Wednesday, April 6, 2011

உங்கள் உடலுக்குள் ஒரு ஏ.சி!

      அடடா வெயில்டா... அனல் வெயில்டா! 



            வெயில் தன் வேலையைக் காட்டத்தொடங்கிவிட்டது! வியர்வை, தாகம் , அசதி என எதிர்வரும் நாட்களில் வெயில் விளையாட்டு சூடு பிடிக்கத் துவங்கிவிடும். வெயிலின் உக்கிரத்தில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்!    



"நிறைவாக நீர் அருந்தினாலே போதும்!" என்கிறார்கள் அனைத்துத் தரப்பு மருத்துவர்களும். 


  வெயில் காலத்தில் உடலின் நீர் அளவு குறைவதால்தான் தாகம், மயக்கம், நீர்க்கடுப்பு என்று ஏகப்பட்ட சங்கடங்கள். அதைத் தவிர்க்க சாதாரண நாட்களைக் காட்டிலும், அதிக அளவில் நீர் அருந்தினாலே போதும். வெறும் தண்ணீராக மட்டுமே குடிக்காமல், இயற்க்கையிலையே குளிர்ச்சியான பொருட்களைக் கலந்து பருகினால், வெயிலின் பாச்சா பலிக்காது. 





   வெந்தயத்தை வறுத்து ஆறிய பிறகு, தண்ணீரில் போட்டுப் பருகினால், வெயிலால் உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் உண்டாகும் புண்கள் குணம் அடையும்.




  எலுமிச்சம் பழத்தில் விரல் அளவுக்குத்  துளையிட்டு, தண்ணீர் பானைக்குள் போட்டு வைத்துப் பருகினால் குளிர்ச்சிக்குக் குறைவு இருக்காது. 




  வெயில் காலத்தில் ஏற்படும் இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகளுக்குத் தண்ணீரோடு துளசி அல்லது அதிமதுரம் சேர்த்துப் பருகலாம். 




  ரசாயனக்  குளிர்பானங்களைத் தவிர்த்து, மோர், தர்பூசணி, இளநீர், ரசம் ஆகியவற்றை அருந்துங்கள். இது எதுவும் கிடைக்கப் பெறாதவர்கள், ஒரு நாளைக்கு நான்கு லிட்டர் தண்ணீர் அருந்தினாலே போதும். 




   விளையாட்டு வீரர்கள், அதிக வேலைப் பளுகொண்டவர்கள் தங்கள் சிறுநீரின் நிறத்தைப் பார்த்து, அதற்குத் தக்கபடி தண்ணீர் பருகலாம். சிறுநீர் இளமஞ்சள் நிறத்தில் இருந்தால், வழக்கமான அளவில் தண்ணீர் பருகலாம். அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறினால், உடனடியாக அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். 




   வெயிலால் ஏற்படும் வியர்வை, வியர்க்குரு, அரிப்பு போன்றவற்றைத் தடுக்க குளியல்தான் ஆயுதம். வாரம் இருமுறை விளக்கெண்ணை மற்றும் தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடல் உஷ்ணத்தை வெகுவாகக் குறைக்கும். 





    வெயில் காலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறி, சிறுநீர் வெளியேறுவது குறைந்தால், நீர்க்குத்தல் ஏற்படும். அதிக அளவு தண்ணீர் பருகுவதுதான் அதைத் தவிர்க்க ஒரே தீர்வு! 


Tuesday, April 5, 2011

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நம் பங்கு என்ன?

      சுற்றுச்சூழல்.... இது நீங்களும், நானும், இன்ன பிற உயிர்களும் வாழத் தேவையான முக்கியமான நாடி. நிலம், நீர், காற்று, வெளி, நெருப்பு, உணவுச் சுழற்சி, வன உயிர்கள், விவசாயம், பருவ நிலை ஆகியவை வலைப்போல சுற்றுச்சூழலில் பிணைக்கப்பட்டு இருக்கிறது. 

                           சுற்றுச்சூழல் பாதுகாக்க சில குறிப்புகள்......

 * வீடு, அலுவலகங்களில் குண்டு பல்புகள் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள்.


*  வீடு கட்டும்போது முழுக்கவும் கான்க்ரீட்டால் கட்டாமல், வீட்டின் பின்புறம் சிறு தோட்டம் அமைத்து செடிகள் வளர்க்கலாம்.


*  டிராஃபிக்கில் இருக்கும்போது வண்டியை 'ஆஃப்' செய்துவிடுங்கள்...


*  வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என்று  தனியாக பிரித்து வைக்கலாம். 


*  கூடுமானவரை சொந்த வாகனங்களைத் தவிர்த்து, பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தலாம். சைக்கிள் உபயோகிப்பது இன்னும் சிறப்பு.



*  கடைகளுக்குச் செல்லும்போது பை எடுத்துச் செல்லலாம். அங்கு சென்று பிளாஸ்டிக் பைகளை வாங்கி பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள்! 



*  ஒருமுறை உபயோகப்படுத்திய பொருட்களை மீண்டும் இன்னொரு முறைப் பயன்படுத்த முடியுமா என்று பார்க்க வேண்டும். முடிந்தால் அதை நடைமுறைப் படுத்தலாம்.



*  கணினியில் பிரிண்ட்-அவுட் எடுக்கும்போது ஒரு தாளின் இரண்டு பக்கத்தையும் பயன்படுத்தலாம். இதனால் பேப்பர் பயன்பாடு குறையலாம்! 


*  பள்ளி, கல்லூரி, அலுவலகம் ஆகியவற்றில் சிறு குழுக்களை ஏற்படுத்தி சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தலாம். 


   இவை எல்லாம் அடிப்படை விசியங்கள். இவற்றை நீங்கள் பின்பற்றினாலே சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றுகிறீர்கள் என்பது தெளிவாகும்! 

       சுற்றுச்சூழல் தொடர்பாக அறிவு பெற கீழ்க்கண்ட பத்திரிகைகளைப் படிக்கலாம்......

* பூவுலகு * காட்டுயிர் * Down to Earth  * Consumer Voice  * BIJA - the seed  * National Geography  * Geo  * Survey of the Environment - The Hindu.

      2011 - ம் ஆண்டை சர்வதேச வன ஆண்டாக அறிவித்து இருக்கிறது ஐ.நா. இதுவரையில் நீங்கள் புது வருடத்தில் எந்த ஓர் உறுதிமொழி எடுத்துக்கொள்ளாமல் இருந்தாலும் பரவாயில்லை. இந்த வருடத்தில் இருந்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். 

         காக்கையும் குருவியும் நம் சாதிதானே தோழா?