யும்.
ஜனநாயக சுவாசத்தை மானுடத்துக்கு வழங்கியது பிரெஞ்சுப் புரட்சி.  ஆதிக்கங் கள் அனைத்தையும் கிழித்தெறிந்து, விடுதலை பெற்ற தேசிய இனங்கள்எல்லாம்,  முழுவதும் அழிந்துவிட்டனவோ என்ற அச்சத்துக்குப் பின்னர்தான், உயிர் பிடித்து தலை நிமிர்ந்து எழுந்து, தங்கள் வாழ்வுரிமை யைச் சாத்தியப்படுத்திக்கொண்டன. 400 ஆண்டுகள் போராடி, தங்கள் உரிமையைப் பெற்ற அயர்லாந்தை இதற்கு உதாரணமாகக் கூற முடியும். இதைப்போலவே பெல்ஜியத் தில் பிளெமிஸ் மக்களும் பின்லாந்தில் பினிஸ் மக்களும் ஸ்பெயினில் பாஸ்க் மக்களும் தங்கள் தாயக உரிமைக்காக நூற்றாண்டுகளாகப் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். வெற்றியின் விளிம்பை இப்போது தொட்டுக்கொண்டு இருக்கிறார் கள் என்பதும் உண்மைதான்!
இன அழிப்பு அரசியல், சித்திரிப்பதைப் போல இலங்கையில் தமிழ் மக்களின் போராட்டம் நிகழ்காலத்தின் வன்முறை அல்ல. காலத்தால் அழிந்துபோகாத மண்உரிமைப் போராட்டம். வரலாறு அறிந்த காலம் முதல், மண்ணில் கால் பதித்தவர்களின் உரிமைக் குரல் இது. இவர்களை விரட்டி அடிப்பது என்றால் யார்தான் பொறுத்துக்கொள்ள முடியும்? முத்துக்குமார்களுக்கு உயிர், தமிழ் மக்களின் உரிமை காக்கும் ஆயுதம் என்றால், ஈழ மக்கள் உயிராயுதம் ஏந்த மாட்டார்களா என்ன? மக்கள் பல்லாயிரமாக முள்ளி வாய்க்காலில் நெஞ்சுரம்கொண்டு நின்றார்கள்.
இலங்கை மண்ணில், பழங்காலத்திலேயே தமிழ் மக்கள் வேர் பிடித்து வளர்ச்சி பெற்றிருந்தவர்கள். தமிழ் மக்களின் பண்பாட்டைப்போலவே, அந்த மண்ணில் ஆழப் புதைந்துகிடக்கும் புதைபொருள்களும் கல்வெட்டுகளும் அதற்கான ஆதாரத்தைத் தருகின்றன. தமிழகத்தின் நிலப் பகுதியில் இருந்து 7,000 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்த இலங்கைத் தீவு, தமிழ்த் தொல்குடிகளைத் தன் மார்பில் வளர்த்தெடுத்த தாய்தான் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிபடக்கூறு கிறார்கள்.
சிந்துச் சமவெளி நாகரிகத்தைவிட தாமிரபரணிக் கரை அமைந்த ஆதிச்ச நல்லூர், முந்தையது என்பதற்கும் போதிய ஆதாரங்கள் இருக்கின்றன. ஆதிச்சநல்லூர் மண்பாண்டங்களில் காணப்படும் எழுத்துக்களும் ஈழத்தில் காணப்படும் மண்பாண்ட எழுத்துக்களும் உருவ ஒற்றுமையில் ஒன்றுபோல இருக்கின்றன. இந்த இரண்டு இடங்களிலும் தமிழர்களின் பண்பாட்டு வளர்ச்சி, சம காலத்தில்தான் வளர்ந்து வளர்ச்சி பெற்றுள்ளது. ஐரோப்பியர்கள் இலங்கையைக் கைப்பற்றிக்கொள்ளும் வரை தமிழ் மக்களுக்கு என்று ஒரு தனி நாடு, இலங்கையில் இருந்தது என்பதையும் அனைவரும் அறிவார்கள்.
மானுடத்தை வெட்கித் தலை குனியவைத்த முள்ளி வாய்க்கால் படுகொலையை ஐக்கிய நாடுகள் சபையும் உலக சமுதாயமும் தடுக்க முடியாத குற்றத்துக்காக இன்று தலை குனிந்து நிற்கின்றன. இது போர்க் குற்றம்தான் என்று உலக மனித உரிமை அமைப்புகள் ஒன்று கூடி ஒரே குரலில் சொல்லுகின்றன. தொலைக்காட்சிகளில் இந்தக் கொடுமையைப் பார்த்தவர்கள், செய்திகளாக இதைப் படித் தவர்கள், உறக்கம் அற்றுத் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், ராஜபக்ஷேயின் உலகம் அதை வெற்றிக் கொண்டாட்டமாக மாற்றிவிட்டது. தமிழ் மக்களின் அழிவுபற்றிய வெற்றிப் பாடல்களை அங்கு பாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
வெற்றி அடைந்தவர்களுக்குப் பாடல்கள் உண்டு என்றால், தோற்றுப் போனவர்களுக்கு மட்டும் பாடல்கள் இல்லையா? வெற்றிப் பாடல்கள் போதைகொண்டு மயக்கத்துடன் நடன அரங்குகளில் வெறி பிடித்து ஆடுகின்றன. தோற்றுப்போனவர்களின் பாடலோ, வைராக்கியத்தை நெஞ்சில் சுமந்து, மரணத்தில் இருந்து புதிய பிறப்பைக் கருகொண்டு, பெற்றெடுக்க சூல் வலிகொண்டு நிற்கிறது.
‘வீழ்வே னென்று நினைத் தாயோ’ என்று முள்ளி வாய்க்கால் விதைப்பதை விதைத்து முடித்துவிட்டு, அறுவடைக்காகக் காத்து நிற்கிறது!
(முற்றும்)
நன்றி: சி.மகேந்திரன் & விகடன் 

வீழ்வேனென்று நினைத்தாயோ? XI


”ஆட்லறி என்று சொல்லப்படும் எறிகணை வானத்தில் வேகமாக வருவது மட்டும்தான் எனக்குத் தெரிகிறது. நான் வீழ்ந்துவிட்டேன். ஆனாலும், என் நினைவை நான் இழக்கவில்லை. இடப்பெயர்வு காலம் முழுவதும் என்னுடன் இணைந்து பயணம்செய்துவந்த இரண்டு நண்பர்கள் பக்கத்தில் இறந்துகிடக்கிறார்கள். நான் எழுவதற்குக் கஷ்டப்பட்டு முயற்சி செய்து பார்க்கிறேன். என்னால் முடியவே இல்லை. வயிற்றில் ஏதோ பிசுபிசுப்பதைப் போல உணர்கிறேன். தொட்டுப் பார்த்தால் ரத்தம் கொட்டிக்கொண்டு இருக்கிறது. அருகில் ஆள் அரவம் எதுவுமே இல்லை. எங்கு பார்த்தாலும் பிணங்கள் குவியல் குவியலாக என் கண்ணுக்கு மங்கலாகத் தெரிகின் றன. மெதுவாக எழுந்து செல்கிறேன். வீதி ஓன்றில் மயங்கி நான் கிடந்திருக்க வேண்டும். லேசாக மயக்கம் தெளிந்தபோது, மருத்துவத் துறையைச் சேர்ந்த இரண்டு பேர் பேசிக்கொள்வது என் காதுகளுக்குக் கேட்கிறது…”  -முள்ளி வாய்க்கால் பேரழிவில் கடைசி நேரத்தில் உயிர் தப்பிய ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் முன்னுரை இது!
உயிர் தப்பியவரின் பெயர் முருகன். மேலும், அவருடைய வாக்குமூலத்தில் இருந்து சில கண்ணீர் வார்த்தைகளை இதயம்கொண்டு படியுங்கள்:  ”மருத்துவப் பணியாளர்கள் இரண்டு பேர் பேசிக்கொள்கிறார்கள். இருவருமே இளைஞர்கள்தான் என்பது  மட்டும் எனக்குப் புரிகிறது. மயங்கிய நிலையிலும் இவர்கள் பேசுவதை என்னால் கேட்க முடிகிறது.
‘இவர் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை. இவருடைய உடம்பு ரொம்பவும் சேதம் அடைந்துள்ளது’ என்று மருத்துவப் பணியாளர்களில் ஒருவர் கூறுகிறார். அதனை மறுத்து  இன்னொரு பெண்மணி ‘அவர் சாக மாட்டார். பாதிப்பு உடலில் இல்லை. மூத்திரப்பையில் மட்டும்தான்’ என்கிறார். எனக்கு அவர்கள் சிகிச்சை அளிப்பதைப் போலத் தெரிகிறது. நான் மயங்கிக்கிடந்தேன்.
நான் கண் விழித்தபோது யாருமே  அங்கு இல்லை. எனக்கு மருத்துவம் அளிக் கப்பட்ட இடம் எறிகணைகளால் தாக்கப் பட்டு இருப்பதை என்னால் யூகித்துக் கொள்ள முடிந்தது. என்னைச் சுற்றிலும் பல உடல்கள் சிதறிக்கிடக்கின்றன. எல்லா இடங்களிலும் ரத்தமும் சதைத் துண்டு களுமாகக் காட்சி அளிக்கின்றன. நான் எழுவதற்குப் பெரிதும் முயற்சி செய்து பார்க்கிறேன். என்னால் முடியவே இல்லை. மனதைத் தைரியப்படுத்திக்கொண்டு அனைத்தையும் கடந்து எழுந்து செல்கி றேன். எப்படியோ பதுங்கு குழிக்குள் வந்து விட்டேன். அங்கே இருந்த எல்லோருமே காயப்பட்டு இருக்கிறார்கள். இன்னமும் எறிகணைகள் பதுங்கு குழிகளுக்கு உள்ளும் வெளியிலும் விழுந்து வெடித்துக்கொண்டே இருந்தன. அதற்குள் உட்கார்ந்தால் மரணம் நிச்சயம். எனவே, பதுங்கு குழியைவிட்டு  வெளியேறுவதைத் தவிர, வேறு வழியே இல்லை என்ற முடிவுக்கு அனைவருமே வந்துவிட்டார்கள்.
நடக்க முடியாதவர்கள், நகர முடியாதவர்கள் என்று பலரும் அங்கு இருந்தனர். நான் பதுங்கு குழியைவிட்டு வெளியேறுவதா அல்லது மரணத்தை நேருக்கு நேர் சந்திக்க அங்கேயே தங்கிவிடுவதா என்ற குழப்பதில் இருந்தேன். இதற்கு என் தம்பிதான் காரணம். உடன்பிறந்தவர்களில் கடைசியில் பிறந்தவன் அவன். அவன் தன்னுடைய இரண்டு கால் களையும் இழந்து இருந்தான். அவனைச் சுமந்துகொண்டுதான் செல்ல வேண்டும். சுமந்து செல்வதற்கு என் உடல்நிலை இடம் தராது என்பதை என் தம்பியும் நன்கு உணர்ந்தே இருந்தான். என்னால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது.
குண்டுகள் வெடிக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. என் தம்பி என்னை வேகப்படுத்தினான். ‘நீங்கள் போய்விடுங்கள் அண்ணா. கடைசி நேரத் தில் யாராவது என்னைக் காப்பாற்றிவிடுவார் கள். நான் பிழைத்துக்கொள்வேன்’ என்று ஏதோ ஒரு நம்பிக்கையில் சொல்லிக் கொண்டே இருந்தான். ஒரேயடியாக எல்லோரும் நிர்பந்தித்து என்னை வெளி யேறும்படி வற்புறுத்தினார்கள். தம்பியின் மோசமான நிலையைப் பார்த்துக் கொண்டே அங்கு இருந்து வெளியேற மனமே இல்லாமல் கண்ணீருடன் அந்த இடத்தைவிட்டு வெளியேறினேன். அங்கு இருந்து முகாம் வந்து, மருத்துவச் சிகிச்சை பெற்றேன். தொண்டு நிறுவனம் ஒன்றின் அடையாள அட்டை எனக்குப் பெரிதும் பயன்பட்டது. அதைவைத்து முகாமை விட்டும் வெளியேறிவிட்டேன்.
இன்று உயிர் ஆபத்து நீங்கி, வாழ்க்கை ஒருவிதமாக ஓடிக்கொண்டு இருக்கிறது என்றாலும், கடைசியில் முகாமைவிட்டு, வெளியேறும் தறுவாயில் எனக்கு ஒரு செய்தி  கிடைத்தது. நான் பதுங்கு குழியை விட்டு வெளியேறிய பின்னர், ராணுவம் அங்கு வந்ததாகவும் வெளியேற முடியாமல் உடல் பாதிக்கப்பட்டு பலத்த காயங்களுடன் அங்கேயே இருந்த அனைவரையும் ராணுவம் இயந்திரப் துப்பாக்கியால் சுட்டு விட்டு, அப்படியே மண்ணைப்போட்டு மூடிவிட்டதாகவும் செய்தி கிடைத்தது”…  என்று முடிகிறது முருகனின் வாக்கு மூலம்!
இதை வாசிக்கும்போதே வலிக்கிறதே… அதை அனுபவித்த முருகனின் வேதனை எப்படி இருக்கும்?
- இப்படி யோசித்த நேரத்தில்தான் தமிழ்வாணி என்ற பெண்ணைப் பற்றித் தெரியவந்தது. அவரது வேதனை, அதீத வேதனையாக இருந்தது!
தமிழ்வாணி… பிரிட்டனில், பயோ- மெடிக்கல் படித்த பட்டதாரி. ஈழத்தில் பல முறை இடப்பெயர்வுக்கு உள்ளாகி, 1994-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தைவிட்டு பிரிட்டனுக்குக் குடியேறி, பட்டப்படிப்பை முடித்தவர். இறுதி யுத்தம் நடக்கும்போது ஈழத்தில்தான் இருந்தார்.  யுத்தப் பிரதேசத் தில் இவர் சிக்கிக்கொள்கிறார். இதற்காக அச்சங்கொண்டு பயத்தில் உறைந்து போகாமல்,  யுத்தத்தில் பாதிக்கப்பட்டமக்க ளுக்கு, மருத்துவப் பணிகள் செய்யத் தொடங்கிவிடுகிறார்.
யுத்தம் முடிந்த பின்னர், சந்தேகத்தில் முகாமில் வைத்து நான்கு மாதங்கள் விசாரிக்கப்படுகிறார். உலகம் முழுவதிலும் மனித உரிமை அமைப்புகள் போராட்டம் நடத்தின. பிரிட்டன் அரசாங்கமும் தனது நாட்டின் குடியுரிமை பெற்ற ஒருவரை விடுவிக்க வேண்டும் என்றது. கடைசியில் விடுவிக்கப்பட்டு, பிரிட்டன் போய்ச் சேர்ந்தார். முள்ளி வாய்க்காலில் கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்பதை உலகுக்குத் தெரிவிப்பதில் முக்கிய நபராக தமிழ்வாணி இன்று கருதப்படுகிறார்.
”போர் 2008-ம் ஆண்டு மே மாதம் இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்டது. குறுகிய நிலப் பரப்பில் குவிக்கப்பட்ட மக்களின் நிலை என்ன என்ற கவலை உலக சமுதாயத்தைக் கவ்விக்கொண்டது. மக்களை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்று மனிதநேயம் கொண்டவர்கள் துடித்துப்போனார்கள்.
அப்போது இலங்கை அரசு, ‘குண்டுகள் வெடிக்காத அமைதிப் பிரதேசங்களை உருவாக்கி, அதில் பொதுமக்களில் ஒருவரைக்கூடச் சாகவிடாமல் பாதுகாப் போம்’ என்று ஐக்கிய நாடுகள் சபைக்கும் உலக சமூகத்துக்கும் ஒரு வாக்குறுதியை அளித்தது. அது வஞ்சகமான வாக்குறுதி.
நந்திக் கடலுக்கும் இந்தியப் பெருங் கடலுக்கும் இடைப்பட்ட நிலப் பகுதிதான் அமைதி மண்டலமாக அறிவிக்கப்பட்டது. புதுமாத்தளன் முதல் வெள்ளமுள்ளி வாய்க்கால் வரை பல கடலோரக் கிராமங் களை உள்ளடக்கிய பகுதி அது. இங்கு மக்கள் லட்சக்கணக்கில் வந்து சேர்ந்த பின்னர்தான், இந்தப் படுகொலை நடந்தது.”
- இது தமிழ்வாணியின் சாட்சியம்.
உயிர் ஊசலாட, கொஞ்சம் கொஞ்ச மாக மரணத்தை நோக்கி நகர்ந்து, கடைசியில் உயிர் நின்றுபோன மருத்துவமனைகளைப் பற்றி தமிழ்வாணி கூறியுள்ளவை நம் ரத்தத்தை உறையவைக்கக் கூடியவையாக உள்ளது.
”மரத்தடி, மருத்துவச் சிகிச்சைக்கான இடமாக மாறியது. பின்னர், அறுவைச் சிகிச்சைகளை எங்கு நடத்துவது… அதுவும் அங்கேயேதான்.  கை, கால்களை அகற்றி னால்தான் உயிருடன் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்ற நிலைக்குப் பலரும் வந்துவிட்டார்கள். காயம்பட்டவர்கள்  குவிந்து கிடக்கிறார்கள். ஒரு சில மருத்துவர்களும் மருத்துவமனைப் பணியாளர்களும் மட்டும் தான் எஞ்சி இருக்கிறோம்.
அறுவைச் சிகிச்சைக்கு மயக்க மருந்து கொடுக்க வேண்டும். மருந்து இல்லை. இருக்கிற மருந்தில் தண்ணீர் கலந்து மருந்தைக் கொடுத்துப் பார்க்கிறோம். ஒரு கட்டத்தில் அதுவும் இல்லாமல் போய் விடுகிறது. மயக்க மருந்து இல்லாமலேயே மரத்தடியில் அறுவைச் சிகிச்சை நடை பெறுகிறது. ரத்தம் கொட்டுகிறது. அதை அப்படியே பிளாஸ்டிக் பைகளில் பிடித்து, ரத்தத்தை யார் வெளியேற்றினார்களோ அவர்களுக்கே மீண்டும் ஏற்றுகிறோம். காயம்பட்டவர்களுக்குக் கட்டுப்போடு வதற்குப் பழைய கந்தல் துணிகளையும் புடவைகளையும் பயன்படுத்துகிறோம்.
மருத்துவ விஞ்ஞானத்தால் இதனை நம்ப முடியாது என்றாலும் முள்ளி வாய்க் கால் யதார்த்தம் இதுதான். அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான கத்தி கிடைக் காமல் போனதால்… என்ன செய்வது என்கிற இக்கட்டான சூழலில் கறி வெட்டு வதற்காகப் பயன்படுத்தப்படும் கசாப்புக் கடை கத்திகளைப் பயன்படுத்தி, அறுவைச் சிகிச்சை செய்தோம்” என்கிறார் தமிழ் வாணி.
இதைப்போலவே அறுவை சிகிச்சையில் அகற்றப்பட்ட மனித அவயங்கள் ஒருபுறம் கவனிப்பார் அற்றுக் குவிந்துகிடந்தன என்பதையும் யாரும் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியுமா? அதுதான் முள்ளி வாய்க்காலில் மக்களோடு சேர்ந்து மரண முற்ற மருத்துவத்தின் கதையுமாகும்.
- விதைப்போம்…
நன்றி: சி.மகேந்திரன் & விகடன் 



வீழ்வேனென்று நினைத்தாயோ? X


ந்த அறிக்கை 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை அரசுக்கு அனுப்பப் பட்டு இருந்தது. முழு அழிவு நடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வெளியான அறிக்கை அது. இடம்பெயர்ந்த தமிழ் மக்கள், முற்றாக அழிந்துவிடுவார்களோ என்று அச்சம்கொள்ளத்தக்க வகையில் தாக்குதல் தொடுக்கப்பட்டு இருந்த நேரம் அது. வெகுமக்களுக்கான உணவை வாங்கும் பொறுப்பைப் பெற்றிருந்த முல்லைத் தீவு மாவட்டத்தின் ஆட்சித் தலைவர்தான் அந்தக் கடிதத்தை எழுதி இருந்தார். மனிதத் துயரங்களைக் காணச் சகிக்க முடியாமல் அவர் எழுதிய இந்தக் கடிதம், மனசாட்சி உள்ள மனிதர்களை உலுக்கி எடுத்துவிடுகிறது.
 ”உணவு கிடைக்காமல் தொடர்ந்து மக்கள் பட்டினி இருக்கிறார்கள். காட்டுக் கிழங்குகளையும் இலை தழைகளையும் உண்டு, உயிர் பிழைத்துக்கொள்ள முயற்சிக் கிறார்கள். ஆனாலும், தங்களின் சாவை அவர்களால் நிறுத்த முடியவில்லை. பட்டினிச் சாவுகள் அதிகரிக்கின்றன. மருத்துவமனைக்குத் தூக்கி வரப்படுபவர்களில் பலர் இறந்தேதான் கொண்டுவரப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பட்டினியால் செத்தவர்கள் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இது நாளாக நாளாக இன்னமும் கூடுதல் ஆகலாம்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், ”மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த, பட்டினியால் செத்துப்போனவர்களை மட்டும்தான் எங்களால் கணக்கிட்டுச் சொல்ல முடிகிறது. மற்றவர் களை இந்தக் கணக்கில் சேர்க்கவில்லை” என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப் பட்டு உள்ளது. உண்மைதான்… பதுங்கு குழிகளில், சாலைகளில், புதர் மறைவிடங் களில் இருந்தபடி பசித் தீ பற்றிக்கொள்ள… அப்படியே சாய்ந்து மரணமுற்றவர்களின் கணக்கு யாரிடம் இருக்கிறது?
பட்டினி ஒரு வன்முறை. ஆதிக்கச் சக்திகள் தங்கள் அதிகாரத்துக்கு, வெகுமக்களை அடிமைப்படுத்திக்கொள்ள பட்டினி போட்டுப் பார்க்கிறார்கள். இன ஒடுக்குமுறையின் மூலம் தமிழ் மக்களை அடிமையாக்கிக்கொள்ள முயன்று வரும் இலங்கை, குண்டு போட்டு அழிப்பதற்கு இணையாகப் பட்டினி போட்டு அழிப்பதையும் ஒரு கொள்கையாகவே உருவாக்கி வைத்துள்ளது. உள்நாட்டுப் போரும் இடப்பெயர்வும் பதுங்குகுழிகளும் வெளி உலகுக்கு எதுவுமே தெரியாமல் பட்டினிக் கொலை செய்வதற்கு, இலங்கையின் இனவெறி அரசுக்கு வசதி செய்து கொடுத்துவிட்டது.
முள்ளி வாய்க்காலுக்கு முந்தைய இடப்பெயர்வு காலத்தில், போர்க்களத்தில் சிக்கியுள்ள மக்கள்தொகையைப் பற்றி, இலங்கையின் ராணுவ அமைச்சகம் ஓர் அறிக்கையை வெளியிட்டு இருந்தது. 2009-ம் ஆண்டு ஜனவரி கடைசி வாரத்தில் வெளியான இந்த அறிக்கையின்படி, 70 ஆயிரம் மக்கள் இருப்பதாகக் கணக் கிட்டுச் சொல்லி இருந்தார்கள். இது உண்மையானதுதானா என்ற கேள்வி எழுந்தபோது, மற்றொரு தகவல் கிடைத்தது. அந்தத் தகவல் மிகுந்த அதிர்ச்சியைத் தரத் தக்கதாக இருந்தது. அரசாங்கம் வகுத்து இருந்த அருவருக்கத்தக்க சூழ்ச்சி ஒன்று அதில் மறைந்து இருந்ததைப் புரிந்துகொள்ள முடிந்தது.
ஆட்சியாளரின் கணக்கெடுப்பின்படி, 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இலங்கையின் கிளிநொச்சி, வன்னி ஆகிய இரு மாவட்டங்களின் மொத்த மக்கள்தொகை 4 லட்சத்து 20 ஆயிரம். நான்கு மாதங்களில் இது எவ்வாறு 70 ஆயிரமாகக் குறைந்துபோனது என்ற கேள்வி இயல்பாகவே எழும். இலங்கை அரசு தான் பொறுப்பேற்று உள்ள உணவு விநியோகத்தைக் குறைத்துக்கொள்ளவும் ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதலில் வழங்க வேண்டிய உணவுப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செல்வதைத் தடுக்கவும் இப்படிப் பொய்யான புள்ளிவிவரத்தை வெளியிட்டு இருந்தது. பட்டினியால் மக்கள் செத்துப்போக வேண்டும் என்பதைத் தவிர, இதற்கு வேறு என்ன நோக்கம் இருக்க முடியும்?
பட்டினிச் சாவுபற்றிய இந்த அறிக்கையைப்போலவே, உணவுக் கையிருப்புபற்றிய மற்றோர் அறிக்கையும் வன்னியில் இருந்து இலங்கை அரசுக்கு அனுப்பப்பட்டு இருந்தது. கிளிநொச்சி மண்டலத்தின் உணவுப் பொருள் வழங்கும் துறையின் துணை இயக்குநர் அனுப்பிய அவசர அறிக்கை அது. இதை ஓர் அபாய அறிவிப்பு என்றுதான் கருத வேண்டும். ”2009-ம் ஆண்டு பிப்ரவரி 29-ம் தேதி இந்த அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. 83 ஆயிரம் குடும்பங்களுக்கு உணவு அளிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. இதற்கு 4,950 மெட்ரிக் டன் எடை உள்ள உணவுப் பொருட்கள் தேவை. ஆனால், கையிருப்பில் உள்ளது 110 மெட்ரிக் டன் மட்டுமே” என்று கூறுகிறது அந்த அவசர அறிக்கை. இதை அடிப்படையாகக்கொண்டு கணக்கிட்டால், மக்களின் தேவையில் அரை சதவிகித உணவுகூட, அவர்களின் கையிருப்பில் இல்லை என்று தெரிகிறது. அதைக் கிட்டத்தட்ட உணவற்ற நிலை என்றுதான் கூற வேண்டும். இது பிப்ரவரி மாதக் கடைசி நிலவரம் என்றால், யுத்தத்தின் இறுதிக் கட்டமான மே மாத இரண்டாவது, மூன்றாவது வாரங்களில் என்ன நடந்து இருக்கும் என்பதை நம்மால் கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியவில்லை.
ஒரு பிடி உணவுக்காக அந்த மக்கள் பட்ட அவலங்கள் வார்த்தைகளில் விவரிக்கக் கூடியவையாக இல்லை. வயது முதிர்ந்த தாய் ஒருத்தி, தாம் அடைந்த துயரங்களை இணையதளம் ஒன்றில் பதிவுசெய்து இருக்கிறாள். தாது வருடப் பஞ்சம்பற்றி தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். வறண்டு வெடித்த நிலங்களில் நீர் அற்றுப்போக, மாட்டுக்கு வைக்கப்படும் தவிட்டில் ஒளிந்து இருக்கும் அரிசிக் குருநொய்யைத் தேடிப் பிடிக்க அலைந்து திரிந்ததாகக் கதைகள் உண்டு. தவிட்டை மேலும் மாவாக்கி, அதை அடுப்பில் சூடேற்றி கோரப் பசியைத் தணித்துக்கொண்டதாகவும் பஞ்சம்பற்றிய தகவல்கள் கூறுகின்றன. ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில், தாது வருஷத்துப் பஞ்சத்தைவிட உணவுப் பஞ்சம் கூடுதலாகிவிட்டது என்பதை அந்தத் தாயின் வார்த்தைகள் உறுதிப்படுத்துகின்றன.
”நஞ்சை வயல்வெளிகள் அமைந்த வன்னி நிலப் பரப்பில், அரைத்து நெல்லை அரிசியாக மாற்றித் தரும் ஆலைகளுக்குப் பஞ்சம் இல்லை. ஒதுக்குப்புறங்களில் நெல் அரைத்த தவிடும் உமியும் அம்பாரமாகக் குவித்துவைக்கப்பட்டு இருந்தன. உணவு இன்றித் தவித்த நாங்கள், அதைப் பார்த்தோம். பெண்கள் பெருங்கூட்டமாக விரைந்து சென்றோம். தவிடு, உமி நடுவே கொஞ்சமேனும் அரிசி கிடைக்குமா என்று தேடிப் பார்த்தோம். காற்றில் தூற்றிப் புடைத்துப் பார்த்து அதில் இருந்து அரிசி குருநொய்யைப் பிரித்து எடுப்பதற்குப் பெரும்பாடுபட்டோம்.
உச்சி வெயிலில் பூமி அனலைக் கக்கிக்கொண்டு இருக்கிறது. இரைச்சல் கேட்கிறது. விமானமா? எல்லோரையும் திகில் பற்றிக்கொண்டது. வயிற்றுப் பசியா… அல்லது மரணமா..? பசியால் துடிதுடிக்கும் பொடிசுகளைப் பற்றித்தான் யோசனை. குண்டுகள் விழுந்து, செத்தாலும் பரவாயில்லை என்று மனப் பயத்தை அடித்துத் துரத்திவிட்டு, குழந்தைகள் உயிர் பிழைக்கும் ஒரு குவளைக் கஞ்சிக்காக, அந்தத் தவிடும் உமியும் குவிந்து உள்ள பொதிகளோடு போராட்டம் நடத்தினோம். சுட்டெரிக்கும் வெயிலில் வியர்வைப் பெருக்கெடுத்து ஓடியது. உடல் களைத்து, கண்கள் இருள் அடைந்தன. புடைக்கும் முறத்தை இறுகப் பற்றிக்கொண்டோம். நம் சந்ததி உயிர் பிழைக்க வேண்டும் என்ற மன உறுதியுடன்” என்கிறார் அந்த வயது முதிர்ந்த தாய்.
நான்கு மணி நேரம் புடைத்து எடுத்தாலும் இரண்டு படி அரிசிக் குருநொய்யைச் சேகரிப்பதுகூட, மிகவும் கடினமானது என்று அவர்கள் கூறுகிறார்கள். கிளிநொச்சி யில் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் அவர் கள் புறப்பட்டபோது, ஒரு கிலோ அரிசி 40 ரூபாய்க்கு விற்றதாகக் கூறப்படுகிறது. மே மாதம் 10-ம் தேதிக்கு மேல், ஒரு கிலோ அரிசி 1,000 ரூபாய்க்கு  விற்கப்பட்டதாகத் தெரிகிறது. கடைசி நேரத்தில் குடும்பத்தின் பசியைப் போக்க தன்னிடம் இருந்த மோட்டார் சைக்கிளை விற்று, இரண்டு படி அரிசியை ஒருவர் வாங்கினார் என்ற தகவல் நமக்கு மயக்கத்தை வரவழைக்கிறது!
- விதைப்போம்…
நன்றி: சி.மகேந்திரன் & விகடன் 



வீழ்வேனென்று நினைத்தாயோ? IX


து ஒரு நீண்ட பயணம். மானுடம் எத்தனையோ பயணங்களை நிகழ்த்தி இருக்கிறது. இதுபோன்ற பயணத்தை, இதற்கு முன்னர் யாராவது நிகழ்த்தி இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. முடிவற்ற பயணத்தைத் தொடங்கிவிட்டார்கள் ஈழத் தமிழர்கள். ஆனால், இது அவர்கள் விரும்பிய பயணம் இல்லை. கட்டாயப்படுத்தி, அவர்கள் மீது திணிக்கப்பட்ட பயணம். வான்வெளியில் இருந்து விமானங்களும் தரை வழியாக பீரங்கிகளும் அவர்களைத் துரத்த… மூச்சுவிடக்கூட நேரம் கிடைக்காமல் புறப்பட்ட பயணம். மனைவி, மக்கள், வயது முதிர்ந்த தாய் – தந்தை என்று அனைவரையும் வண்டியில் ஏற்றுகிறார்கள். சைக்கிளா; மோட்டார் சைக்கிளா; மாட்டு வண்டியா; டிராக்டரா என்று யோசிக்க அவர்களுக்கு நேரம் இல்லை. அவரவர்களி டம் எது இருக்கிறதோ அதில் பயணத்தைத் தொடங்கிவிட்டார்கள். பயணத்தின் திசை எது? முடிவு எது என்பது தெரியாமலேயே புறப்பட்டுவிட்டார்கள். ஆனாலும், அவர் கள் முள்ளிவாய்க்காலை நோக்கியே, திட்டமிட்டு நகர வைக்கப்படுகிறார்கள். செப்டம்பர் 2008, முதல் வாரத்தில் இவர்களின்பயணம் தொடங்கியிருக்க வேண்டும்.
கிளிநொச்சியில் புறப்பட்டு, முள்ளிவாய்க்கால் வந்து சேருவதற்கு இவர்களுக்கு ஒன்பது மாதங்கள் தேவைப்பட்டன.
நீண்ட இடப்பெயர்வு வாழ்க்கை தந்த மனக் காயங்களை, இன்று வரை மனத்தில் தேக்கிவைத்திருக்கும் ஒருவரை, நேரில் சந்திக்க நேரிடுகிறது. ஒடிந்துபோய்க்கிடக்கும் அந்த மனிதரிடம் சில கேள்விகளைக் கேட்கிறேன், இடப்பெயர்வுப் பயணம்பற்றி. தடை எதுவும் இல்லாமல் பேசத் தொடங்கிவிடுகிறார். ”நாங்கள் ஓரிடத்தில் தங்குவதற்கான காலத்தை நிச்சயம் செய்வது போர் விமானங்களும் குண்டுகளும்தான்” என்று கலக்கத்துடன் சொல்லத் தொடங்கிய அவர், அடுத்து கூறியவை எனக்குள் வியப்பைத் தருகிறது. ”இடப்பெயர்வில் எதை மறந்தாலும், கடப்பாரை, மண்வெட்டி, கூடை, கோணிப் பைகளை எடுத்துச் செல்ல மறப்பது இல்லை” என்கிறார்.
ஆதரவற்ற அந்த மக்களுக்கு உயிர் காக்கும் கவசங்களாக இருப்பவை அந்தக் கருவிகள்தான். எந்த இடத்துக்கு கால் கொண்டுபோய்ச் சேர்க்கிறதோ அங்கு படுத்துக்கொள்ள ஒரு பதுங்குகுழியை அமைத்துக்கொள்ள இந்தக் கருவிகள்தான் கை கொடுக்கின்றன என்பதால், இவை அவர்களைக் காக்கும் கருவிகள்!
பதுங்குகுழிகளைப் பொதுவாக ‘பங்கர்ஸ்’ என்று அந்த மக்கள் அழைக்கிறார்கள். மண் பிளந்து, வியர்வை சிந்தி, மண்ணுக்குள் ஒளிந்துகொள்கிறார்கள். அவற்றைச் சுற்றி, நான்கு ஓரங்களிலும் மணல் நிரப்பப்பட்ட மூட்டைகளை அடுக்கிவைத்து, மண் சரிவைத் தடுப்பதற்குக் கோணிப் பைகள் தேவைப்படுகின்றன.
பதுங்குகுழிகள் பரிதாபத்துக்கு உரியவை. வான் மழைக்கும் விமானங்களின் குண்டு மழைக்கும் இடையில், இருவிதத் தாக்குதல் களை மாறிமாறிச் சந்தித்துக்கொண்டு இருக்கின்றன அவை. ”குண்டு விழும் கொடுமைகளை வார்த்தைகளில் சொல்ல முடியாது” என்று கூறியவர், ”வன்னிப்பிரதேசத்து தீவிர மழை, நொடிப் பொழுதில் பெருவெள்ளத்தை உருவாக்கிவிடும்.பதுங்குகுழிகள் பள்ளம் என்பதால், கண் மூடிக் கண் திறப்பதற்குள் அனைத்தையும் நீரில் மூழ்க வைத்துவிடும்” என்கிறார்.
”பதுங்குகுழிகளில் சமையல் செய்ய இயலாது. பூமியின் மேல் பரப்பில்தான் தற்காலிக அடுப்புகளை உருவாக்கி, சமையலைத் தொடங்க வேண்டும். வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே எம் பெண் மக்கள் அடுப்பைப் பற்றவைப்பார்கள். அடுப்பு சூடேற பாத்திரத்தில் உள்ள அரிசியும் நீரும் கொதிக்கத் தொடங்கும். ஒரு சமயம் சமையலை முடிக்கும் தருணம். பசி எடுத்த குழந்தைகளின் அழுகுரல் கேட்கிறது. உணவு வரும் என்று பதுங்குகுழிக்குள்  மற்றவர்கள் காத்திருக்கிறார்கள். வானத்தில் விமானத்தின் உறுமல் கேட்கிறது. குண்டுகள் சீறி விழும் சத்தம் கேட்கிறது. காதைப் பொத்திக்கொள்கிறோம். அமைதி திரும்பிய சிறிது நேரம் கழித்துச் சென்று பார்க்கும்போது, அடுப்பு இருந்த இடத்தில் ஒரு பள்ளம் இருக்கிறது. அன்று இரவு முழுவதும் பதுங்குகுழிக்குள் இருந்தவர்கள் அனைவரும் பட்டினிதான்” என்கிறார் சோகமாக.
பதுங்குகுழியில் திலீபன் என்ற 16 வயதுச் சிறுவனுக்கு ஏற்பட்ட கொடுமையைக் கேட்போம்…
திலீபன் துடிப்பானவன். ஈழ மக்களின் உரிமைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த போராளி திலீபனின் நினைவாக, இவனது பெற்றோர் இந்தப் பெயரைச் சூட்டியிருக்க வேண்டும். ஈழ மக்கள் பண்பாட்டு வேர்களின் மீது மிகுந்த அக்கறைகொண்டவர்கள். இதற்கான முன்னுதாரணமாக திலீபனின் பெற்றோரைக் கூற முடியும். இத்தாலியில் பிறந்த இவனைத் தமிழ்ப் பண்பாட்டுடன் வளர்க்க வேண்டும் என்பதற்காகத் தாய்நாட்டுக்கு அழைத்து வந்தனர்.
அன்றுதான் தைப்பொங்கல். வெளியே மழைச் சாரல். துறுதுறு என்று பறந்து திரியும் திலீபனால் பதுங்குகுழியில் அடைந்துகிடக்க முடியவில்லை. இவனது பதுங்குகுழி, சாலைப் போக்குவரத்துக்கு அருகில் இருக்கிறது. நண்பர் களைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கையில் குடையுடன் புறப்படுகிறான் அவன். நண்பர்களோடு நீண்ட நேரம் உரையாடி மகிழ்ச்சிகொள்கிறான். காலத்தில் திரும்ப வேண்டும் என்று அம்மா சொன்னது அவன் நினைவுக்கு வருகிறது. வன்னிப் பிரதேசத்தின் மழைக் காலப் பசுமையும் வானம் மெள்ளத் தூறிக்கொண்டு இருந்த அந்த மாலையில், மனம் மகிழ்ந்து நடந்து வரும் வேளையில்தான், இதயத்தைக் கிழித்து எறியும் அந்தக் கொடுமையும் நடந்தது.
தாயும் தந்தையும் பதற்றம்கொண்டு, அவன் வருகைக்காகப் பதுங்குகுழி யின் வாசலில் காத்து நிற்கிறார்கள். மகன் வருவது தெரிகிறது. முகத்தில் மகிழ்ச்சி பொங்க, அவனை அழைத்துச் செல்ல பதுங்குகுழிக்கு வெளியே நடந்து வருகிறார்கள். அந்த நேரம் பார்த்து எறிகணை ஒன்று வேகமாக வந்து அவர்கள் மீது விழுகிறது. திலீபனின் உடல் சிதைந்து ரத்தம் கொட்டுகிறது. அவன் அந்த இடத்திலேயே இறந்துவிடுகிறான். அவனது தந்தைக்கு காதருகில் காயம். மயங்கி, சுயநினைவை இழந்துவிடுகிறார். வயிற்றில் சுமந்த மகனைத் தன் கையில் சுமந்து, அடக்கம் செய்கிறாள் தாய்.
மக்களை மட்டுமல்ல… பதுங்கு குழிகளையும் பழி தீர்க்கிறது சிங்கள ராணுவம். ஓர் இடத்துக்கு ராணுவம் விரைந்து வருகிறது என்று தெரிந்தவுடன், மக்கள் இடப்பெயர்வுக்குத் தயாராகிவிடுகிறார்கள். பிறப்பு, இறப்பு முதலான சுக துக்கங்கள் அனைத்திலும் பங்கேற்று, உயிருக்கும் பாதுகாப்பு அளித்த பதுங்குகுழிகளைவிட்டு அவர்கள் பிரியத் தொடங்குகிறார்கள். ஆனாலும், பதுங்குகுழிகள் நன்றாகவே அறிந்து இருக்கின்றன… வெறிகொண்டு வரும், ராணுவ டாங்குகளின் பல்சக்கரங்களில் மிதிபட்டு, தாங்கள் இன்னும் சிறிது நேரத்தில் அழியப்போகிறோம் என்பதை!
- விதைப்போம்…
நன்றி: சி.மகேந்திரன் & விகடன் 



வீழ்வேனென்று நினைத்தாயோ? VIII


லங்கையோடு இந்திய தேசிய கீதம் முற்றாக வேறுபட்டு நிற்கிறது. வங்க மும், திராவிடமும், மராட்டியமும், உஜ்ஜலமும் இணைந்த பன்மொழி பேசும் மக்களின் ஒற்றுமைப் பாடலாக இந்திய தேசிய கீதம் அமைந்துள்ளது. இலங்கையின் தேசிய கீதம் மண்ணைப்பற்றிப் பாடுகிறது. மரத்தை, மலர்களை, அழகைப்பற்றிப் பாடுகிறது. ஆனால், மனிதனைப்பற்றிப் பாடுவதை நிறுத்திக்கொள்கிறது. மனிதனைப்பற்றிப் பாடினால், சிங்கள மனிதனும் தமிழ் மனிதனும் ஒற்றுமையுடன் வாழ்க என்று வாழ்த்துச் சொல்லவேண்டிய அவசியம் வந்துவிடும். இதனால், மனிதரைப் பாடுவதையே கள்ளத்தனமாக நிறுத்திக்கொண்டுவிட்டது இலங்கையின் தேசிய கீதம்.
இன்றைய முகாமில் சித்ரவதைக் கைதி களாக உள்ள இந்த இளைஞர்கள், இலங்கை யின் வலிமை மிக்க ஆயுதப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள். எந்த தேசியக் கொடியின் அரசியல் தவறு என்றும், அதற்கு நாங்கள் அடிபணிய முடியாது என்றும் ஆயுதம் தூக்கினார்களோ, அந்த மொழி புரியாத பாடல்களைப் பாடி, அந்தக் கொடியை வணங்க வேண்டும் என்று துப்பாக்கி முனையில் இப்போது வற்புறுத்தப்படுகிறார் கள். இதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். மறுக்கிறார்கள். சித்ர வதை முகாம் இந்த இளைஞர்களைத் தேசத் துரோகிகளாக அறிவிக்கிறது. ஆத்திரம் அடைந்த இனவெறி ராணுவம், இவர்களைச் சித்ரவதை முகாமுக்கு இழுத்துச் செல்கிறது. அங்கு விரல் நகங் களில் ஊசி ஏற்றப்படுகின்றன. கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு, உடலுக்கு உள்ளேயே, எலும்புகள் முறிந்து விழு கின்றன. மின் அதிர்ச்சியால் மீண்டும் மூட முடியாமல் அப்படியே நின்று போகின்றன விழி ஓர இமைகள்.
மண்ணுரிமை மூச்சை நெஞ்சில் சுமந்த அந்த இளைஞர்கள் தனது இறுதி மூச்சை யும் நிறுத்திக்கொள்கிறார்கள். மரணமுற்ற உடல், ஒவ்வொன்றாகச் சேகரித்து மறை வான இடங்களில் வைக்கப்பட்டு, நள்ளிரவில் எடுத்துச் செல்லப்படுகின்றன. அந்த உடல்கள் ஒவ்வொன்றும் சமரசமற்று, உரிமைக்காகப் போராடிய போராட்ட உணர்வுகளை மட்டும் சொல்லவில்லை. அந்த உடல்களின் மீது நடத்தப்பட்ட ஒரு நூறு சித்ரவதைக் கொடுமைகளைச் சொல்லிவிட்டுத்தான் செல்கின்றன.
விடுதலைப் புலிகளின் ராணுவம் சாராத பணிகளில் பங்கேற்று இருந்த ஒருவரின் கதை இது. அநாதைப் பெண் குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்தப் பணியை மிகுந்த மனநிறைவுடன் நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறார். அந்தக் காலம் தனக்கான வசந்த காலம் என்று இப்போதும் அவரால் கூற முடிகிறது. பாராமரிப்பு இல்லத்தில் பணியாற்றும் பெண் ஒருத்தி யைத் திருமணம் செய்துகொள்கிறார். பெண் குழந்தை ஒன்று பிறக்கிறது. முள்ளி வாய்க்கால் நிகழ்வின்போது குழந்தைக்கு ஒரு வயது நிறைவு பெற்றது. போரின் இறுதி நாட்களில் கணவனையும் மனைவி யையும் பிரித்துவிடுகிறார்கள். குழந்தை மனைவியிடம் உள்ளது.
சித்ரவதை முகாம் ஒன்றுக்கு, இவன் இழுத்துச் செல்லப்படுகிறான். புலிப் படையில் ஆயுதம் தாங்கிக் களத்தில் இவன் நின்றதாகப் பதிவு செய்துகொள்கிறார்கள். சித்ரவதைகளைவிடவும் பெரும் வதையில் மனம் சிக்கிச் சின்னாபின்னமாகிறது. மனைவி, குழந்தை இருவரின் நிலை என்னவாக இருக்கும் என்ற நினைவில், மனதளவில் ஒவ்வொரு நாளும் இவன் செத்துப் பிழைக்கிறான். நம்பிக்கையுடனும் நம்பிக்கையற்றும் இவனது வாழ்க்கை நகர்ந்துகொண்டு இருக்கிறது.
முகாமில் இருந்து, இவனைத் தப்பிக்கவைக்க, ரகசிய ஏற்பாடு ஒன்று நடைபெறுகிறது. கட்டுக் காவல்கள் எல்லாவற்றையும் கடந்து செல்லுதல் அத்தகைய சுலபமானது இல்லை என்றாலும், அவனுக் குச் சொல்லப்பட்ட அந்த வழிமுறைகளில் எப்படியும் தப்பிச் செல்ல முடியும் என்ற நம்பிக்கையை அவனுக்குத் தந்துவிட்டது. தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டு அதற்குரிய முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுவிட்டன.
நள்ளிரவு. முகாமில் இருந்து பிரிந்து தனியாக நிற்கிறான். மன படபடப்புக்கு இடையில் ஒரு சிறு சத்தம், ஒரு வாகனம் வருவதைப்போல உணர்கிறான். அந்த வாகனம் எதுவாக இருக்கும்… தன்னிடம் சொல்லப்பட்ட வாகனம்தானா? அல்லது முகாமின் நள்ளிரவு அதிரடிக் கண்காணிப்பு வாகனமா? அவனுக்குச் சிறிது கலக்கம் வந்துவிடுகிறது. வாகனம் மிகச் சரியாக அவன் அருகில் வந்து நிற்கிறது. அது ராணுவத்தினர் பயன்படுத்தும் வாகனம்தான். அவன் தப்பித்துச் செல்வதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது அவனுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படியே அவன் சத்தம் எதுவும் இன்றி அந்த வாகனத்தில் ஏறிப் படுத்துக்கொள் கிறான். ஏதோ பொருட்கள் அடுக்கிவைக்கப்பட்டு இருந்த லாரி போன்ற வாகனம் அது.
முகாம் நான்கு அடுக்குப் பாதுகாப்பு வளையங்களைக்கொண்டது. இவை அனைத்தையும் கடந்து சென்ற பின்புதான், அவனுக்கு நிம்மதிப் பெருமூச்சு வெளிப்படு கிறது. எப்படித் தூக்கம் வந்தது என்றே தெரியவில்லை. தூங்கிப்போனான். திடீர் என்று ராணுவ வாகனம் குலுங்கி நிற்கிறது. கொஞ்சம் வெளிச்சம் தெரிவதில் இருந்து அதிகாலை என்பதை உணர்ந்துகொள்கிறான். சுற்றிப் பார்த்தபோது அது ஒரு காட்டுப் பகுதி என்பதை உணர்ந்துகொள்கிறான். டார்ச் லைட் ஒன்றின் வெளிச்சம் காட்டி, அவனை வாகனத்தில் இருந்து இறங்கச் சொல்லி, ஒருவன் சைகை காட்டுகிறான். தான் இரவெல்லாம் பயணம் செய்த வாக னத்தை வெளிச்சத்தில் கூர்ந்து கவனித்தான். மின்சாரம் தாக்கியதைப்போல, நிலைகுலைந்துபோனான்.
அவனைக் கொண்டுவந்த அந்த வாகனத்தில் இறந்துபோன மனித உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன. எண்ணிக்கை 20-க்கும் குறையாது. அவன் இறங்கிக்கொள்கிறான். இங்கு இருந்துதான் அவன் தப்பிச் செல்ல வேண்டும். அவனால் நடக்கவும் முடியவில்லை, ஓடவும் முடியவில்லை. அடர்ந்த காட்டில் இருந்து எவ்வாறு, யார் கண்ணிலும் படாமல் வெளியேறுவது என்பதைவிடவும், அந்த நள்ளிரவில் தன்னோடு பயணித்த அந்த உடல்களைப்பற்றியே எண்ணம். சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட இவர்கள் அனைவருமே போராளிகள். தன்னுடன் நண்பனாக, தோழனாக, சகோதரனாக வாழ்ந்த உறவுகள்தான். எத்தனை வீரம் நிறைந்தவர்கள்? அவனது சிந்தனை அதற்கு மேல் செயல்பட மறுத்துவிட்டது. இவை எல்லாவற்றையும்விட வேறொரு கவலைதான் அவனை வதைத்து எடுக்கத் தொடங்கிவிட்டது. பாலியல் வன்கொடுமையால் கொல்லப்பட்ட தன் சக பெண் போராளிகளும் கட்டாயம் இதில் இருந்து இருப்பார்கள் என்பதை நினைக்கும்போது, குளிர் நிறைந்த அந்த அதிகாலையிலும் உடல் வியர்க்கத் தொடங்கியிருந்தது. காலச் சக்கரங்களின் கூரிய பற்களில் ஏன் தமிழ்ச் சமூகம் சிதைக்கப்பட வேண்டும் என்று அவன் யோசிக்கிறான்!
- விதைப்போம்…
நன்றி: சி.மகேந்திரன் & விகடன் 



வீழ்வேனென்று நினைத்தாயோ? VII


ங்கோ சுற்றுலா சென்ற இடத்தில் ஐந்து நிமிடங் களோ, பத்து நிமிடங்களோ மனைவியைக் காணவில்லை என்றால், உங்கள் மனம் எப்படித் துடித்துப்போகும்? பொருட்காட்சித் திடலில் விரல் பிடித்து வந்த குழந்தை திடீரெனக் கூட்டத்தில் தொலைந்தால் உங்கள் மனம் எப்படியெல்லாம் பதைபதைப்பு அடையும்?
ஆனால், இன்று குடும்பமே திசைக்கு ஒன்றாகக் கிழிந்துகிடக்க, கணவன் எங்கே; மனைவி எங்கே; பிள்ளைகள் எங்கே என்று ஆண்டுக்கணக்காகத் தங்கள் உறவுகளைத் தேடிக்கொண்டு இருக்கிறது ஈழச் சமூகம். அதன் வேதனை எப்படி இருக்கும்?
மாலதி ஓர் ஈழத்து இளம் பெண். கணவன், கைக்குழந்தையுடன் யுத்தத்தின் கடைசி நாட்களில் இருந்து உயிர் தப்பியவள். இழப்புகள் அனைத்தையும் நேரில் பார்த்த அவளுக்கு, கணவனும் குழந்தையும் உயிர் தப்பியதில் சிறு ஆறுதல். ஆனால், அதுவும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அவள் கணவன் ராணுவத்தால் அழைத்துச் செல்லப்படுகிறான். விசாரணைக்குப் பின்னர், திருப்பி அனுப்பப்படுவான் என்று சொல்லப்பட்டது. ஆனால், நாட்கள் சென்றுகொண்டே இருக்கின்றன. எந்தத் தகவலும் இல்லை. மாலதிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கலக்கத்திலேயே மாதங்கள் கழிந்த பிறகு, அவள் கணவன் தென் இலங்கை சித்ரவதை முகாம் ஒன்றில் காவல் வைக்கப்பட்டு இருக்கிறான் என்ற தகவல் கிடைக்கிறது. உறவுகள் மூலம் பணம் பெற்று, லஞ்சம் கொடுத்து முகாமில் இருந்து தன்னையும் குழந்தையையும் விடுவித்துக்கொள்கிறாள் மாலதி.
பூசா என்னும் இடத்தில்தான் அவளது கணவன் சிறை வைக்கப்பட்டு இருக்கிறான். வன்னியில் இருந்து கொழும்பு வழியாக, பூசா முகாமுக்குச் செல்ல 383 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டும். சிங்களவர்கள் மட்டுமே அடர்ந்து நடமாடும் பகுதியான பூசா, இன்று இலங்கையின் சித்ரவதை முகாம்களுக்கு எல்லாம் தலைமை வகித்துக்கொண்டு இருக்கிறது.
முகாம் சென்று கணவனைப் பார்த்த மாலதிக்கு அழுகை பீறிட்டு வருகிறது. அடக்கிக்கொள்கிறாள். பரிதாபத்துக்கு உரிய அவளது கணவன் வேதனைகள் அனைத்தையும் விழுங்கி விட்டு, எச்சரிக்கையுடன் முகத்தில் குறுஞ்சிரிப்பைக் காட்ட முயற்சிக்கிறான். அது தன்னைச் சமாதானப்படுத்த முயலும் பொய் சிரிப்பு என்பதைப் புரிந்துகொள்கிறாள். சிதைக்கப் பட்டு உள்ள கணவனின் நிலை, அவளுக்கு எளிதாகப் புரிகிறது. கணவனை மீட்க மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் ஆசியாவுக்கான இயக்குநர் பிரட் ஆதாமை அணுகுகிறாள். இவர் மூலம்தான் மாலதியின் கதை வெளி உலகுக்குத் தெரியவருகிறது. நீதிமன்றத்தை அணுகி விடுதலை பெறலாம் என்று யோசிக்கிறார்கள்.
தான் விலை கொடுத்து வாங்கிய, ஆடுகளையும் கோழிகளையும் தேவைப்படும்போது அதன் உரிமையாளர் அறுத்துச் சமைத்துக்கொள்வதைப்போலத்தான் இங்கு உள்ள சித்ரவதைக் கைதிகளின் நிலையும். ராணுவத்தின் இந்தக் கழுத்தறுப்பு செயலைத் தடுக்கும் மனிதநேயக் கடமை, நீதிமன்றங்களிடம் மட்டும்தான் இருக்க முடியும். ஆனால், நடைமுறையில் இந்த நீதிபதிகளுக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது. இந்தக் கொடுமைகளைக் காணாமல் இருக்க, பயத்தில் குழந்தைகள் கண்களை மூடிக்கொள்வதைப் போல மூடிக்கொள்கின்றன இலங்கையின் நீதிமன்றங்கள். இந்த நீதிமன்றங்களில் இருந்து மாலதியால் எந்த நீதியைப் பெற முடியும்?
ஆனாலும், கணவனின் மறுக்கப்பட்ட நீதிக்காகப் போராடும் பெண்ணின் வலிமை யாராலும் கணக்கிட்டுச் சொல்லக் கூடியது அல்ல. இந்த வலிமையைக் கண்ணகியின் கதையில் இருந்தும் சாவித்திரியின் கதையில் இருந்தும் நம்மால் அறிந்துகொள்ள முடியும். மாலதியும் தன் கணவனின் மறுக்கப்பட்ட நீதிக்காகப் போராடத் தொடங்குகிறாள். மாலதியின் கதையை முழுவதும் தெரிந்துகொள்வதற்கு முன்பாகவே, போருக்குப் பின் தமிழ் இளைஞர்களிடம் இலங்கை அரசு வளர்க்கும் தேச பக்திபற்றிய கதை ஒன்றும் நமக்குக் கிடைக்கிறது.
முள்ளி வாய்க்காலில் இறந்தது போக, எஞ்சி இருக்கும் இளைஞர்களுக்கு எப்படியும் தேச பக்தியை ஊட்டி வளர்த்துவிடும் தீவிரத்தில் இன்றைய இலங்கை அரசு இருக்கிறது என்ற தகவல் கிடைத்தபோது, பல கேள்விகள் மனதுக்குள் முளைக்கத் தொடங் கின. முற்றாக உடல் பாதிக்கப்பட்டநிலையில் சித்ரவதை முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞன் சுரேஷ் வெளியிட்டுள்ள தகவல்கள் ஒருபுறம் வேடிக்கைக்கு உரியதாகவும் மறுபுறம் அதிர்ச்சிக்கு உரியதாகவும் அமைந்துஉள்ளன!
முகாம்களில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்குறித்து சுரேஷ் கூறுகிறார். அதாவது, சூரியன் உதிப்பதற்கு முன்பே அனைவரும் எழுந்துவிட வேண்டும். திறந்தவெளி மைதானம் ஒன்றில் அனைவரும் வரிசையாக நிற்க வேண்டும். கொடிக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி தொடங்கும். வரிசையில் நின்றவர்கள் அனைவரும் தேசியக் கொடிக்கு பயபக்தியுடன் முதல் வணக்கம் செலுத்த வேண்டும். முன்னரே பதிவுசெய்யப்பட்ட இலங்கையின் தேசிய கீதம் ஒலிபெருக்கியின் மூலம் இசைக்கப்படும். இதனை முகாமில் இருப்பவர்கள் திருப்பிப் பாட வேண்டும். தேசிய கீதத்தை உணர்வோடு பாடுகிறார்களா… சிங்கள உச்சரிப்பு சரியாக இருக்கிறதா என்பதை ரகசியக் குழுக்கள் கண்காணித்துக்கொண்டு இருக்கும்.
இந்திய தேசியக் கொடியின், நடுவில் அமைந்த அசோகச் சக்கரம் புத்த மதத்தின் தர்மத்தை நினைவுகூர்கிறது. இந்திய எல்லை களோடு முரண்பாடுகொண்ட நாடுகள் எல்லையைச் சுற்றி இருக்கத் தான் செய்கின்றன. இருப்பினும் தர்மச் சக்கரத்தோடுதான் இந்திய தேசியக் கொடி பறந்துகொண்டு இருக்கிறது. ஆனால், இலங்கைக்கோ இந்தியாவைப் போல, பகை நாடுகள் என்று எதுவுமே இல்லை. அது புத்த மதத்தைத் தங்கள் அரச மதமாக அறிவித்துக்கொண்ட நாடு. அன்பையும் கருணையையும் சுமந்த பௌத்தம் பேசும், இலங்கையின் தேசியக் கொடியில் சிங்கம் கையில் வாளேந்தி நிற்கிறது. சிங்கம் தூக்கிய வாள் யாருக்கு எதிரானது? தமிழர்களுக்கு எதிரானது என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. அந்தக் கொடிக்குத்தான் துப்பாக்கி முனையில் வணக்கம் வைக்க முகாம் இளைஞர்கள் சித்ரவதை செய்யப்படுகிறார்கள்!
- விதைப்போம்…
நன்றி: சி.மகேந்திரன் & விகடன் 



வீழ்வேனென்று நினைத்தாயோ? VI


ன அழிப்பு அரசாங்கம், கொடிய மனம்கொண்டு தன் மக்களை அழிப்பதையே தொழிலாகக்கொண்டு இருக்கிறது என்பதற்கு உதாரணம், மெனிக் ஃபார்ம் முகாம்!
ஹிட்லரின் இன அழிப்புச் சித்ரவதை முகாம்களுக்கும் ராஜபக்ஷேவின் சித்ரவதை முகாம்களுக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. ஹிட்லரின் கொடுமைகளை அறிந்துகொள்ள, அன்றைய சித்ரவதைக் கூடத்தில் வதைபட்ட கதை ஒன்றை அறிந்துகொள்ளுதல் அவசியமாகிறது.
சித்ரவதை அடக்குமுறைத் தாக்குதலால், அந்தப் போராளியின் நாடித் துடிப்பு குறைந்துகொண்டே வருகிறது. ஆனால், சித்ரவதைக்குத் தலைமை ஏற்று இருந்த அதிகாரி, ”அவன் சாகக் கூடாது. செத்துவிட்டால், அவனிடம் உள்ள ரகசியங்களும் செத்துவிடும்!” என்று பதற்றப்படுகிறான். அவன் உடலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைப்பதன் மூலம், ரகசியங்கள் அனைத்தையும் சேகரிக்க முயற்சிக்கிறார்கள். அவன் மனைவி அகுஸ்தினாவும் ஒரு தலைமறைவு இயக்கப் போராளி தான். கணவன் கைது செய்யப்பட்ட சில நாட்களில், அவளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறாள். ஹிட்லரின் தோல்விக்குப் பிறகு விடுதலை அடைந்த அகுஸ்தினா, பரபரப்புடன் கணவனைத் தேடி ஓடுகிறாள்.
பெரும் போராட்டத்துக்குப் பின், நாசிக் களின் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டு, அவளுடைய கணவன் தூக்கில் இடப்பட்டான் என்ற தகவல் கிடைக்கிறது. கணவனின் நினைவுகளில் இருந்து விடுபட முடியாத அவள், சித்ரவதை முகாமிலும் சிறைச்சாலையிலும் கணவனைப்பற்றிய தகவல்களுக்காக அலைந்து திரிகிறாள். அங்கு அவளுக்குச் சிறைக் காவலனிடம் ஒரு ரகசியத் தகவல் கிடைக்கிறது.
அகுஸ்தினாவின் கணவன் சிறைக் காவலன் ஒருவனின் உதவியோடு, தனது சிறைக் குறிப்புகளைப் பதிவுசெய்து வைத்திருக்கிறான். ஐந்து இடங்களில் பிரித்து மிகவும் ரகசியத்துடன் அந்தக் குறிப்புகள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அந்தக் குறிப்புகள் அனைத்தையும் ஒன்றுதிரட்ட அகுஸ்தினாவுக்கு இரண்டு முழு ஆண்டுகள் தேவைப்பட்டன. சிறையின் ரகசியக் கண் களுக்குத் தெரியாமல் வெற்றிகரமாக எழுதப்பட்ட இந்தக் குறிப்புகளுக்கு ‘From gallow’ என்று பெயரிட்டாள் அகுஸ்தினா. இதன் ஆங்கில நூல் 1949-ம் ஆண்டிலேயே தோழர் இஸ்மத் பாட்சா அவர்களால் ‘தூக்குமேடைக் குறிப்புகள்’ என்னும் பெயரில், தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. சிறையில் அடைபட்டு, பின்னர் தூக்கில் இடப்பட்ட இந்த நூலை எழுதிய இவளுடைய கணவன்தான், செக்கோஸ் லோவேகிய கம்யூனிஸ்ட் கட்சியின் புகழ் மிக்க தலைவன் ஜூலியஸ் பூசிக்.
”மருந்து ஊற்றிய பெண் கேட்கிறாள். ‘எங்கு வலி அதிகம்?’ என்று. ‘எல்லா வலி யும் இதயத்தில்தான்’ என்கிறேன். ராணுவ முரடன் திமிர்கொண்டு கேட்கிறான், ‘உனக்குத்தான் இதயமே கிடையாதே’ என்று. என் பதிலில் உறுதி கூடுகிறது. நான் அழுத்தமாகச் சொல்கிறேன். ‘இதயம் எங்க ளுக்கு நிச்சயமாக இருக்கிறது’ என்று. அவன் மௌனமாகிவிடுகிறான்!” – என்று அவருடைய குறிப்பில் ஒரு செய்தி உண்டு.
ஜூலியஸ் பூசிக்கின் தூக்கு மர நிழலைப் போலவே, சித்ரவதை முகாம் ஒன்றின் கடிதமும் நமக்குக் கிடைக்கிறது. மனதைப் பதற்றம் அடையவைக்கும் சித்ரவதை முகாம் கடிதம், 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18-ம் தேதி எழுதப்பட்டு உள்ளது. கடிதம் எழுதி 16 மாதங்கள் கழிந்துவிட்டன. கடிதத்தை அடிப்படையாகக்கொண்டு யோசித்தால், இதை எழுதியவர் இன்னமும் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவே.
எழுதியவரின் பெயர் ராஜசுதன். வயது 21 என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. மண்ணுக்காகப் போராடிய இளமைக் கால அறிமுகத்துடன் தொடங்குகிறது கடிதம்.
”போராட்டத்தில் களம் இறங்கிய நாங்கள், பல்லாயிரக்கணக்கில், சக போராளிகளின் உயிரை இழந்து இருக்கிறோம். எல்லாவற் றையும் இழந்த நாங்கள், எங்கள் உறுதியை மட்டும் இழக்கவில்லை. மரணத்தையே ஒரு சவாலாகக்கொண்டு எதிரிகளின் நெஞ்சாங் கூட்டுக்குள் சென்று அச்சமின்றித் திரும்பியவர்கள் நாங்கள். கடைசி நிமிடத்தில் நாங்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டோம்.
ஆனால், இன்று நாங்கள் இருப்பது மனித நடமாட்டமே இல்லாத, காட்டுக்குள் அமைந்த ஒரு சித்ரவதைக் கூடத்தில். இது மனிதர்கள் வாழும் தகுதிகொண்ட பூமிதானா? அல்லது புராணக் கதைகளில் சொல்லப்படும் நரகமா என்பது எனக்குத் தெரியவில்லை. நாங்கள் தனித் தனியாக அடைத்துவைக்கப்பட்டு உள்ளோம். எல்லா இடங்களிலும் ஒரே ரத்த வாடைதான். கதறி அழும் குரல், விம்மலை மட்டும் வெளிப்படுத்தும் குரல், இறுதி வரை வைராக்கியத்தை இழந்துவிடாத உறுதி மிக்க குரல்… என்று எத்தனைவிதமான குரல்கள் எங்களைச் சுற்றிக் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆடைகளைக் களைந்து நிர்வாணப்படுத்தி, எத்தனை சித்ரவதை உண்டோ, எல்லாம் செய்து முடிக்கிறார்கள். என் நகங்களில் ஊசி ஏற்றப்பட்டு, நகத்தில் ரத்தம் கசிந்து காய்ந்துகிடக்கிறது. நகங்கள், சிலருக்குப் பிடுங்கப்பட்டுவிட்டதாகவே அறிகிறேன். பெண் புலிகளாக இருந்த என் அன்புச் சகோதரிகளின் கதறல் கேட்கிறது. இவர்களின் மானம் காக்கத்தான் நாங்கள் முதலில் ஆயுதம் ஏந்தினோம். இன்று எங்க ளால் எதுவுமே செய்ய முடிய வில்லை. இரவு நேரங்களில் ஆதரவற்ற அந்தக் குரல்கள், விடிய விடியக் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.
இரவில் மனப் போராட்டத்தை நடத்தி முடித்த எங்களுக்கு, அதி காலையில் புதிய வேலை ஒன்று காத்திருக்கும். இறந்துபோனவர்களின் உடலை எரித்துச் சாம்பலாக்கும் வேலை. அந்தப் பணியை, எங்கள் சக போராளிகளுக்குச் செலுத்தும் கௌரவமாகக் கருதுகிறோம். ஆனால், ஒன்று மட்டும் எங்களுக்குப் புரியவில்லை. நாங்கள் கௌரவத்துடன் எரித்து முடித்த அந்த உடல் யாருக்குச் சொந்தம்? அது ஆண் புலியின் உடலா? பெண் புலியின் உடலா? எங்களில் யார்? புரிந்துகொள்ள முடியவில்லை. துணி ஒன்றால் முழுவதும் மறைத்துவைக்கப்பட்ட அந்த உடல் யாருடை யது என்று எங்களால் அறிந்து கொள்ள இயலவில்லை!” என்கிறது அந்தக் கடிதம்.
வன்னிக் காடுகளின் மறைவிடச் சித்ரவதைக் கூடாரங்களில் அடைத்து வைக்கப்பட்டு உள்ள இளைஞர்கள் இவர்கள். முள்ளி வாய்க்காலில் இறுதி நேரத்தில் இலங்கை ராணுவத் தால் கைது செய்யப்பட்டவர்கள். இவர்களுடைய பெயர் எந்தக் கணக்கிலும் இருக்காது. அரசாங்கத் தின் பட்டியலிலோ அல்லது ஐக்கிய நாடுகளின் பெயர்ப் பட்டியலிலோ இடம் பெறாது. எச்சரிக்கை நடவடிக்கை முன்னரே எடுக்கப்பட்டு இருக்கும். இவர்கள் புலிகளின் ராணுவத்தில் முன்னணிப் பொறுப்பில் இருந்திருக்க வேண்டும். ஹிட்லரின் சித்ரவதை முகாம்போலவே இவர்களுக்கும் புலிகளின் ரகசியங்கள் தேவைப்படுகின்றன. உடனே கொன்றுவிடாமல், சித்ரவதை செய்வதற்கு இதுதான் காரணம். இவர்களின் நிலை இதுவெனில், முள்ளி வாய்க்கால் பெரு நெருப்புக்கு இடையே வெளியேறிய மக்கள் கூட்டத்தில் புலிகள் என்ற பெயரில் பிரித்து எடுக்கப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 11,696. இது அரசாங்கத்தின் பதிவுகளில் இடம்பெற்று உள்ளது. இவர்களின் நிலை என்ன? இந்த இளைஞர்களுக்கு நேர்ந்த சித்ரவதைகள், ஓராயிரம் கதைகளைக் கூறி நம் நெஞ்சில் ஏறி மிதித்துக்கொண்டே செல்கின்றன!
- விதைப்போம்…
நன்றி: சி.மகேந்திரன் & விகடன் 



வீழ்வேனென்று நினைத்தாயோ? V


முள்ளி வாய்க்காலில் இருந்து தன்னந்தனியாக தனது ஆண் குழந்தையைச் சுமந்து வரும் பெண்ணுக்கு அவளது குழந்தையைப் பாதுகாப்பது ஒரு பெரும் போராட்டமாக மாறியது. யாராவது காப்பாற்றி குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைக்க மாட்டார்களா என்று அலை பாய்கிறாள். ஆனால்,  குழந்தையைப் பிரித்து அனுப்ப, அவள் மனம் ஒப்பவில்லை. இத்தனை நாட்களாக, தான் அடைந்த துன்பங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம். அந்த நேரத்தில் முள்வேலிக்கு அப்பால் இரண்டு கண்கள் தன்னையே பார்த்துக்கொண்டு இருப்பதை அவள் கவனித்துவிட்டாள். அது யார்? அவளது உறவினரா? அப்படித் தெரியவில்லை.  தானும் தன் குழந்தையும் தனியே துயரப்படும் வேதனையைப் பார்த்துத் துயரப்படுபவராக இருக்கக்கூடும். தன் உடல் பலத்தை எல்லாம் திரட்டிக் குரல் எழுப்பினாள். தன் குழந்தை கடுமையான வயிற்றுப்போக்கால் சாகப்போகிறது என்று. அந்தச் செய்தி, அந்த மனிதரின் காதுகளில் விழுந்திருக்க வேண்டும்.
அவர் மருத்துவரா? மருத்துவம்பற்றி அறிந்தவரா என்பது தெரியவில்லை. அவர் அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டார். சிறிது நேரத்துக்குப் பின்னர், முள்வேலி முகாமில் இருந்து வெளிப்புறம் நோக்கிக் குழந்தைகள் எறியப்பட்டதைப்போலவே, வெளியில் இருந்து, பாதுகாப்புடன் ஒரு பொட்டலம் அவளை நோக்கி வந்து விழுந்தது. அதைப் பிரித்துப் பார்த்தவுடன், உடலில் இருந்து வெளியேறிய உயிர் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வந்து சேர்ந்ததைப்போல உணர்ந்தாள். அதில் குழந்தையின் வயிற்றுப்போக்குக்கான மருந்தும் அதனை எவ்வாறு கொடுக்க வேண்டும் என்ற விவரமும் இருந்தது. அதன் பின்னர், குழந்தை உயிர் பிழைத்துக்கொண்டது என்பதை இறுதியாகக் கிடைத்த தகவல்கள் உறுதி செய்கின்றன.
இந்த ஒரு நிகழ்வு மட்டும் அல்ல, இதனைப்போன்ற எத்தனையோ வேதனைகளுடன் தமிழ் அன்னையரும் குழந்தைகளுமாகத் தவித்து நிற்கும் முள் கூண்டுதான் மெனிக் ஃபார்ம் முகாம்.
எந்த நேரத்தில் அங்கு என்ன நிகழும் என்று யாராலும் அனுமானித்துக் கூற முடியாது. பல்வேறு காரணங்களைச் சொல்லி, இளம் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு இழுத்துச் செல்லப்படலாம். அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவள், உயிருடன் திரும்பி வராமலும் போகலாம். ராணுவம் மட்டும் அல்லாது, சிங்களம் பேசும் கடைநிலை ஊழியன் ஒருவன் இன வெறுப்பை எச்சிலாக முகத்தில் உமிழ்ந்துவிட்டுச் செல்லலாம். எல்லாவற்றையும் சகித்து விழுங்கிக்கொள்ளத்தான் வேண்டும். இலங்கையின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சரத் என். சில்வா, முள்வேலி முகாம்களைப் பார்வையிட்ட பின்னர், தனது வேதனை வார்த்தைகளை வெளிப்படுத்தி உள்ளார். ”ஊடகங்களோடு இந்த வார்த்தைகளைப் பகிர்ந்துகொண்டேன் என்பதற்காக, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நான் தண்டிக்கப்படும் வாய்ப்பு களும் இருக்கின்றன. இதன் மூலம் என் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் என்னால் சொல்ல முடியாது…” என்பதை முதலில் குறிப்பிட்டுவிட்டு, தனது பேட்டியைத் தொடங்குகிறார்.
”பாதிப்புகளை நேரில் பார்த்த பின்னர், அவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை. அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள துயரச் சுமை, என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாதவை. அவர்களின் மனம் எதையும் வெளிப்படுத்தும் தகுதியை இழந்துவிட்டது. அந்த அளவுக்கு அவர்கள் பலவீனம் அடைந்துவிட்டார்கள். அவர்களை ஆறுதல்படுத்த வேண்டும் என்பதற்காக, லேசாகச் சிரிக்க முயற்சிக்கிறேன். என்னால் இயலவில்லை. ‘உங்கள் துயரங்களை நாங்களும் பகிர்ந்துகொள்கிறோம்’ என்று சொல்வதற்கு மனம் விரும்புகிறது. பொய் சொல்வதாக என் மனசாட்சி என் மீது குற்றம் சுமத்துகிறது. வாயைத் திறக்க முயற்சிக்கிறேன். உதடுகள் பிரிய மறுக்கின்றன. என்னால் எந்த உறுதியையும் இங்கு தர முடியவில்லை.
உலகம் முழுமையில் இருந்தும் இந்த மக்களுக்கு உதவி செய்வதற்கு கோடி கைகள் தயாராக இருக்கின்றன என்பதும் எனக்குத் தெரியும். ஆனால், அந்த உதவிகள் அனைத்தும் அவர்களுக்கு வந்து சேருமா? என்பது எனக்குத் தெரியாது. இன்று அவர் களுக்கு உடனடியாகத் தேவைப்படுவது, இந்த முகாம் தரும் நரக வாழ்க்கையில் இருந்து விடுபடுவதுதான். எல்லாவற்றையும் விளக்கிக் கூறுவதைவிட, கழிப்பறை வசதியைப்பற்றி கூற வேண்டும். தங்கள் காலைக்கடனை முடிக்க நீண்ட வரிசையில் மக்கள் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கிறார்கள் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் என்று. இது எத்தகைய வேதனை என்பது காத்துக்கிடப்பவர்களுக்குத்தான் தெரியும்” என்று தலைமை நீதிபதி தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.
ஈழத்து மக்கள் வெகு காலத்துக்கு முன்னரே, முன்னேறிய வாழ்விட வசதி களை அமைத்துக்கொண்டவர் கள். குறிப்பாக, பெண்களின் உணர்வுகளை நன்கு புரிந்து, அவர்களுக்குக் கௌரவம் அளிக்கும் சமூகம். கௌரவம் மிக்க அந்தச் சமூகம் பெற்றெடுத்த பெண் பிள்ளைகள், முகாமில் சந்திக்கும் துயரம் சகித்துக் கொள்ளக்கூடியதாக இல்லை. நெருஞ்சிமுள்ளைப்போல, அவர்கள் மனதை உறுத்திக்கொண்டு இருக்கும் ஒன்றை, இங்கு குறிப்பிடுவது அவசியம் ஆகிறது. பாதுகாப்பற்ற கழிப்பிடங்களுக்கும் குளிப் பதற்கும் பெண்கள் செல்கி றார்கள். வக்கிரம்கொண்ட ராணுவத்தின் கண்கள், மறை விடத்தில் இருந்து பார்க்கின்றன. இதனை யாராலும் தடுக்க முடிவது இல்லை. பெண்கள் அவமானத்தால் தினம் தினம் சிதைந்துபோகிறார்கள்.
இந்த நிகழ்வை எல்லாம்  வாசிப்பவர்களுக்கு, இது கற்பனைதானோ என்று நினைத்துக்கொள்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. முள்ளிவாய்க்கால் துயரப் பெருவெளியின் காயம் சுமந்த மக்கள், உலகின் திசைகள் தோறும் எப்படியோ நகர்ந்து போய்க்கொண்டு இருக்கிறார் கள். ஐக்கிய நாடுகள் சபையி லும் மனித உரிமை அமைப்பு களிடமும் தாங்கள் சந்தித்த துயரங்களை, எழுத்துப்பூர்வமான வாக்குமூலங்களாக இவர்கள் அளித்து இருக்கிறார் கள். அதில் ஒன்றுதான், குழந்தைக்காகப் போராடி அதில் வெற்றி பெற்ற, இந்த முள்ளி வாய்க்கால் பெண்ணின் கதையும், உலக இலக்கியப் பரப்பின் எதிர்காலத்தில், இவ்வாறான ஆயிரமாயிரம் கதைகளை, ஈழ மக்கள் எழுதிக் கொண்டே இருக்கப்போகிறார்கள்!
ராணுவ வெற்றிக்குப் பின் இதை வெறியாக மாற்றிக்கொண்டு, ஆணவத்தின் சிகரத்துக்கே இலங்கை அரசு சென்றுவிட்டது. இந்த வெறியில் போரில் சிதைக்கப்பட்ட மக்களை போர்க் கைதிகளாகத்தான் இலங்கை அரசு கருதியது. போருக்கும் மக்களுக்கும் எந்தவிதத்திலும் சம்பந்தம் இல்லை என்பதுதான் உண்மை. போர் என்பது அந்த மக்களின் மீது திணிக்கப்பட்ட ஒன்று. ‘பொதுமக்கள் அனைவரும் தங்களால் சிறைப்பிடிக்கப்பட்ட அடிமைகள்’ என்ற ராணுவத்தின் மன நிலை எத்தகைய அநீதியானது? அடிமைகளுக்கு ஏன் அடிப்படை மனித வசதி என்ற கருத்து நிலை இவர்களின் ஆழ் மனத்தில் நின்று அவர்களை இயக்கிக்கொண்டு இருந்தது. சுகாதார வசதிகளை முற்றாக நிராகரித்து, மக்களை மரணச் சகதியில் தள்ளும், நோக்கம்கொண்ட முகாம்களை அமைத்ததற்கும் இதுதான் காரணமாகத் தெரிகிறது. இங்கு சர்வதேச மனித உரிமைகள் அனைத்தும் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு இருந்தன.
இறந்த பின்னர், மனிதர்களை வைப்பதற்கு ஒதுக்கப்படும், மயான பூமியின் ஆறடி நிலம் என்பதைப் போலத்தான், மெனிக் ஃபார்மில் வந்து சேர்ந்தவர்களுக்கும். முகாமில், ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல், சராசரியாக ஒவ்வொருவருக்கும் ஒரு சதுர மீட்டர்தான் இடம்!
- விதைப்போம்…
நன்றி: சி.மகேந்திரன் & விகடன்